PUBLISHED ON : நவ 13, 2021

மதுரை, ஈஸ்ட்கேட் செயின்ட் மேரிஸ் கான்வென்ட் நடுநிலைப் பள்ளியில், 1954ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு!
வீட்டுக் கணக்கு போட்டு வரச் சொன்னார் கணித ஆசிரியர். முயற்சி செய்து பெரும்பாலானவற்றுக்கு விடை கண்டுபிடித்தேன்; கடைசி கேள்விக்கு விடை காண இயலவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்ய யாரும் இல்லை.
உடனே, நோட்டுடன் வீதியில் வீடுகளை கவனித்தபடி நடந்தேன். ஒரு வாசலில், வழக்கறிஞர் பெயருடன் பதாகை இருந்தது. கதவை தட்டினேன்; வெளியே வந்தவர், 'யாரு பாப்பா நீ... என்ன வேணும்...' என்றார். தயங்கியபடி, 'அண்ணா... இந்த கணக்கு புரியல... கொஞ்சம் சொல்லி தர்றீங்களா...' என்று கேட்டேன்.
வெள்ளைத் தாளில் எழுதி, முறைப்படி போடக் கற்றுக் கொடுத்தார். நன்றி கூறி விடைபெற்றேன். மறுநாள் ஆசிரியரிடம் காட்டினேன். நோட்டில், 'நன்று' என எழுதி, 'வீட்டுப்பாடத்தில் யாரும், பத்துக்கு பத்து மதிப்பெண் வாங்கல; இவள் மட்டுமே வாங்கியிருக்கிறாள்; கைத்தட்டி ஊக்கப்படுத்துங்க...' என்று உற்சாகப்படுத்தினார்.
வகுப்பில், 'கணக்கில் புலி' என பாராட்டு பெற்றேன். பள்ளி படிப்பு முடியும் வரை அந்த பட்டத்தை தக்க வைத்துக்கொண்டேன். என் வயது, 80; ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பள்ளி நாளில் நடந்த அந்த நிகழ்வை இன்றும் மனதில் கொண்டுள்ளேன்.
- குருவம்மாள், கோவை.
