PUBLISHED ON : ஜூன் 20, 2020

ஏடன் நாட்டை, மன்னர் முகிலேசன், சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அவரது முதன்மை மந்திரி கானவர்மன். மன்னருக்கு உற்ற தோழராகவும் விளங்கினார். தவறாக வழிகாட்டிய அதிகாரிகளை கண்டறிந்து தடுத்தார். முறையற்ற வழியில் செல்வம் சேர்க்க முயன்றவர்களை மன்னர் அறிய செய்தார். அதனால், அவரை பழி வாங்க காத்திருந்தவர்கள் ஏராளம்.
கானவர்மன் மிகவும் சிந்தித்து செயலாற்றுபவர். சிந்தனையை மீறி ஏதாவது நடந்துவிட்டால், 'எல்லாம் நன்மைக்கே' என்று கூறி அடுத்த கட்டம் குறித்து யோசிப்பார். இது, அரண்மனை வாசிகளுக்கு கடும் எரிச்சலை தந்தது. மன்னர் கூட எரிச்சல் அடைந்ததுண்டு.
ஒரு நாள் -
சுளுக்கு பிடித்ததால் காலை இழுத்தபடி நடந்தார் மன்னர். அவரிடம் விசாரித்தார் கானவர்மன். 'அரண்மனைத் தோட்டத்தில் குதிரை சவாரி செய்த போது சுளுக்கி விட்டது...' என்றார் மன்னர்.
'எல்லாம் நன்மைக்கே...' என்றார் கானவர்மன்.
அதைக் கேட்டு, 'உமக்கு வேறு வேலையில்லையா; எதற்கெடுத்தாலும் இப்படி உளறிக் கொண்டிருக்கிறீரே...' என்று அலுப்புடன் கூறினார் மன்னர்.
அன்று, கானவர்மனை அழைத்து வேட்டையாட புறப்பட்டார் மன்னர்.
நீண்ட நேரம் அலைந்தும், விலங்கு எதுவும் தென்படவில்லை. கவலையடைந்தார் மன்னர்.
'வேட்டை கிடைக்கவில்லையே...' என்று ஆதங்கத்துடன் கூறினார்.
'எல்லாம் நன்மைக்கே; கவலைப்பட வேண்டாம்...' என்றார் கானவர்மன்.
இதுவும் மன்னருக்கு ஆத்திரத்தை மூட்டியது; பல்லைக் கடித்து, பொறுமையுடன் சமாளித்தார். பின் அரண்மனைக்கு திரும்பினர்.
மறுநாள் -
மாம்பழம் சாப்பிட நினைத்தார் மன்னர்; அரண்மனை தோட்டத்தில் விளைந்த பழங்களை எடுத்து வந்தார் பணியாளர். கத்தியால் நறுக்கிய போது, எதிர்பாராத விதமாக சுண்டு விரலை துண்டித்து விட்டது கத்தி.
ரத்தம் சொட்ட, 'துண்டான விரலை என்ன செய்வது... ரத்தம் ஆறாக வடிகிறதே...' என்று துடித்தார் மன்னர்.
'கவலைப்படாதீர்... விரல் துண்டானதும், ஒரு வகையில் நன்மைக்கே...' என்றார், கானவர்மன்.
கோபத்தின் உச்சிக்குச் சென்ற மன்னர், 'விரலை இழந்து துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறேன். அதை கவனிக்காமல் பழைய பல்லவியை பாடுகிறீரே... உமது பொறுப்பற்ற பேச்சை பொறுத்துக் கொள்ள முடியாது. மந்திரி பதவியை பறிக்கிறேன்; இனி அரண்மனையில் இடம் இல்லை...' என்றார்.
மனம் கலங்காத கானவர்மன், 'மன்னா... இதுவும் நன்மைக்கே...' என்றார். மன்னருக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
'ஒரு நிமிடம் கூட, கண்முன் நிற்காமல் ஓடி விடும்; நின்றால் என் வாளுக்கு இரையாக நேரும்...' என, கோபத்தை கொப்பளித்தார்.
அரண்மனையை விட்டு அமைதியாக வெளியேறினார், கானவர்மன்.
மன்னரின் விரல் அறுபட்ட காயத்தில் மருந்து போட்டார் வைத்தியர். சில நாட்களில் குணம் கிடைத்தது.
ஓய்வுக்குப் பின், வேட்டையாட செல்ல திட்டமிட்டார் மன்னர். துணையாக வரும் கானவர்மன் இல்லாதது கவலையை ஏற்படுத்தியது. ஆனாலும் தயங்காமல், நான்கு வீரர்களை உடன் அழைத்துச் சென்றார்.
காட்டில், நெடுந்தொலைவுக்கு சென்று விட்டார் மன்னர்; எங்கிருந்தோ திரண்ட காட்டுவாசிகள் அவரை சூழ்ந்தனர். இதைக் கண்டதும், வீரர்கள், மன்னரை விட்டு தப்பி ஓடினர். தனிமையில் மாட்டிக் கொண்ட மன்னரை சூழ்ந்தனர் காட்டுவாசிகள்.
அவரை சிறை பிடித்த காட்டுவாசிகள், குளிப்பாட்டி, மாலை அணிவித்தனர். பின் பலிபீடத்தின் முன் நிறுத்தினர். பெரிய கத்தியுடன் நெருங்கி வந்தது கொடூரமான முரட்டு உருவம்.
அருகில் வந்ததும் திடுக்கிட்டு நின்றது முரட்டு உருவம். செய்வதறியாது திகைத்தனர் காட்டுவாசிகள்.
திடுக்கிட்ட முரட்டு உருவம், 'நரபலிதானே கேட்டேன்; குறை பலி கேட்கவில்லையே; இதோ, இவரது அங்கம் குறைபட்டிருப்பதால் பலி கொள்ள முடியாது...' என்றது.
பிடித்து வந்த காட்டுவாசிகள் மன்னரை சோதித்தனர்; கைவிரல் துண்டாகி குறைப்பட்டிருந்ததைக் கண்டனர். வேறு வழியின்றி விடுதலை செய்தனர். தப்பி ஓடி அரண்மனைக்கு திரும்பினார் மன்னர்.
'விரல் அறுந்ததை நன்மை என்று சொன்னாரே கானவர்மன்; என் விரல் மட்டும் குறைபடாமல் இருந்திருந்தால் தலை அறுபட்டிருக்குமே' என எண்ணியபடி அமைதியாக அமர்ந்தார். யோசனைக்கு பின், கானவர்மனை அழைத்து வர உத்தரவு பிறப்பித்தார்.
வந்ததும், கட்டித் தழுவி வரவேற்ற மன்னர், சந்தேகத்துடன், 'என் விரல் போனதால், நன்மை ஏற்பட்டது; மந்திரி பதவியை விட்டு நீக்கியதால் உமக்கென்ன நன்மை...' என்று கேட்டார்.
பணிந்து வணங்கிய கானவர்மன், 'இவரும் வேட்டைக்குச் செல்வது வழக்கமான ஒன்று. அன்று நானும் உடன் வந்திருந்தால் காட்டுவாசிகள் இருவரையும் பிடித்து சென்றிருப்பர். குறையுடன் நீங்கள் இருப்பதை அறிந்தவுடன் உங்களை விட்டு, அங்கம் குறையில்லாத என்னை பலியாக்க கூடும் அல்லவா...' என்றார்.
'மந்திரியின் அறிவாற்றல் அற்புதம்...' என புகழ்ந்தார் மன்னர்.
குழந்தைகளே... லட்சியத்தை அடைய முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். பின்னடைவு ஏற்பட்டால், 'எல்லாம் நன்மைக்கே' என்ற தத்துவத்தை மனதில் கொண்டு, வேறு வகையில் முயற்சி செய்ய வேண்டும்.
