
அன்பு சகோதரி ஜெனிபர், உங்களது இளஸ்... மனஸ்... பகுதி, எங்கள் மனசுக்கு இனிமையாக இருக்கிறது. இந்த காலத்து பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதில் உங்களது, 'அட்வைஸ்' மனதுக்கு இனிமை தருகிறது.
சரி விஷயத்துக்கு வருகிறேன். என் மகள் பத்தாவது படிக்கிறாள்; வயது 15. இரவு முழுவதும் படிப்பதால் கண்களுக்கு கீழே கருவளையம் இருக்கிறது. அத்துடன் முகத்தில் திட்டுதிட்டாக கருப்பாக உள்ளது. என் மகளும் கருப்பாகத் தான் இருப்பாள். எனவே, 'ப்யூட்டி பார்லர்' அழைத்துச் செல்லச் சொல்லி பிடிவாதம் பிடிக்கிறாள். இப்பவே, 'கெமிக்கல்ஸ்' யூஸ் பண்ணி அவளது முகத்தை நான் கெடுக்க விரும்பல. சொன்னாலும் கேட்க மாட்றா... இயற்கையான பொருட்களை கொண்டு என் மகளது முகத்தில் உள்ள இந்தக் குறைகளை சரி செய்ய முடியுமா? சிறுவர் மலர் இதழை மிகவும் விரும்பி படிப்பாள். உங்களது பகுதி அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரி.
இது ஒரு பெரிய பிரச்னையே இல்லை சகோதரி. பதினைந்து வயதில் ஸ்கின் மிகவும் மென்மையாக இருக்கும். எனவே, இப்பவே அழகு நிலையம் செல்ல ஆரம்பித்தால், தொடர்ந்து செல்ல வேண்டி வரும். 'ஸ்கின்' வீணாகும். இந்த முகத்தை காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டும் அல்லவா? இந்த வயதில் இயற்கையே மகளுக்கு அழகை கொடுக்கும். எனவே, செயற்கை அழகைத் தரும் அழகு நிலையங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எளிதான வழிமுறைகள் சொல்கிறேன். அதை உங்க மகளுக்கு செய்துகொடுங்கள். அதுவே அவளுக்கு நல்லது. சரியா?
அவள் கண் விழித்து படிப்பதால் கண்களைச் சுற்றி கருவளையம் உள்ளது. அதை போக்க வெள்ளரிப்பிஞ்சை திருவி, கண்களைச் சுற்றி அப்படியே போட்டுக் கொண்டு பத்து நிமிடம், 'ரிலாக்ஸ்' பண்ண சொல்லுங்க. இது படித்துப் படித்து களைத்துப் போன கண்களுக்கும் இன்பமாக இருக்கும்; கருவளையமும் போகும். இப்படி தொடர்ந்து போட வேண்டும். இது முடியலைன்னா, ஒரு உருளைக்கிழங்கை பச்சையாக அப்படியே மிக்ஸியில் அரைத்து அந்த 'பேஸ்ட்டை' கண்களைச் சுற்றி தடவுங்கள். காய்ந்தவுடன், முகத்தை கழுவி விடவேண்டும். தொடர்ந்து ஒருவாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முகத்தில் உள்ள கருமை மறைந்து பளிச்சென இருக்க, கொஞ்சம் 'ஓட்ஸ்'சை பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தக்காளி, கொஞ்சம் தயிர் இவற்றை மிக்ஸியில் அடித்து அத்துடன் ஓட்ஸ் மற்றும் ஒரு எலுமிச்சை சாறு பிழிந்த கலவையை முகத்தில் தடவி காய்ந்ததும் முகம் கழுவி விடச் சொல்லுங்கள். அவ்வப்போது இப்படிச் செய்து வந்தால், முகத்தில் உள்ள கறுமை மறைந்து முகம் பொலிவு பெறும்.
இவை எல்லாவற்றையும் விட முடிந்தவரையில் நன்றாக தூங்கச் சொல்லுங்கள்; நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் சரியா? 21 வயதுக்கு பிறகு செல்லலாம் பார்லருக்கு!
உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,
ஜெனிபர் பிரேம்.