PUBLISHED ON : அக் 25, 2013

சவ அடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்து உற்றார், உறவினர் துயரத்தில் மூழ்கி இருக்கும் போது, இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்ச்சி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதிலிருந்து பிரபலமாகியது ஒரு வைத்திய முறை. மருந்துகள் ஏதுமில்லாமல் வெறும் ஊசிகளை மட்டும் உடலின் குறிப்பிட்ட பகுதியில் குத்துவதினால், நோய்களை குணமாக்கும் முறைதான் அக்குபஞ்சர் வைத்திய முறை.
பண்டைய சீனாவில், 'கு' என்ற இளவரசன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அழுது புலம்பினர். இளவரசன் சவச் சடங்குகளுக்குத் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறலாயின. இளவரசனின் மரணச் செய்தியை, நாடோடியாக அலையும் மருத்துவரான பியன் சூ என்னும் மருத்துவர் கேள்விப்பட்டார். உடனே அரண்மனைக்கு வந்தார். இறந்த உடலைக் காண விரும்பினார். சூ உடலைச் சோதித்தார். அரசாங்க மருத்துவர் கவனிக்காத இரு விஷயங்களை அவர் அறிந்தார். சுவாசம் மிக, மிக லேசாக இருந்தது.
தொண்டைகளின் உட்புறத்தில் சூடுமிருந்தது. இளவரசர் இறக்கவில்லை. மயக்கத்தில் (கோமா) இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட சூ, தன் உதவியாளன் சூ யாங்கிடம் கையை நீட்டினார். இம்மாதிரி அவசர நிலைக்குப் பயன்படுத்துவதற்காக சூ யாங் எப்போதுமே ஊசிகள் வைத்திருப்பார். பியன் சூ குறிப்பிடும் இடங்களில், இளவரசன் கு வின் உடலில் ஒவ்வொரு ஊசியாகச் செலுத்தினார் சூ யாங். சற்று நேரத்தில் இளவரசனின் உடல் அசைந்தது. பிறகு கண்களையும் திறந்தான். அப்புறம் எழுந்தும் உட்கார்ந்தான். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட இளவரசன் பிழைத்து, எழுந்து உட்கார்ந்ததும் ஈமச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. ஒரு மாதத்தில் எழுந்து நடமாடலானான் இளவரசன்!
இளவரசன் உயிர் பிழைத்திருப்பதைக் கேள்விப்பட்டதும், மரணத்திலிருந்து மீட்ட பியன் சூவை மந்திரவாதியாக மதித்தனர். அந்த நாடோடி வைத்தியன், மக்களிடம் எவ்வளவோ சொன்னான்.
'நான் மந்திரவாதியல்ல, என் சக்தியினால் இளவரசன் உயிர் பிழைக்கவில்லை. இளவரசர் இறக்கவே இல்லை. நினைவிழந்திருந்த அவரை நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் நிலவி வரும் ஒரு வித வைத்திய முறையினால், அவருக்கு நினைவு திரும்பச் செய்தேன்' என்று கூறினார்.
ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. காரணம், 'அக்கு பஞ்சர்' என்ற சீனாவின் மிகப் பழமையான வைத்திய முறை அப்போது அங்கு மக்களால் மறக்கப்பட்டிருந்தது, புழக்கத்தில் இல்லை.
சீனாவில் முதன் முதலில், அக்குபஞ்சர் என்னும் இவ்வைத்திய முறை எப்படித் தோன்றியது என்பதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சமயம் வேடன் ஒருவனுடைய மூக்கின் மீது, தற்செயலாக ஒரு அம்பு பாய்ந்தது. அவனுடைய தீராத தலைவலி மூக்கின் மீது குத்திய அம்புக் காயத்தினால் மாயமாக மறைந்தது. மூக்கிலுள்ள நரம்பு ரத்தக் குழாய்களுக்கும், தலை நோவுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்ற எண்ணத்தின் மீது ஆராயப்பட்டுக் கண்டு பிடிக்கப்பட்டதே, உடலின் பல்வேறு பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் ஊசியினால் துளை போட்டு நோயைக் குணப்படுத்தும் முறை.
கற்கால மனிதனிடையே இந்த அக்குபஞ்சர் வைத்திய முறை தோன்றி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் தோலைத் துளைத்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அக்குபஞ்சர் என்னும் இம்முறை சீனர்களோடு தொடர்புடையதாக கருதப்பட்டது. எஸ்கிமோக்கள், புராதன எகிப்தியர், ஆப்பிரிக்காவின் பண்டு என்னும் இனத்தவர்களிடமும் சில வித நோய்களுக்கு, உடலின் சில பகுதிகளின் தோலிலே வெட்டு அல்லது துளை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரேசில் நாட்டின் பூர்வ குடிகள் 'புளோபைப்' என்னும் குழாய் மூலம் வாயினால் ஊதி, அம்புகளைச் செலுத்தும் முறையில் நோயாளியின் உடலின் சில முக்கியப் பகுதிகளில், அக்குபஞ்சர் போலவே அம்புகளைச் செலுத்தி நோயை குணப்படுத்துகின்றனர்.
-1 தொடரும்.