தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அலாவுதீனும், அற்புதவிளக்கும்! (6)

அலாவுதீனும், அற்புதவிளக்கும்! (6)

அலாவுதீனும், அற்புதவிளக்கும்! (6)


PUBLISHED ON : மே 31, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மாயக்கண்ணாடி மூலம், அலாவுதீன் நிலையை அறிந்து, அற்புத விளக்கை அபகரிக்க, வியாபாரியைப் போல வேடமிட்டு, தெருத் தெருவாக சென்றான் மந்திரவாதி.

இனி -

ஊர் மக்கள், அவனை பைத்தியக்காரன் என்று நினைத்தனர்.

விளக்குகள் அடங்கிய மூட்டையுடன், அலாவுதீனின் மாளிகைக்கு வெளியே நின்ற மந்திரவாதி, 'விளக்கு வாங்கலயோ விளக்கு... பழைய விளக்குக்கு மாற்றாக புதிய விளக்கு தரப்படும்...' என்று கூவினான்.

மந்திரவாதியின் குரல், அரசகுமாரியின் காதில் விழுந்தது.

அப்போது, வேட்டைக்கு சென்றிருந்தான் அலாவுதீன். அரசகுமாரி மட்டும் மாளிகையில் இருந்தாள்.

'யார் இவன்... பைத்தியக்காரன்; பழைய விளக்குக்கு மாற்றாக புதிய விளக்கு தர முடியுமா' என்று ஆச்சரியப்பட்டாள்.

உடனே, பணிப்பெண் ஒருத்தியை அழைத்தாள். அலாவுதீன் பத்திரமாக பெட்டியில் வைத்திருந்த பழைய விளக்கை கொடுத்து, 'இந்த பழைய விளக்கிற்கு மாற்றாக, ஒரு புதிய விளக்கு வாங்கி வா...' என்றாள்.

அந்த விளக்கைப் பார்த்ததும், மந்திரவாதி பூரிப்பு அடைந்தான். அற்புத விளக்கு இதுதான் என, மகிழ்ச்சியுடன், 'மூட்டையில் உள்ள எந்த விளக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்...' என்று கூறினான்.

பணிப்பெண் கொடுத்த விளக்கை பத்திரப்படுத்தினான்.

சற்று துாரம் சென்ற மந்திரவாதி, அந்த விளக்கை எடுத்து தேய்த்தான். உடனே, ஒரு பெரிய புகை மண்டலம் தோன்றியது. அதன் நடுவே பூதம் பணிவுடன் கைகளைக் கட்டி, 'என்ன செய்ய வேண்டும் கட்டளையிடுங்கள்...' என்றது.

'இந்த மாளிகையை, அரச குமாரியுடன் பெயர்த்தெடுத்து, ஆப்பிரிக்காவில் தனியாக ஒரு இடத்தில் வை...' என்றான்.

மறுநிமிடம், அரசகுமாரியுடன் மாளிகை, மாயமானது.

மறுநாள் -

அரண்மனையிலிருந்து சுல்தான் பார்த்தார்; அலாவுதீனின் மாளிகையைக் காணவில்லை. அந்த இடம், வெட்ட வெளியாக தெரிந்தது. பதற்றமடைந்த சுல்தான், 'இது என்ன மாயாஜாலமா... மந்திர வித்தையா...' என்று கத்தினார்.

உடனே, அலாவுதீனை விலங்கிட்டு இழுத்து வர ஆணையிட்டார். வேட்டையாடி களைப்புடன் நகருக்குள் வந்த அலாவுதீனை, விலங்கிட்டு அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர், காவலர்கள்.

இதைக் கண்ட பொதுமக்கள், அரண்மனையை முற்றுகையிட்டனர்.

அலாவுதீனை உடனே கொல்ல உத்தரவிட்டார், சுல்தான். இதைக் கேட்ட பொதுமக்கள் வெகுண்டெழுந்து, கிளர்ச்சி செய்தனர்.

'தீர விசாரிக்காமல் மரண தண்டனை தரலாகாது...' என்று கூச்சலிட்டனர்.

எதிர்ப்பு வலுத்ததால் பணிந்தார், சுல்தான்.

அப்போது, 'நான் என்ன குற்றம் செய்தேன்...' என்றான் அலாவுதீன்.

'இங்கு வா... காட்டுகிறேன்...' என்று கோபமான சுல்தான், மாளிகை இருந்த இடத்தைக் காட்டி, 'அந்த மாளிகை மறைந்து போனதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை; என் மகள் எங்கே...' என்று கேட்டார்.

அந்த வெட்ட வெளியைக் கண்டு, அலாவுதீனும் திகைத்து விட்டான்.

பின், மனதை திடப்படுத்தி, 'ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள்; அதற்குள் உங்கள் மகளை அழைத்து வரா விட்டால், மரண தண்டனை அளியுங்கள்...' என்றான். சுல்தான் அவனை விடுதலை செய்தார்.

அலாவுதீன் பைத்தியக்காரனை போல், 'என் மாளிகையைக் கண்டீரா... அது எங்கே இருக்கிறது...' என்று கேட்டபடி அலைந்தான்; எல்லாரும் நகைத்தனர்.

மனம் வெறுத்த அலாவுதீன், ஒரு நதியில் மூழ்கி இறக்க திட்டமிட்டான். நதிக்கரையில் இருகைகளையும் கூப்பி, வணக்கம் செலுத்தினான். அப்போது, அவன் அணிந்திருந்த மோதிரம், கண்களுக்கு தென்பட்டது.

அந்த மேதிரத்தை தேய்த்தான். மறுகணம் அவன் முன் பூதம் தோன்றியது, 'எஜமானே... நான் என்ன செய்ய வேண்டும்...' என்று, கேட்டது.

'என் மாளிகையையும், அரச குமாரியையும் வரவழைத்துக் கொடு...' என்றான்.

'அது என்னால் முடியாது; அந்த விளக்கின் அடிமையாகிய பூதத்திற்குத் தான், திரும்ப அழைத்து வரும் சக்தி இருக்கிறது...' என்றது பூதம்.

'அப்படியானால், அந்த மாளிகை இருக்குமிடத்தில், அரச குமாரியின் ஜன்னல் அருகே, என்னை அழைத்துச் செல்...' என்றான், அலாவுதீன்.

- தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us