PUBLISHED ON : ஜூன் 22, 2012

ஏதென்ஸ், ஸ்பார்ட்டா போன்ற முக்கிய கிரேக்க நகரங்களுக்கு வடக்கே அமைந்த நாடு மாசிடோனியா.
மேற்கில் மலை சார்ந்த மேட்டுப் பகுதிகளையும், கிழக்கில் வளமான பள்ளத்தாக்கையும் கொண்ட பிரதேசம். கோடையில் கொடிய வெப்பம், குளிர் காலத்தில் கடுங்குளிர். கோணல்மானலான இரண்டு பகுதிகளையும், ஒருங்கிணைந்து ஒரு நாடாக உருகொடுத்தவர் மன்னர் பிலிப். மாவீரன் அலெக்ஸாண்டரின் தந்தை.
கி.மு.359ல் மாசிடோனிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார் பிலிப்.
மாசிடோனியர்கள் கிரேக்க மொழிதான் பேசினர். ஆனால், பேச்சில் அயல்மொழிச் சொற்களின் கலப்பு அதிகம். இந்த உப்புமா மொழியைப் பேசிய காரணத்தினாலேயே மாசிடோனியர்களை மற்ற கிரேக்கர்கள் ரொம்ப இளக்காரமாகவே பார்த்தனர்; நடத்தினர். மாசிடோனியர்களைப் பார்த்தாலே மற்ற கிரேக்கர்களுக்கு ஆகாது.
மாசிடோனியாவின் தெற்கே மும்முரமான போர். எதிரிகளுடன் உக்கிரமாக போரிட்டுக் கொண்டிருந்தார் மன்னர் இரண்டாம் பிலிப். மாசிடோனிய படையினர் எதிரிகளை துவம்சம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது மூர்க்கத்தனமான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் எதிரியின் பிடியில் இருந்த முக்கிய நகரம் பிலிப்பின் வசம் வீழ்ந்தது.
''வெற்றி! வெற்றி!''
மாசிடோனியப் படையினர் சந்தோஷ ஆரவாரம் செய்து கொண்டிருந்த போதுதான் அந்த தகவல் வந்தது.
இதுநாள்வரை பிலிப்பின் காதுக்குள் குடைந்த வண்டுபோல ஓயாத இம்சை கொடுத்து வந்த மாசிடோனியின் பயங்கர எதிரியான இல்லீரியர்கள் வீழ்ந்தனர்.
பார்மீனியன் என்ற தன் நம்பிக்கைக்குரிய தளபதி இல்லீரியர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விட்டான். 'ஆஹா! எப்படிப்பட்ட நாள் இன்று' பிலிப்புக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
''அரசே! இதைவிட இனிப்பான ஒரு செய்தி'' என்று தகவல் கொண்டு வந்தவன் சொன்னான்.
பிலிப்புக்கு புரியவில்லை.
''ஆம்! தங்களது பந்தயக் குதிரையொன்று ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளது!'' என்று வந்தவன் சொன்னான்.
பிலிப்புக்கு காதுமடல்கள் சிலிர்த்துவிட்டன.
''நல்ல செய்தி... இவனுக்கு பரிசு கொடுத்து அனுப்புங்கள்!'' என்றார் பிலிப்.
மன்னர் பிலிப்பை பார்த்து, ''அரசே! இதைவிட சந்தோஷமான செய்தி இருக்கிறது!'' என்றான்.
''அப்படியென்ன... நல்ல செய்தி?'' பொறுக்க முடியாத பிலிப் உட்கார்ந்த இடத்தில் இருந்து எழுந்தேவிட்டார்.
''உங்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்திருக்கிறது!''
தகவல் கொண்டுவந்தவனை பிலிப் தழுவிக் கொள்ளாத குறைதான்.
பிறந்தநாளிலேயே அப்பனுக்கு மூன்று வெற்றிப் பரிசுகளைக் கொடுத்த அந்தக் குழந்தை வேறு யாருமல்ல... அலெக்ஸாண்டர்தான். பிற்காலத்தில் பெரும்பான்மை நாடுகளை வென்றெடுத்து, மாவீரன் என உலகம் போற்றிய அலெக்ஸாண்டர்.
கி.மு.357ல் மொலாஸ்ஸியாவைச் சேர்ந்த ஒலம்பியஸை மணந்தார் பிலிப். பிலிப்பின் நான்காவது மனைவி ஒலிம்பியஸ். இவர் களுக்கு பிறந்தவர்தான் அலெக்ஸாண்டர்.
மகன் பிறப்பதற்கு முன் மூன்று முறையும், பிறந்த பின் மூன்று முறையும் மணம் செய்து கொண்டார் பிலிப். ஆறு திருமணங்கள்! கேட்கவா வேண்டும். ஏகப்பட்ட பிள்ளைகள்; ஆனாலும் பிலிப்புக்கு அலெக்ஸாண்டர் தான் ஸ்பெஷல்.
அலெக்ஸாண்டர் என்கிற பெயர் கிரேக்கத்தில் அதிகம் வழக்கில் உள்ள பெயர். குடிமக்களிடையே அல்ல... அரச குடும்பங்களில் பிலிப்பும், ஒலிம்பியஸும் அந்தப் பெயரை, தங்கள் மகனுக்குச் சூட்ட மற்றொரு காரணமும் இருந்தது. மகாகவி ஹோமர் படைத்த இலியாத் காவியத்தில் பாரிஸ் என்றொரு கதாபாத்திரம். அதில் சொல்லப்பட்ட ட்ராய் யுத்தத்தில் எதிரிகளை அடித்து துவைத்த சூரப்புலியான வீரர் பாரிஸின் மற்றொரு பெயர் அலெக்ஸாண்டர். எனவே, அந்தப் பெயரைத் தங்கள் மகனுக்கு அவர்கள் சூட்டி மகிழ்ந்தனர்.
பண்டைய கிரேக்கத்தின் புகழ் பெற்ற வீரமரபில் பிறந்த பெருமிதம் பிலிப்புக்கும், ஒலிம்பியஸுக்கும் உண்டு. கிரேக்க கடவுள் ஜீயஸ் மகன் ஹெராக்கிள்ஸ்; இவருடைய ரோமானியப் பெயர் ஹெர்குலிஸ். அவர் வலிமையும், வீரமும் மிக்கவர்.
'நான் ஹெர்குலிஸ் பரம்பரையில் வந்தவனாக்கும்' என்று சமயம் கிடைக்கும்போதெல்லாம் மார்தட்டிக் கொள்வார் பிலிப். ஹெர்குலிஸைப் போலவே அலெக்ஸாண்டரும் உறுதியான உடல், வீரம் உடையவராகவே இருந்தார். ட்ராய் யுத்தத்தில் முக்கியப் பங்கு வகித்த மற்றொரு வீரர் அக்கிலஸ். தான் அக்கிலஸ் பரம்பரையில் வந்தவள் என்று பெருமைப்பட்டுக் கொள்வாள் ஒலிம்பியஸ். அதற்கேற்றாற்போலவே அலெக்ஸாண்டர் பிறந்ததை கிரேக்கர்களும், ஒரு சாதாரண நிகழ்வாக கருதவில்லை. தன்னை தேவ மரபினனாகவும், தன்னுடைய புகழ் முன்பே உறுதி செய்யப்பட்டது என்றும் அலெக்ஸாண்டர் எப்போதும் கருதி வந்தார்.
பிலிப்பின் மூத்த சகோதரன் மூன்றாம் பெர்டிக்காஸ் கி.மு.359ல் இறந்ததும், அவரது வாரிசு அமின்டாஸ் என்ற பெயரில் தானே ஆளத்தொடங்கினான் பிலிப்.
பெர்டிக்காஸின் மகனான அமின்டாஸ் சின்னப் பையனாக இருக்கவும், அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டான் பிலிப். இத்தனைக்கும் அந்த இளவரசன் வயதுக்கு வரும்வரை, தான் அரசனாகும் எண்ணம் பிலிப்புக்கு இல்லவே இல்லை.
பல போர்களில் வெற்றிமேல் வெற்றி. மாசிடோனியாவின் எல்லை விரிந்து கொண்டே சென்ற போதுதான், அரியணை ஆசை பிலிப் மனசுக்குள் மெல்ல மெல்ல எட்டிபார்த்து கிளர்ச்சி ஊட்டியது.
பதவி ஆசை வந்தாச்சு. எதிர்கேள்வி கேட்க ஆள் இல்லை. அப்புறமென்ன... ஒரு சுபயோக சுபதினத்தில் நாட்டின் அரசனாகத் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டான் பிலிப்.
பண்டைய கிரேக்கம் ஒரு கட்டுக்குள் இருந்த பிரதேசம் அல்ல. அங்கங்கு குட்டிக்குட்டி நாடுகள். குடியரசுகள் சில, முடியரசுகள் பல. இவற்றில் ஏதென்ஸ், ஸ்பார்ட்டா, தீப்ஸ் ஆகிய குடியரசுகள் கொஞ்சம் கட்டுக்கோப்பானவை; பலம் வாய்ந்தவை.
பிலிப்பின் ஆட்சிக்காலத்தில் மாசிடோனியா, கிரேக்க நாடுகளில் மிகப் பலம் வாய்ந்த நாடாக விளங்கியது. பிலிப்பின் நாடு பிடிக்கும் கொள்கை கொஞ்சம் வித்தியாசமானது. முடிந்தால் போரிட்டு வெல்வது. முடியாவிட்டால், எதிரி நாட்டு இளவரசியை திருமணம் செய்து கொண்டு, அந்நாட்டை வரதட்சணையாக வாங்கிக் கொள்வது அல்லது பகையை விரட்டி நட்புறவு வைத்துக் கொள்வது. இப்படி பிலிப் செய்த திருமணங்கள் ஆறு! பிலிப்பை பொறுத்தவரை மாசிடோனியாவுக்கோ அல்லது அவனுக்கோ எதிரிநாடுகள் எந்த வகையிலாவது குறைந்தால் போதும்.
அப்பா எவ்வழியோ... மகனும் அவ்வழியே! அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாகத்தான் பின்னாலில் அலெக்ஸாண்டரும் விளங்கினான். நாடுபிடிக்கும் போட்டியில் பிலிப்பைப் போலவே பல திருமணங்கள் செய்துக்கொண்டு, தன் அதிகாரத்தை பரவலாக்கினான்.
மடிசிடோனியாவுக்கு தென்கிழக்கே உள்ள எபிரேஸ் நாட்டு இளவரசி ஒலிம்பியஸ். ஏற்கனேவே மூன்று திருமணங்கள் முடித்திருந்த பிலிப், எபிரோஸ் மன்னருக்கு நட்பு தாது அனுப்பி மனைவியாக்கப்பட்டவள் ஒலிம்பியஸ்.
கல்யாணப் புதுசில் ஒலிம்பியஸ் மீது, ஆசையைக் கொட்டி தீர்த்த பிலிப்புக்கு சீக்கிரமே அவள் மீது சலிப்புத் தட்டிப்போனது. காரணம், ஒலிம்பியஸின் குணம். ஒலிம்பியஸ் சரியான சண்டைக் கோழி... கோபக்காரி. பிலிப் மட்டும் சும்மாவா... ஒரே மாதிரியான இரண்டு துருவங்கள் எப்படி ஒத்துப்போகும்? குடும்பத்தில் எப்போது புயல் வீசும், எப்போது மழை கொட்டும் என்று சொல்ல முடியாது. மகன் அலெக்ஸாண்டர் ஒரு சூறாவளியில் சிக்கிக் கொண்ட உணர்வோடு தான் இருந்தான்.
ஒலிம்பியஸ் யாரிடமும் மரியாதை காட்டமாட்டாள். அதே சமயம் மற்றவர்கள் தன்னிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாள்.
தன் மகனின் வாழ்க்கையை தான் விரும்பியபடி மாற்றியமைக்க முயன்றாள். பிலிப் மன்னன் தன்னை ஒதுக்கிவிட்டு, அடுத்த திருமணம் செய்து கொண்ட போது, அலெக்ஸாண்டரைத் தன் பிடியில் வைத்துக் கொள்ள விரும்பினாள்.
பிலிப்புக்கு இதில் விருப்பமில்லை. ஆனால், இந்த விஷயத்தில் அலெக்ஸாண்டர் அம்மா பிள்ளையானான்.
பிலிப்புக்கு மூத்த மனைவியின் மூலமும், ஒரு மகன் இருந்தான். ஆனால், தந்தை இறந்தால் அலெக்ஸாண்டர் தான் அரசன் என்பது தீர்மானமாயிருந்தது.
ஆனால், அலெக்ஸாண்டர் அரசனாவது அத்தனை சுலபமாகத் தெரியவில்லை. மன்னன் பிலிப் ஒலிம்பியஸை பட்டத் தரசியாக அறிவித்திருந்தாலும், அவனுடைய காதலிகள் பட்டியில் ரொம்பவே நீளம்.
தளபதி அட்லஸ், தன் தங்கை மகள் கிளியோபாட்ராவை கூட்டி வந்து அரண்மனையில் தங்க வைத்திருந்தான். அவளை பிலிப்புக்கு கட்டி வைத்து, நாட்டின் வருங்கால ராணியாக்கவும் திட்டமிட்டான். அவன் நினைத்தது நடந்தது. ஒலிம்பியஸ் முன்னாள் ராணி ஆனாள்; அலெக்ஸாண்டர் முன்னாள் இளவரசனானான்.
ஒலிம்பியஸ் அவளுடைய தாய் நாடான எபிரேசுக்கு அனுப்பப்பட்டாள். மாசிடோனிய அரசுரிமை கிளியோபாட்ராவின் வாரிசுக்கு என்றிருந்த நிலையில், மன்னர் பிலிப் திடீரென்று கொல்லப்பட்டார்.
1-தொடரும்.
