தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வெல்லும் தீபாவளி!

வெல்லும் தீபாவளி!

வெல்லும் தீபாவளி!


PUBLISHED ON : நவ 14, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நரகாசுரனை வதம் செய்த நாளே, தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த அளவில் மட்டுமே அறிந்திருப்போம். உண்மையில், நரகாசுரன் யார்... தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதும், தீபம் ஏற்றுவதும், பட்டாசு வெடிப்பதும் ஏன்...

இது பற்றிய புராணத்தை தெரிந்து கொள்வோமா...

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரிய நகரம் கவுகாத்தி. புராணகாலத்தில், 'ப்ராக்ஜோதிஷபுரம்' என்று அழைத்தனர். இதற்கு, 'ஒளிமிக்க நகரம்' என்று பொருள். அசாம் என்றால், 'இணையற்றது' என்று பொருள்.

இவ்வூரைத் தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான் நரகாசுரன்.

வைகுண்டத்தில், ஜெயன், விஜயன் என்ற காவலர்கள் இருந்தனர். ஒருமுறை பணியில் செய்த தவறால், இரணியன், இரண்யாட்சன் என்ற பெயரில் பூலோகத்தில் பிறந்தனர். இதில் இரணியனை, நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார், திருமால்.

பிரம்மாவிடமிருந்த வேதச்சுவடிகளை எடுத்தபடி பாதாள லோகத்தில் மறைந்தான் இரண்யாட்சன். அந்த சுவடிகளை மீட்க, வராக அவதாரம் எடுத்து பூமியைத் தோண்டினார் திருமால்.

அப்போது, பூமாதேவிக்கு பிறந்தவன் தான் பவுமன். இந்த பெயருக்கு, 'பூமியின் பிள்ளை' என்று பொருள். பொறுமைக்கு இலக்கணமானவள் பூமாதேவி. திருமாலின் பிள்ளை என்ற மமதையுடன், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான் பவுமன்.

நடுநடுங்க வைத்ததால் அவனை, நரகாசுரன் என்றனர். இந்த பெயரை,

நரன் + அசுரன் என பிரிக்கலாம். நரன் என்றால் மனிதன். மனிதனாய் பிறந்து, அசுர குணங்கள் கொண்டிருந்ததால், இந்த பெயர் நிலைத்து விட்டது.

தாயைத் தவிர யாராலும், தன்னைக் கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான் நரகாசுரன்.

புராண காலத்தில், சத்தியபாமா என்ற பெயரில் பிறந்து, கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள் பூமாதேவி. அம்பு எய்வதிலும், தேரோட்டுவதிலும் பெரும் திறமைசாலி.

'உங்க மகன் என்ற மமதையில், நரகாசுரன் எங்களை எல்லாம் வதைக்கிறானே...' என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர் தேவர்கள். இதற்கு முடிவு கட்ட, நரகாசுரனின் இருப்பிடம் சென்றார் கிருஷ்ணர்.

மனிதப்பிறப்பெடுத்த பூமாதேவி, முந்தைய பிறவி ஞாபகத்தை மறந்து விட்டாள். எதிரில் நிற்கும் நகரகாசுரன், மகன் என அறியாமலேயே அம்பு எய்து கொன்றாள். அவன் இறப்பை அறிந்து, தீபம் ஏற்றி கொண்டாடினர் தேவர்கள்.

பின்னரே, அம்பு பட்டு இறந்தது தன் மகனே என தெரியவந்தது. துக்கம் தாங்க முடியாமல் தவித்தாள் பூமாதேவி.

மகன் கெட்டவனே என்றாலும், இறப்பன்று எல்லாரும் எண்ணெய் தேய்த்து, வெந்நீரில் குளித்து மகிழ வேண்டும். புத்தாடை அணிய வேண்டும். உலகெங்கும் தீபம் ஏற்ற வேண்டும். எண்ணெயில் வாசம் செய்யும் லட்சுமி கடாட்சம், அனைவருக்கும் கிடைக்க வேண்டும். எனவே, இந்த நாளை விழாவாக கொண்டாட வரம் பெற்றாள், பூமா.

அதன்படியே, வண்ணமயமாகக் கொண்டாடப்படுகிறது தீபாவளி.

தீபம் + ஆவளி என்பதே தீபாவளி. ஆவளி என்றால், 'வரிசை' என்று பொருள் தரும். வரிசையாக தீபம் ஏற்றி மகிழ்ந்திருப்பதை குறிப்பதற்கே இந்த சொல் பயன்படுகிறது.

குளிர் பருவ காலத்தில் தான் வருகிறது, தீபாவளி பண்டிகை. அதை கருத்தில் கொண்டு வெப்பம் வேண்டியே அதிகாலை வெந்நீர் குளியலும், தீபம் ஏற்றுதலும் நடக்கிறது. காலப்போக்கில் பட்டாசு வெடிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.

புத்தாடை அணிவதும், இனிப்பு சாப்பிடுவதும் மட்டுமல்ல தீபாவளி. அன்புடன் பழகி, பெற்றோர் அறிவுரைப்படி நற்பண்புகளுடன் வாழ உறுதி எடுக்க வேண்டும். இந்த உறுதியுடன் வண்ணமயமாகக் கொண்டாடுவோம். அது, நல்ல பலனை தரும்.

குழந்தைகளே... தவறு செய்பவர் யாராக இருந்தாலும் உரிய தண்டனை உண்டு என்பதை, உலகுக்கு உணர்த்தும் பண்டிகை தான், தீபாவளி. தவறுகளை தவிர்த்து வாழப் பழகுவோம்.

- தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us