தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வழிப்பறி திருடன்!

வழிப்பறி திருடன்!

வழிப்பறி திருடன்!


PUBLISHED ON : ஏப் 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கைப்பந்து பயிற்சியை முடித்து திரும்பிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்; மிதிவண்டி கேரியரில் பந்தை வைத்திருந்தான் அமல்; கைப்பந்து வலை விமலிடம் இருந்தது.

நவம்பர் மாதம் என்பதால், சீக்கிரமே இருட்ட துவங்கியிருந்தது.

வழக்கமாக மிதிவண்டிகளை இணையாக ஓட்டி, சிரித்தபடி செல்வர். அன்று விரைவாக வீட்டை அடைந்தால் தான், வீட்டுப் பாடங்களை எழுதி முடிக்க முடியும். அதனால் வேகம் காட்டினர்.

திடீரென்று எதிரில் -

'திருடன்... என் சங்கிலியை பறித்து விட்டான்... பிடியுங்க...'

பரபரப்பாக பெண் குரல் கேட்டது.

மிதிவண்டியை நிறுத்தி நிதானமாக கவனித்தனர். பைக்கை பின் தொடர்ந்து ஓடிவந்தாள் பெண்.

அமல் நிமிர்ந்து பார்த்தான்; தலையை அசைத்தான் விமல்.

பாய்ந்து வந்த பைக் முன் சக்கரம் நோக்கி பந்தை உருட்டி விட்டான் அமல்; தடுமாறியபடி சாய்ந்தது பைக்.

விழுந்து தப்பி ஓட முயன்றனர் திருடர்கள். அதற்குள் லாவகமாக கைப்பந்து வலையை வீசினான் அமல். சரியாக மாட்டி வலைக்குள் திமிறினர்.

துரத்தி வந்தவள் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் பலரும் சூழ்ந்தனர்.

'உடம்புல தெம்பு இருக்கே... உழைத்து சாப்பிட வேண்டியது தானே...'

வலைக்குள் மாட்டியவர்களை சரமாரியாக தாக்க துவங்கினர்.

அதை தடுத்தபடி, ''வழிப்பறி குற்றத்துக்கு தக்க தண்டனை உண்டு... அதை நீதிமன்றம் கொடுக்கும். தாக்கும் உரிமை நமக்குக் கிடையாது... இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைப்போம்...'' என்றான் விமல்.

பலரும் நழுவத் துவங்கினர்.

''என் தங்கச் சங்கிலியை கொடுடா...'' என்று ஆவேசமாக சத்தமிட்டாள் அந்த பெண்.

''காவல் நிலையத்தில் இவர்களை ஒப்படைத்து, சங்கிலியை பெற்றுக் கொள்ளலாம் அம்மா...''

கனிவுடன் சொன்னான் விமல்.

அதை கேட்கவில்லை அந்த பெண்.

திருடனின் சட்டைப் பையிலிருந்த சங்கிலியை எடுக்க முயன்றாள்; அதனுடன் இன்னொரு சங்கிலியும் இருந்தது.

அப்போது அங்கு வந்தது போலீஸ் ஜீப் -

அதிலிருந்து இறங்கியபடி, ''என்ன கலாட்டா...'' என்றார், இன்ஸ்பெக்டர்.

நடந்த விபரத்தை கூறினான் அமல்.

''இவர்களை யார் பிடித்தது...''

விசாரித்தார் இன்ஸ்பெக்டர்.

'இதோ இந்த சிறுவர்கள் தான்...'

திரண்டிருந்த கூட்டம் சுட்டிக் காட்டியது.

பாராட்டிய இன்ஸ்பெக்டர், திருடர்களை ஜீப்பில் ஏற்றினார்.

தயங்கி நின்ற பெண், ''என் சங்கிலி தான் கிடைச்சாச்சே... போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் வேண்டாம் சார்...'' என்றாள்.

''புகார் கொடுத்து போகலாம்...''

பக்குவமாக அறிவுரைத்து அழைத்து சென்றார் இன்ஸ்பெக்டர்.

அமலும், விமலும் வீடு திரும்பினர்.

செல்லங்களே... தீமைகளுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட வேண்டும்.

முகிலை ராசபாண்டியன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us