PUBLISHED ON : நவ 13, 2021

சென்னை, புரசைவாக்கம் நடுநிலைப் பள்ளியில், 1963ல், 7ம் வகுப்பு படித்தபோது நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன். குடும்ப சூழ்நிலையால், மீனம்பாக்கம் பகுதிக்கு, குடிபெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, மாற்றுச் சான்றிதழை கோரி விண்ணப்பித்தோம்.
கண்டிப்புடன், 'வகுப்பாசிரியை சரோஜினி ஒப்புக் கொண்டால், மாற்றுச் சான்றிதழ் தருகிறேன்...' என கூறி விட்டார் தலைமை ஆசிரியர். அலைந்து தேடி, ஆசிரியை வீட்டைக் கண்டுப்பிடித்தேன். உடன் என் அண்ணனும் வந்திருந்தார். விபரத்தை எடுத்துரைத்தோம்.
நிலைமையைப் புரிந்து, 'நல்ல மதிப்பெண் வாங்கிவருகிறான்; இந்த பள்ளியிலே படிக்கட்டுமே... தினமும் மீனம்பாக்கத்திலிருந்து, எழும்பூர் வரை வந்து செல்ல ரயிலில் சீசன் பயணச்சீட்டு வாங்கித் தருகிறேன்...' என அறிவுரைத்தார்.
என் அண்ணன் பிடிவாதமாக, 'தம்பியை, தனியா இவ்வளவு துாரம் அனுப்பி வைக்க முடியாது...' என்றார். உடனே பள்ளிக்கு வந்து, மாற்றுச் சான்றிதழை பெற்று தந்து படிப்பு தொடர உதவினார். தற்போது, என் வயது, 70; அரசின் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பாசமிக்க அந்த ஆசிரியை இன்றும் நினைவில் தங்கியுள்ளார்.
- எழில் சோம.பொன்னுசாமி, சென்னை.
