PUBLISHED ON : ஜூன் 22, 2012

ஓநாயிடம் பால் குடித்தவர்கள்
இப்போது இத்தாலி என அழைக்கப் படும் நிலப்பரப்பில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பு டிம்பர் நதிக்கரையின் மேல், மலை முகடுகளில் லத்தினியர்கள் என வழங்கப் பட்ட மக்கள் குடியேறினர். இந்த சிறிய கிராமங்களின் அமைப்புதான், காலப் போக்கில் வளர்ந்து, ரோம் நகராக உலகின் தொன்மையான நகரமாக மாறியது. இதுதான், ரோமாபுரி பேரரசின் தலைநகர மானது.
லத்தினியர்களின் பூமி!
இத்தாலியின் மேற்கு கரையோரம் அருமையான பூமியில் இவர்கள் வாழ்ந்தனர். லத்தின் என வழங்கப்பட்ட மொழியின் ஆரம்ப கால வடிவத்தை இவர்கள் பேசினர். இவர்கள் வாழ்ந்த பகுதி லத்தியம் எனப்பட்டது. இவர்கள் பயிர் தொழில் செய்தனர். விலங்குகளை வளர்த்தனர். பிற்பாடு ரோம் நகரமாக பிரமாண்ட வளர்ச்சி பெற்ற இடத்தில் 62 சரிவு கிராமங்களை முதன் முதலில் அமைத்தனர்.
இந்த இடத்திற்கு ஏராளமான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இருந்தன. அந்த இடத்திற்கு அருகே டிம்பர் நதி குறுகி ஓட, அங்கே ஒரு தீவு அமைப்பு ஏற்பட்டு நதியை கடக்க உதவியாக அமைந்தது. கரை 25 கி.மீ (ஏறக்குறைய 15 மைல்கள்) தள்ளி இருந்தது. அங்கிருந்து கடலை எளிதில் படகின் மூலம் அடையலாம். ஆனால், இதுவே அவர்களை மெடிடேரியன் கடல் பகுதியில் அலையும் கடல் கொள்ளையர்களிடமிருந்து காப்பாற்றியது. அதோடு மலையின் உயரத்திலிருந்து எதிரியை எளிதில் கண்ணுற்று அவர்களை வென்றிடவும் நில இருப்பிட அமைப்பு உதவியது.
இது பின்னர் ரோம் நகரமான ஏழு குன்றுகளில் ஒன்றாகும். லத்தினியர்கள் எளிய வாழ்க்கையாக மர குடில்களில் வாழ்ந்தனர். சிலர் குன்றின் மீது வீடு அமைத்து வாழ்ந்தனர். குன்று மற்றும் நதி கரைக்கு மேலே உள்ள இடத்தில் இறந்தவர்களை புதைத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக இது போல வீடுகள், கிராமங்கள் உருவாகி கி.மு.8ம் நூற்றாண்டில் இவைகள் ஒன்று இணைந்து பெரிய நகரமான ரோமாபுரியானது.
கதைகளும், புராணங்களும்!
கொஞ்ச காலகட்டத்திற்கு பிறகு, ரோமானிய சரித்திர வியலர்கள் குறிப்பாக, லிவி, கிரேக்க புராணம் ஒன்றையும் ரோமானிய நாட்டுப்புற கதை ஒன்றையும் இணைத்து, தங்கள் ரோமானிய நகரம் எப்படி நிர்மாணிக்கப்பட்டது என்பதை குறித்து, 'பிரமாண்டமான படம்' காட்ட விரும்பினர்.
அந்த கதை இப்படி ஆரம்பமாகிறது... கிரேக்க புராண கதாநாயகன் ஏய்னெஸ் சிறைப்பிடிக்கப்பட்ட நகரமான டிராயிலிருந்து தப்பிக்கிறார். பல எண்ணற்ற சாகசங்களுக்கு பிறகு அவர் இத்தாலியை அடைகிறார்.
அங்கே ஒரு லத்தினிய இளவரசியை மணக்கிறார். ரோமானிய கதைப்படி ஏய்னெஸின் முன்னோர்கள் இரட்டை சிறுவர்களான ரோமுலஸ் மற்றும் ரீமஸ். அந்த சிறுவர்களின் மாமாவான அமுலிஸ் அவர்களை டிம்பர் நதியில் மூழ்கடித்து அழிக்கும்படி கட்டளை யிடுகின்றனர். ஆனால், சிறுவர்கள் மேல் கருணை கொண்ட வீரர்கள் அவர்களை தொட்டிலில் வைத்து ஆற்றோடு அனுப்பி விடு கின்றனர்.பெண் ஓநாயால் கண்டெடுக்கப்பட்டு அந்த ஓநாயால் பால் கொடுத்து வளர்க்கப் படுகின்றனர். பின்னர், ஒரு நல்ல மனிதரால் காப்பாற்றப்படுகின்றனர்.
இங்கு சிறுவர்கள் வளர்ந்து, அவர்களை கொல்ல நினைத்த கொடிய மாமாவை, பழி வாங்குகின்றனர். பின் புதிய நகரம் ஒன்றை டிம்பர் நதிக்கரையில் நிர்மாணிக்கின்றனர். ஆனால், நகரின் சுவர்கள் எழும்பி இருந்த நிலையிலேயே இருவருக்கும் சண்டை எழுகிறது. ரோமுலஸ் ரீமஸை கொன்று விடுகிறான். பின் அந்த நகரம் ரோமுலஸை குறிக்கும்படி 'ரோம்' என பெயரிடப் படுகிறது. கதைப்படி கி.மு.753ம் ஆண்டு இது நடந்தது.
