PUBLISHED ON : நவ 07, 2020

பொழுது விடியவில்லை.
ஜன்னலை திறந்தான் ஹென்றி. அதிகாலை பனி முகத்தில் அறைந்தது.
நிசப்தமாக இருந்தது வீடு. நிதானமாக துணிமணிகளைச் சுருட்டி, பெட்டியில் ஒழுங்காக அடுக்கி வைத்து, அறையை ஒருமுறைப் பார்த்தான்.
பொருட்கள் எல்லாம் நம்பிக்கை ஊட்டின. திட்டமிட்டு உழைத்தால் முன்னேறலாம். வெற்றிப்படிகளில் ஏறலாம்.
எண்ணியபடி அடி மேல் அடி எடுத்து வைத்து, தந்தையின் அறைப் பக்கம் வந்தான். குறட்டை சத்தம் கேட்டது.
சற்று நேரம் நின்று கவனித்து, பின், சமையல் அறை பக்கம் போனான்.
வழிப்பயணத்தில் சாப்பிட வசதியாக, ஒரு கேக் எடுத்து வெளியேறினான் ஹென்றி.
புலர்ந்து கொண்டிருந்தது பொழுது.
பறவைகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. இரை தேடுவதற்காக அங்கும் இங்கும், சுறுசுறுப்புடன் பறக்க துவங்கியதை உணர்ந்தான்.
உயர்ந்த நோக்கத்தை மனதில் தாங்கியபடி நடக்கத் துவங்கினான்.
பாதையில் உறைபனி படர்ந்திருந்தது. ஆனாலும் தொய்யவில்லை கால்கள்.
சற்று ஒடிசலான உடலுள்ளவன் ஹென்றி. இதனால், உயரமான தோற்றத்துடன் இருந்தான்.
சுதந்திரமாக வாழ துடித்தது அவன் மனம். அதற்கான ஆர்வமும் இருந்தது. அந்த ஆர்வம் தான் உந்தியது.
ஆர்வம், திட்டமாக மாறியது. திட்டம் செயலுக்கு வரும்போது, இலக்கை அடையலாம் என்ற நம்பிக்கை பிறந்தது. ஹென்றியின் வாழ்வில் குழந்தை பருவத்திலேயே இது லட்சியமாக இருந்தது.
விதம் விதமான இயந்திரங்களை அறியும் ஆர்வம் கொண்டிருந்தான். நீண்ட நாட்களாக அதற்கு உரிய பயிற்சிகளை எடுத்தான். முழுமையை அறிய, பல வழிகளிலும் முயன்றான்.
அவன் தீராத ஆர்வம் கண்டு, 'நீ பிறவி மெக்கானிக்...' என்று, தட்டிக் கொடுத்து மெச்சினாள் அம்மா. மனதில் உற்சாகம் பாய்ச்சிய டானிக் அது. தேடல் மனதை அதிவேகமாக இயக்கியது.
கிராமத்தில் விவசாயப் பண்ணையில், சிறிய இயந்திரங்களை இயக்க அறிந்திருந்தான். அவற்றை பழுது நீக்குவதிலும் தேர்ந்திருந்தான்.
'உழைக்க தயாராக இருந்தால், வாழ்வில் உயர முடியும்'
இந்த எண்ணம் கனன்று கொண்டே இருந்தது. அதை பற்றிப்பிடித்தபடி வெறியுடன் நடந்தான் ஹென்றி.
'கார்கள், கனரக வாகனங்களில் புதுமை படைக்க வேண்டும்'
'நவீன இயந்திரக் கருவிகளை உருவாக்க வேண்டும்'
இவ்வாறு இரவு, பகலாக அசைபோட்டான்.
அந்த எண்ணத்தை நிறைவேற்ற, கிராமம் ஏற்றதல்ல; நகரம் தான் வழி திறக்கும் என்ற முடிவுக்கு வந்தான்.
அந்த எண்ணம் தான், அமெரிக்கா, மிச்சிகன் மாநிலத்தில், வாகன தொழிலுக்கு புகழ் பெற்ற நகரான டெட்ராய்ட் நோக்கி நடைபோட வைத்தது.
வழியில் மரம், செடி, கொடிகள் இளம்பனியில் நனைந்திருந்ததை ரசித்தான்.
துாரத்தில் தொழில்மயமான நகர காட்சி -
புகைபோக்கிகள்; ஆலய கோபுரங்கள்; நெருக்கமான குடியிருப்புகள் எல்லாம் தெரிந்தன.
லட்சிய தாகத்தை நிறைவேற்றுவது பற்றி சிந்தித்து வந்ததால், ௯ கி.மீ., துாரம் நடந்ததே தெரியவில்லை.
நகர வாசலை மிதித்து விட்டான்.
கடும் குளிரிலும் முகத்தில் அரும்பி இருந்தது வியர்வை. அதை மென்மையாக துடைத்து, ஆடையில் படிந்திருந்த துாசியை தட்டினான்.
புதிய வாழ்க்கைக்கு தயாராகி விட்டான் ஹென்றி.
டெட்ராய்ட் நதிக்கரையில், சற்று நேரம் வேடிக்கை பார்த்தான்.
தானிய மூட்டை, மரப்பலகை, மீன், மாவு, தோல் போன்ற பொருட்களைக் கப்பல்களில் ஏற்றி கொண்டிருந்தனர். அழுக்குப் படிந்த உடையில் சிறுவர்கள், பல மொழிகளில் பேசியபடி, விளையாடிக் கொண்டிருந்தனர்.
இசைக்கருவிகள், மெழுகுவர்த்தி உருவாக்கும் தொழிற்கூடங்கள் பல இருந்தன.
வழக்கமாக தெருக்கள், பருவ காலங்களுக்கு ஏற்ப, புழுதியாகவோ, சேறாகவோ இருக்கும். இங்குள்ள தெருக்களில் பலகையால் நடைமேடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
குதிரை வண்டிகளும், மிதிவண்டிகளும், பார வண்டிகளும் தென்பட்டன.
காதை துளைத்தது சத்தம்; மாடிக் கட்டடங்கள் வானத்தை இடித்து நின்றன.
பெரிய தொழிற்கூடத்தின் முன் நின்றான்.
வாசல் பலகையில், 'ஜேம்ஸ் ப்ளவர் அண்டு கம்பெனி' என எழுதப்பட்டிருந்தது.
மிடுக்குடன் அந்த தொழிற்கூடத்துக்குள் நுழைந்தான்.
அங்கு, நீராவி இயந்திரங்கள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
அது சிறந்த தொழிற்கூடம் என கேள்விப்பட்டிருந்தான் ஹென்றி. இயந்திர தயாரிப்பு வேலை கற்க உகந்த இடம்.
அலுவலக அறை மூலையில் அமர்ந்திருந்த மேலாளர் பார்வைக்காக தயங்கியபடி நின்றான்.
தலையை நிமிர்த்தியவரை வணங்கினான்.
'வேலை தேடி வந்திருக்கிறேன் ஐயா...'
பணிவுடன் சொன்னான் ஹென்றி.
'என்ன வேலை தெரியும்...'
'இயந்திரம் சம்பந்தமாக கொஞ்சம் தெரியும். கற்கும் ஆர்வத்தில் வந்திருக்கிறேன்...'
'இதுவரையில் என்ன செய்து கொண்டிருந்தாய்...'
'பண்ணையில் இயந்திரங்களைப் பழுது நீக்கும் பணியை செய்திருக்கிறேன்; பண்ணைக் கருவிகளைக் கையாள தெரியும்; கடிகாரமும் பழுது நீக்கியிருக்கிறேன்; நீராவி இயந்திரம் இயக்கவும் தெரியும்...'
'உனக்கு வேலை வேண்டும்... அப்படித்தானே...'
- தொடரும்...
