
அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், 'இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும்.
அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் கீழே தாழ்த்தி மரியாதை செய்தான். அவள் உள்ளே சென்றதும் துப்பாக்கியை மேலே நிமிர்த்திப் பிடித்தான். அவளுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
சிறிது நேரம் சென்றது. திரும்பவும் அந்தச் சிறுமி வெளியே வந்தாள். அவள் வரும் போது சிப்பாய் முன் போலவே, மரியாதை செலுத்தினான். திரும்பவும் அவள் உள்ளே சென்றாள். அப்போது அவன் மரியாதை செலுத்தினான். திரும்பத் திரும்ப அவள் உள்ளே போவதும், வெளியே வருவதுமாக இருந்தாள். சிப்பாயும் தன் கடமையைச் சளைக்காமல் செய்தான்.
கடைசியாக அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது. அந்தச் சிப்பாயைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே, ''அடடே, நான் வைத்திருக்கிறேனே... சாவி கொடுத்தால் வேடிக்கை செய்யும் பொம்மை, அதைப் போலல்லவா இதுவும் செய்கிறது!'' என்று வியப்போடு கூறினாள்.
இதைக் கேட்டதும், அந்தச் சிப்பாய்க்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. ஆனாலும், வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
அந்தப் பெண்ணின் பதினோராவது வயதில் தான் அவளுடைய அப்பாவுக்கு முடி சூட்டு விழா நடந்தது. உலகத்தின் பல பாகங்களிலிருந்தும் அவருக்குப் பரிசுகள் வந்து குவிந்து கொண்டிருந்தன. அப்போது அந்தப் பெண்ணும் தன் கையால் அப்பாவுக்கு ஒரு பரிசளிக்க வேண்டுமென்று நினைத்தாள். உடனே கடை வீதிக்குச் சென்றாள். மிகவும் விலையுயர்ந்த மிகவும் அபூர்வமான ஒரு சாமானை வாங்கி வந்தாள் என்றுதானே நினைக்கிறீர்கள்? இல்லை; ஓரணா விலையில் ஒரு நோட்டுப் புத்தகத்தை வாங்கி வந்தாள். அதில் முடி சூட்டு விழாவைப் பற்றித் தனக்குத் தெரிந்ததை அழகாக எழுதினாள். மங்கலான சிவப்பு ரிப்பனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் உள்ள தாள்களைச் சேர்த்துக் கட்டினாள். அதன்மேலே, 'அப்பாவின் முடிசூட்டு விழா ஞாபகார்த்தமாக நான் அளித்தது; நானே தயாரித்தது' என்று எழுதிக் கொடுத்தாள்.
அவளுடைய பதினோராவது வயதில் அவளுடைய அப்பாவுக்கு முடிசூட்டுவிழா நடந்தது. ஆனால், அவளுடைய இருபத் தேழாவது வயதில், அவளுக்கே முடிசூட்டு விழா நடக்கும் என்பது அப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமா? நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டாள்.
இவள்தான் இருபத்தேழாவது வயதில் முடிசூட்டிய இங்கிலாந்து அரசி இரண்டாவது எலிசபெத் ராணி.