தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கூடா நட்பு!

கூடா நட்பு!

கூடா நட்பு!


PUBLISHED ON : ஜூன் 28, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 28, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர் வயல்காட்டில், இரண்டு கொக்குகள் இனிமையாக வாழ்ந்து வந்தன. அங்கு மேய வரும் பசுவுடன், அவற்றுக்கு நட்பு ஏற்பட்டது. பசுவின் உதவியுடன், எளிதாக வேட்டையாடி அன்றாடம் உண்டன.

அடர்ந்த மரங்களின் இடையே ஒளிந்து திரிந்த ஒரு நரி, கொக்குகளை கவனித்து வந்தது. அங்கு வந்த ஓநாய், 'என்னப்பா ரொம்ப நேரமா, கொக்குகளை நோட்டமிடுற...' என, கேட்டது.

'எனக்கு நெடுநாளாக ஒரு ஆசை... ஒரு கொக்கை வேட்டையாடி, ஆற அமர ருசித்து சாப்பிடணும். அதுக்கு, பலமுறை முயன்று தோத்துட்டேன்...' என, நாக்கை சப்புக்கொட்டியது.

'நண்பா... இப்பல்லாம், வேட்டையாடி உண்பது முடியாத காரியம்; தந்திரமாக முயற்சித்தால், உன் எண்ணம் ஈடேறும்...' என்று கூறி சென்றது ஓநாய்.

தீவிரமாய் யோசித்த நரி, 'பசு இருக்கும் நேரத்தில் கொக்குகளிடம் நெருங்கினால், பாய்ந்து வந்து தாக்கி கொன்றுவிடும். இதை தவிர்க்க முதலில், பசுவுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டால், சமயம் பார்த்து கொக்குகளை இரையாக்கலாம்...' என, முடிவு செய்தது.

அன்று -

நீண்ட நேரமாகியும், கொக்குகளை காணவில்லை; பசு மட்டும் மேய்ந்துக் கொண்டிருந்தது. அதன் அருகே வந்த நரி, அமைதியாக அமர்ந்தது. பசு, கண்டுகொள்ளவேயில்லை.

பொறுமை இழந்த நரி, 'என் இனத்தையே வெறுத்து, உன் நட்புக்காக வெகு நேரமாக காத்திருக்கேன்...' என்றது.

உற்று நோக்கிய பசு, மீண்டும் புல் மேய்வதில் கவனம் செலுத்தியது.

சற்றும் சலிப்படையாத நரி, 'என் பேச்சில் நம்பிக்கை இல்லையா... எத்தனைக் காலம் தான், நண்டையும், மீனையும் தின்பது... மண்ணைக் கிளறி, கிழங்குகளைத் தின்றால் என்ன... என்ற கேள்வி எழுந்ததால், ஞானம் பெற்றேன். இனி, உயிர்வதை செய்வதில்லை என, முடிவெடுத்து, என் இனத்தை பிரிந்தேன். உன்னுடன் நட்பு கொள்ள வந்துள்ளேன்; பசியோடு காத்திருக்கிறேன்...' என, மெல்லிய குரலில் கூறியது.

பசுவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ஆனாலும், பணிவுடன் கேட்கும் நரியை, மறுக்க முடியாமல், 'சரி... இன்று முதல் நட்பாய் வாழ்வோம்...' என, கூறியது.

மகிழ்ச்சியில் துள்ளிய நரி, 'நாளை, உனக்கு ஒரு பசுமை புல் வெளியைக் காட்டுகிறேன்; அங்கு, சுவையான புற்களை வயிறார தின்னலாம்...' என, கூறி விடைபெற்றது.

அடுத்த நாள் -

அதிகாலையே வயல்வெளிக்கு வந்தது நரி. அதைக் கண்டதும், பயந்து பறந்த கொக்குகள், ஒரு மரத்தில் பாதுகாப்பாக அமர்ந்தன.

துாரத்தில், பசு வருவதை பார்த்த நரி, வேகமாக சென்று வரவேற்றது. வழக்கமாக மேயும் வயலுக்கு வந்த பசு, 'இந்த நரி சைவமாக மாறி விட்டது. பயப்படாமல், மரத்தை விட்டு இறங்கி வாருங்கள்; நண்பர்களாக இருப்போம்...' என்று, உரத்த குரலில் கூறியது.

இதை நம்பி வந்த கொக்குகளிடம், 'புதிய நண்பன் நரி, வளமிக்க இடத்திற்கு அழைத்து செல்லும்... நரியாரே முன் சென்று வழி காட்டும்...' என, நடக்கத் துவங்கியது பசு. கொக்குகள், பின்னால் தத்தித்தத்தி நடந்தன.

அருகே கொக்குகளைக் கண்டு நரியின் ஆவல் எல்லை மீறியது. பெண் கொக்கு மீது, விருட்டென பாய்ந்து, கண் இமைக்கும் நேரத்தில், அதன் கழுத்தை கவ்வியது.

அபாய சூழலை உணர்ந்த ஆண் கொக்கு, 'சட்' என, பறந்து நரியின் கண்ணில், 'நச்' என, கொத்தியது. பசுவும் தாமதிக்காமல், நரி மீது பாய்ந்து, கொம்பால் குத்தி வீசியது. புதர் அருகே விழுந்த நரிக்கு, ஒரு கண் பறிபோனது. கதறி துடித்தபடி, புதருக்குள் ஓடி மறைந்தது.

காயமடைந்த கொக்குக்கு, பச்சிலை மருந்து போட்ட பசு, பரிவுடன் நாவால் நக்கி இதப்படுத்தியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டது பெண் கொக்கு. கொக்குகளை முதுகில் ஏற்றி, வயல்காட்டை நோக்கி கவனமாக நடந்தது பசு.

குட்டீஸ்... 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பது மூத்தோர் அறிவுரை. அதை மனதில் கொண்டு, நண்பர்களை கவனமாக தேர்ந்தெடுக்க பழகுங்கள்!

- எம்.ஆர்.பகவான்தாஸ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us