sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

உலகம் முழுவதும்...

/

உலகம் முழுவதும்...

உலகம் முழுவதும்...

உலகம் முழுவதும்...


PUBLISHED ON : மே 13, 2016

Google News

PUBLISHED ON : மே 13, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புத்தரிடம் தருமநந்தனர் என்றொரு சீடர் இருந்தார். அவர் புத்தருடன் பல காலம் தங்கியிருந்து அவருடைய அறநெறிகளையும், தத்துவங்களையும் கற்றுக் கொண்டார். முடிவில் உலகம் முழுவதும் சுற்றிப் புத்த தருமத்தைப் பரப்பி வருவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் புத்தரிடம் கேட்டார் தருமநந்தனர்.

''தருமநந்தா, உலகம் முழுவதும் சுற்றுவது இருக்கட்டும். முதலில் இந்த ஊரில் உள்ள மக்களிடம் நீ கற்ற உபதேசங்களைக் கூறி வா,'' என்றார்.

தருமநந்தனரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். வீதி வழியாக அவர் வந்து போது பாதையோரத்தில் பிச்சைக்காரன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அவன் முகம் பசியினால் வாடியிருந்தது.

தருமநந்தனர் தன் அருகே வந்ததும் அந்தப் பிச்சைக்காரன் அவரைப் பார்த்து, ''ஐயா, சாமி பசி எடுக்கிறது. சாப்பிட ஏதாவது கொடுங்கள்,'' என்றான்.

''பசி என்பது பொய். நமக்குப் பசியெடுக்கிறது என்று நாம் நினைத்துக் கொள்வதாலேயே நமக்குப் பசி தோன்றுகிறது. இந்த உடல் என்றைக்காவது ஒரு நாள் அழிந்து விடக்கூடியது தான். நாம் பசி, தாகம் இவற்றைப் பொருட்படுத்தாமல் இறைவனையே நினைக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவன் நமக்குச் சகல சவுபாக்கியங்களையும் அளிப்பார்,'' என்றார் தருமநந்தனர்.

தருமநந்தனரின் உபதேசம் எதுவும் பிச்சைக்காரன் காதில் விழவில்லை. தருமநந்தனர் நீண்ட நேரம் ஞானத்தைப் பற்றியும், முக்தி அடையும் வழியைப் பற்றியும் கூறலானார். பிச்சைக்காரனுக்கோ கோபம் கோபமாக வந்தது.

''உங்களால் ஏதாவது கொடுக்க முடியுமானால் கொடுங்கள். இல்லாவிட்டால் பேசாமல் போய் விடுங்கள். அநாவசியமான பேச்சு எதற்கு?'' என்று கோபத்துடன் தருமநந்தனரைப் பார்த்து கடிந்து கொண்டான்.

''கோபம்தான் பாவங்களின் முதல் காரணம். கோபத்தை அடக்கினால் பக்தி பிறக்கும். பக்தி பிறந்தால் முக்தி கிடைக்கும்'' என்றார் தருமநந்தனர்.

''எனக்கு பக்தியும் வேண்டாம், முக்தியும் வேண்டாம். மரியாதையாக இங்கிருந்து போய்விடுங்கள்,'' என்று தருமநந்தனரைப் பார்த்துக் கூறினான் பிச்சைக்காரன்.

''தருமநந்தனர் வருத்தத்துடன் திரும்பினார். புத்தர் அவரைப் பார்த்து, ''தருமந்தா, ஏன் உன் முகம் வாட்டமடைந்திருக்கிறது?'' என்று கேட்டார்.

''ஐயனே, வழியில் ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்கு ஞான மார்க்கத்தைப் பற்றியும், பக்தி மார்க்கத்தைப் பற்றியும் நீண்ட நேரம் உபதேசம் செய்தேன். ஆனால், அவன் நான் கூறியதில் ஒரு வார்த்தையைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, என் பேரில் கோபப்பட்டு என்னைத் துரத்திவிட்டான்.

''அவனுடைய நன்மைக்காகவும், அவன் நலம் பெறவும் தானே நான் அவனுக்கு உபதேசங்கள் செய்தேன். இதை அந்த மூடன் உணரவில்லையே... இவ்வாறு இருந்தால் எப்படி அவன் வாழ்க்கையில் மேன்மையான நிலையை அடைவான்?'' என வருத்தத்துடன் கூறினார் தருமநந்தனர்.

''அவனை இங்கு வரச்சொல், நான் அவனிடம் பேசுகிறேன்,'' என்றார் புத்தர்.

அவரது கட்டளைக்கு இணங்கி, பிச்சைக்காரனிடம் வந்து, ''மகனே, புத்தபிரான் உன்னை அழைத்து வருமாறு கூறினார்,'' என்று பிச்சைக்காரனிடம் தருமநந்தா கூறினார்.

புத்தரைப் பற்றிப் பிச்சைக்காரன் நன்கு அறிவான். அவர் புகழைக் கேட்டு உலகெங்கிலுமிருந்து பலர் அவரை வந்து பார்ப்பது அவனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட மகான் மிகச் சாமானியனான தன்னை அழைத்து வருமாறு கூறியது அவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை அளித்தது.

புத்தர், தருமநந்தனருடன் வந்த பிச்சைக்காரனைப் பார்த்தார். அவனை அன்புடன் அழைத்துப் பக்கத்தில் அமருமாறு கூறினார். அவன் முகத்தைப் பார்த்ததுமே, அவன் பசியோடிருக்கிறான் என்பதை புத்தர் அறிந்து கொண்டார். உடனே பக்கத்திலிருந்த சீடர்களிடம் அவனுக்கு உணவு எடுத்து வருமாறு கூறினார்.

பிச்சைக்காரன் வயிறு நிரம்ப உண்டான். பின்னர் சிறிது நேரம் அவனை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கூறினார் புத்தர். பிச்சைக்காரன் அவரை வாழ்த்திவிட்டு, அருகேயிருந்த மரநிழலில் துண்டை உதறி போட்டுச் சற்று நேரம் கண்ணயர்ந்தான்.

இதைப் பார்த்ததும் தருமநந்தனருக்கு வியப்பு ஏற்பட்டது.

''ஐயனே, இவனுக்குத் தாங்கள் உபதேசங்கள் எதுவும் செய்யவில்லை. வயிறு நிறைய உணவு கொடுத்து, அவனை ஓய்வெடுத்துக் கொள்ளச் சொன்னீர்கள். இவ்வாறு செய்தால் இவனிடம் உள்ள அஞ்ஞான இருள் எவ்விதம் அகலும்?'' என்று கேட்டார் தருமநந்தனர்.

''தருமநந்தா, என்னுடைய முதல் உபதேசம் இதுதான். இதை நீ நன்றாக நினைவில் வைத்துக்கொள். மனிதன் உயிரோடு இருந்தால் தான், தருமத்தின்படி அவன் நடக்க முடியும். உயிரோடு இருப்பதற்கு முதலில் உணவு தேவைப்படுகிறது. பசியோடு இருபோருக்கு உணவு அளிக்க வேண்டியது தான் முதல் தர்மம். வயிற்று நிரம்பியிருந்தால் தான் நம் சொல்லும் உபதேசங்கள் அவன் மனத்தில் பதியும். எனவே, தான் முதலில் அவன் வயிறு நிறைய உணவு தருமாறு கூறினேன். நாளைய தினம் அவனுக்கு உபதேசங்கள் செய்வேன்,'' என்றார் புத்தர்.

இதைக்கேட்ட தருமநந்நனர் இன்னும் நாம் கற்க வேண்டிய உபதேசங்கள் நிறைய உள்ளன என்று அறிந்து கொண்டவராய், அன்று முதல் மக்களுக்கு உபதேசங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டார்.






      Dinamalar
      Follow us