PUBLISHED ON : ஜூன் 28, 2019

அன்புள்ள சகோதரி மெடோஸ்...
எனக்கு வயது, 35; கணவருக்கு வயது, 38. நாங்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறோம். எங்களுக்கு ஒரே மகன்; வயது, 10. புகழ் பெற்ற ஆங்கில பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறான். படிப்பில் மகா கெட்டிக்காரன். பார்க்க, சிறு வயது அஜித்குமார் போல இருப்பான்; கிரிக்கெட், கால்பந்து என, குடியிருப்பு பகுதி சிறுவர்களுடன் விளையாடுவான்.
மொத்தத்தில், ஆயிரம் நல்ல குணங்கள்; ஆனால், சொல்ல வாய் கூசுகிறது... அவனிடம் ஒரு கெட்ட குணம் உள்ளது. மிக சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசுவான். கெட்ட வார்த்தைகளில் எத்தனை வகை உண்டோ அத்தனையும் அவனுக்கு அத்துபடி.
நாங்கள் மிக கோபமாக இருந்தாலும், கெட்ட வார்த்தைகள் பேசுவான். அப்போது, அவன் முகத்தில் ஆயிரம் வாட் பல்ப் எரியும். கெட்ட வார்த்தை பேசுவதை தடுக்க, திட்டியும், கண்டித்தும், அடித்தும் பார்த்து விட்டேன்; எதற்கும் அடங்க வில்லை.
'நான் இப்படித்தான் இருப்பேன்; என்னை என் போக்கில் விடுங்கள். என் பேச்சை கேட்க பிடிக்கவில்லை என்றால், விடுதியில் சேர்த்து விடுங்கள்...' - என்கிறான்.
என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம். அன்பு மகனை கெட்ட வார்த்தைகளிலிருந்து மீட்க, தகுந்த வழி சொல்லம்மா.
அன்புள்ள சகோதரிக்கு -
தமிழ் மொழியில் குறைந்தபட்சம், 4 லட்சம் வார்த்தைகள் இருக்கும். அதில், 5 ஆயிரம் கெட்ட வார்த்தைகளாவது கலந்திருக்கும்.
சென்னைத் தமிழ், திருநெல்வேலி தமிழ், மதுரை தமிழ் போன்ற வட்டார மொழி வழக்குகளிலும், ஆயிரக்கணக்கான கெட்ட வார்த்தைகள் காணக்கிடைக்கின்றன.
கெட்ட வார்த்தை பேசினால், தண்டனையும், அபராதமும் உண்டு என, அரசு சட்டம் இயற்றா விட்டாலும், கெட்ட வார்த்தைகள் பேசுதல் இழிவான குணம் என்று சமூகம் கண்டனக் கொடியை துாக்கி பிடிக்கிறது.
உங்கள் கணவர் பேசும் கெட்ட வார்த்தை, உங்கள் மகனை தொற்றியிருக்கலாம். உங்கள் மகன் வகுப்புத் தோழன் அல்லது குடியிருப்பு பகுதி சிறுவன் யாராவது குருவாக இருந்து, கெட்ட வார்த்தைகளை கற்று தந்திருக்கலாம்.
உங்கள் கணவர் கெட்ட வார்த்தைகள் பேசுபவராய் இருந்தால், முதலில் அவர் திருந்த வேண்டும். உங்கள் மகனின் வகுப்பு தோழர்கள், குடியிருப்பு பகுதி விளையாட்டு சிறுவர்கள் பற்றி அலசி ஆராயுங்கள். கெட்ட வார்த்தை பேசும் நண்பர்கள் இருந்தால், அவர்களிடமிருந்து விலக்கி வையுங்கள்.
வன்முறை பிரயோகித்தால் திருந்த மாட்டான்; இன்னும் கூடுதலாய் கெட்ட வார்த்தைகள் பேசுவான். அவன் நல்ல வார்த்தைகள் பேசுவதை ஒரு வீடியோவாகவும், கெட்ட வார்த்தைகள் பேசுவதை ஒரு வீடியோவாகவும் எடுங்கள்.
நல்ல வார்த்தைகள் பேசும் போது, அவன் முகத்தில் ஒளி வீசுவதை காட்டுங்கள். கெட்ட வார்த்தை பேசும்போது முகத்தில் அருவெறுப்பான மிருகத்தனம் வழிவதையும் காட்டுங்கள்.
உங்கள் மகனை வெளியே அழைத்து சென்று, மனம் விட்டு பேசுங்கள்.
மகனே... நீ நியாயமான கோபத்தை காட்ட நயமான தமிழ் வார்த்தைகள், 1,000 உள்ளன. கரை புரண்டோடும் சந்தோஷத்தை காட்ட, நளினமான தமிழ் வார்த்தைகள், 1,000 உள்ளன. மல்லிகைப்பூவாய், ரோஜாப்பூவாய் உன் மொழியில், 1,000 நல்ல வார்த்தைகள் இருக்க, கெட்ட வார்த்தைகளை பேச ஏன் துடியாய் துடிக்கிறாய்...
மகனே... உன் தொண்டைப் பெட்டியில், ஒரு தணிக்கை குழுவை ஏற்பாடு செய்துக்கொள். எந்த வார்த்தையையும் பேசுவதற்கு முன், அதை பேசுவது சரிதானா என, ஒரு கணம் யோசி. தணிக்கை செய்யப்பட்ட வார்த்தைகள் பிறரை காயப்படுத்தாது.
கெட்ட வார்த்தை பேசுவோர், எதிர்மறை பிரபலம் அடையக் கூடும். அந்த எதிர்மறை பிரபலம், ஒரு மனிதனின் ஒளிமயமான எதிர்காலத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கி விடும். கெட்ட வார்த்தை பேசுபவரை கண்டால், பல்லியை, ஒரு விஷப்பாம்பை கண்டு வெருள்வதை போல சமூகம் விலகி ஓடும்.
மகனே, கெட்ட வார்த்தைகள் பேசுவது உன் ஆன்மாவை கறைபடுத்தி கொள்வது போல. பேசும் வார்த்தைகளுக்கு, ஒரு அதிர்வலை இருக்கிறது. கெட்ட வார்த்தை, கெட்ட அதிர்வலையை ஏற்படுத்தும்; நல்ல வார்த்தைகள், முயல், அணில் என்றால், கெட்ட வார்த்தை ஒரு, முள்ளம் பன்றி.
கெட்ட வார்த்தைகள் பேசாமல், உங்கள் மகன் ஒரு நாளை கழித்து விட்டால், எதாவது பரிசுப் பொருள் வழங்குங்கள்.
பட்டப்படிப்பு முடிக்கும் வரை, அலைபேசி வாங்கி தராதீர். செஸ், கேரம் போர்ட் போன்ற விளையாட்டுகளில் ஊக்கப்படுத்துங்கள்.
மகன் படிக்கும் பள்ளிக்கு, மாதம் ஒரு முறையாவது, ரகசியமாக செல்லுங்கள்.
வாரம்தோறும், மகனுடன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
மகன் முன், கணவன், மனைவி இருவரும் எக்காரணத்தை முன்னிட்டும், சண்டை போடாதீர்.
உங்கள் மகன் சிறப்பாக வருவான்.
- டன் கணக்கில் அன்புடன்
மெடோஸ்
