
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம், அரசு உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 6ம் வகுப்பு படித்த போது நடந்த சம்பவம்!
மேல் சட்டை அணிய பொருளாதார வசதி இல்லாத காலம் அது. பெற்றோரிடம் அழுது, அடம் பிடித்து, மேல் சட்டை வாங்கி அணிந்து, உத்வேகத்துடன் படித்துக் கொண்டிருந்தேன்.
பள்ளி ஆண்டு விழாவுக்கு, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அறிவித்தனர்.
வகுப்பாசிரியர் பக்கிரிசாமி வற்புறுத்தலால் அதில் சேர்ந்தேன். கல்வி பற்றி அவர் எழுதி கொடுத்ததை, மூன்றே நாளில் மனப்பாடம் செய்து, தயார் நிலையில் இருந்தேன்.
போட்டியன்று அத்தனையும் மறந்துவிட்டது. வேறு வழியின்றி தப்பும் தவறுமாக அடித்து விட்டேன். அக்கா என்பதற்கு, 'அண்ணி' என்றேன். மாணவர்கள் கரகோஷம் எழுப்பினர்; மாணவியர் தலை குனிந்தனர்.
ஆசிரியர் முறைத்தபோது, நிலைமையை புரிந்து, 'மன்னித்து விடுங்கள்...' என சமாளித்து திணறியபடி, வகுப்பறைக்கு ஓடினேன். ஒருவித பதற்றத்துடன் அனைவரும் திகைத்து நின்றனர். ஆசிரியர் எழுதி தந்த சீட்டை எடுத்து வந்து, மேடையில் வாசித்தேன்; மீண்டும் கைதட்டல் பெற்றேன்.
எனக்கு, 65 வயதாகிறது. பள்ளியில் எதிர்மறையாக பேசி, ஏகப்பட்ட கைத்தட்டல் பெற்ற அந்த நாள், மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
- கே.ஜெயபாலன், கடலுார்.
தொடர்புக்கு: 89037 47991

