தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மன்னிப்பு!

மன்னிப்பு!

மன்னிப்பு!


PUBLISHED ON : ஜூன் 22, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 22, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு ஊரில் மூன்று இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் நன்றாக படித்தவர்கள். ஆனால், என்ன காரணத்தினாலோ எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களுக்கு தங்கள் சொந்த ஊரில் வேலை கிடைக்கவில்லை.

கடைசியில், அந்த மூன்று இளைஞர்களும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தனர். வெளியூரில் சென்று வேலை தேடுவது என்பதுதான் அது. அவர்கள் தீர்மானித்தபடியே, மறுநாள் வெளியூரை நோக்கிப் பயணம் செய்தனர்.

அவர்கள் மூவருமே நல்ல புத்திசாலிகள். ஆதலால் சுவாரஸ்யமான பல விஷயங்களை குறித்துப் பேசிக் கொண்டே சென்றனர். ஏதோ விஷயத்தைப் பற்றி அவர்கள் பேசும் போது, அவர்களுக்குள் அபிப்ராய பேதம் எழுந்தது.

மூவரும் மூன்று விதமான கருத்துகளைக் கூறித் தாங்கள் கூறியதே சரி என்று அடம்பிடித்தனர். அதன் விளைவாக, வார்த்தைகள் தடித்தன. அதற்கு மேலும் பேசினால், அது அடிதடியாக மாறி விடலாம் என்று ஒவ்வொருவரும் நினைக்கவே, அத்துடன் அந்தப் பிரச்னையைப் பற்றிப் பேசாமல், வாய் மூடிக் கொண்டனர்.

மனத்தாங்கலுடன் மவுனமாக அவர்கள் தங்கள் வழிப் பயணத்தைத் துவக்கினர். அவர்கள் நீண்ட தூரம் நடந்ததும் வழியில், ஓர் காட்டாறு குறுக்கிட்டது. இதை எப்படிக் கடந்து செல்வது என்று தெரியாமல் அவர்கள் திகைத்து நின்றனர்.

அப்போது, முதலாமவன் சற்று வாய் விட்டுத் தனக்குத் தானே சொல்லிக் கொள்பவன் போலச் சொன்னான்.

'இந்த ஆற்றில் ஓர் தேவதை இருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தேவதையை வேண்டிக் கொண்டால் ஆற்றைக் கடந்து விடலாம். ஆகவே, ஆற்று தேவதையே! உன்னை நீந்திக் கடப்பதற்கு ஏற்ற வலிமையை எனக்கு கொடுக்க வேண்டும்' என்று வேண்டினான்.

உடனே அவன் கைகள் தடித்தன. அவன் புஜங்கள் உருண்டு திரண்டன. அந்த ஆற்றை நீந்தி கடப்பதற்கு ஏற்ற வலிமையை அவன் கைகள் அடைந்ததை அவன் உணர்ந்தான்.

அடுத்த நொடி, அந்தப் பெரிய ஆற்றின் நீரில் குதித்து நீந்தத் துவங்கினான். ஆற்று வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டு மறுகரையை அடைந்தான். அதை இக்கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அவன் நண்பர்கள்.

இரண்டாமவன், ஆற்றை எப்படிக் கடப்பது என்று யோசித்தான்.

அவன் முதலாமவன் கேட்ட வார்த்தையை கேட்க விரும்ப வில்லை. ஆகவே, ஆற்றுத் தேவதையை வணங்கி, 'ஆற்றுத் தேவதையே, உன்னைக் கடந்து செல்லும்படியான வலிமையுடன், எனக்கு நல்ல அறிவையும் கொடு' என்று வேண்டினான்.

மறுகணம், அவன் கண் எதிரே அவன் ஒரே ஒருவன் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக் கூடிய ஒரு படகு தோன்றியது. அது ஓர் இயந்திரப் படகு. அந்தப் படகில் ஏறி அமர்ந்தான் . அவன் இயந்திரப் படகை இதுவரை பார்த்ததும் இல்லை; ஓட்டியதும் இல்லை. என்றாலும் இயந்திரப் படகை எப்படி இயக்குவது என்பது குறித்த ஞானம் அந்தப் படகுக்குள் ஏறியவுடன், அவனுக்கு வந்து விட்டது. அந்தப் படகை அவன் இயக்கினான். அது நீரைக் கிழித்துக் கொண்டு, அக்கரையை நோக்கிப் பிரயாணித்தது.

எதிர்க்கரையில் நின்றிருந்த அவன் நண்பன் இதைப் பார்த்து, வியந்து போனான். இவனுக்கு எப்படி இந்த படகு கிடைத்தது என்று அவனுக்கு குழப்பம்.

மிஞ்சியிருந்தவன் மூன்றாமவன்தான். அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மற்ற இரண்டு நண்பர்களை ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் சாதாரணமானவனாகத் தோன்றினான். அவர்கள் மிக அறிவாளிகள் என்று எண்ணினான்.

பின்னர் தன் மனதுக்குள் நாங்கள் வேலை தேடக் கிளம்பும்போது மூவராகக் கிளம்பினோம். அற்புதமான எங்கள் நட்பில் அற்பமான சர்ச்சை குறுக்கே புகுந்து எங்களைப் பிரித்துவிட்டது. இப்படிப்பட்ட கேவலமான பைசா பெறாத ஒரு விஷயத்துக்கு நான் சண்டையிட்டிருக்கக் கூடாது என்று எண்ணினான்.

சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல், நீரின் முன் நின்றிருந்தான்.

அப்போது அந்த ஆற்றிலிருந்த தேவதை, அவன் கண் முன் தோன்றியது.

''உன் நண்பர்கள் இருவரும் அக்கரை சேர்ந்து விட்டனர். ஆனால், நீ இங்கேயே நிற்கிறாய். உனக்கு எந்தக் கோரிக்கையும் என்னிடம் இல்லையா?'' என்று கேட்டது.

உடனே மூன்றாமவன் தேவதையை வணங்கினான். அவன் கண்களில் கண்ணீர் கோத்திருந்தது.

''தேவதையே... எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் கொடு! வேறு எதுவும் வேண்டாம். ஒருவன் என் பொருட்டு என்ன தீங்கிழைத் திருந்தாலும் அவனை மன்னிக்க கூடிய மனதை மட்டும் எனக்கு தா!'' என்று மனமுருகி வேண்டினான்.

இவ்வாறு அவன் கூறியதும், அவன் தொண்டையிலிருந்த உருண்டையான ஏதோ ஓர் பாரம் மறைந்து விட்டதை உணர்ந்தான். அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்த மிகப் பெரிய பாரம் அவனிடம் அகன்று விட்டதையும் உணர்ந்தான்.

இப்போது காற்றோடு காற்றாக லேசாக ஆனது போல் உணர்ந்தான். அதன்பின், அவன் அந்த ஆற்றின் மேலேயே நடந்து அக்கரைச் சேர்ந்தான்.

அதன்பிறகு அவன் மனதில் நினைத்ததெல்லாம் அப்படியே நடந்தது.

குட்டீஸ்... மன்னிக்கும் குணம் இருந்தால் போதும், நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us