தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அட்ராசிட்டி பாய்ஸ்!

அட்ராசிட்டி பாய்ஸ்!

அட்ராசிட்டி பாய்ஸ்!


PUBLISHED ON : நவ 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அஞ்சனுார் அரசு உயர்நிலைப் பள்ளி, கற்பித்தலுக்கு புகழ் பெற்றது; கிராமப்புற மாணவர்கள் அதிகம் படித்தனர்.

தினமும், ஒரு முறையாவது, 'பகீர்' அல்லது 'திடீர்' சம்பவம் பள்ளியில் நடக்கும்.

இரட்டையரான, ராஜன், கேசவனே அதற்கு காரணம். சுருக்கமாக, ராகு, கேது என்றே அவர்களை அழைப்பர்.

வித விதமான சேட்டைகள் செய்வதில் கை தேர்ந்தவர்கள்.

இறைவணக்க கூட்டத்தின் போது, 'பாம்பு... பாம்பு...' என கத்தி, பரபரப்பை ஏற்படுத்தினர்.

இன்னொரு நாள், வரிசையில் நிறுத்தியிருந்த மிதிவண்டியை தள்ளி விட்டு ஓடி விட்டனர்.

அனைத்தும், மொத்தமாக சரிந்தன.

நோட்டு புத்தகம், பேனாவை மறைத்து சண்டை போட வைத்து ரசிப்பர்.

இதனால், யாருமே அவர்களிடம் நட்பு கொள்வதில்லை. அவர்களும் அதைப் பற்றிக் கவலை கொண்டதில்லை. பள்ளியே பயப்படுவதாக, பெருமை கொண்டனர்.

ஒரு நாள் -

புதிய தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்தார்; எப்படிப்பட்ட மாணவர்களையும் சரியாக்கி விடும் வல்லமையுள்ளவர். அவரே ராகு, கேதுவின் அட்டகாசத்தைப் பார்த்து சற்று மிரண்டு போனார்.

பெற்றோரை அழைத்துப் பேசினார்.

அவர்கள் மிகுந்த பணிவுடன், 'ஐயா... நீண்ட நாட்களுக்குப் பின், பிறந்த குழந்தைகள் என்பதால், சற்று அதிகமாகவே செல்லம் கொடுத்து விட்டோம். அதன் விளைவு, ஆபத்தை வரவழைக்க கூடிய அளவிற்கு சேட்டையாக பெருகி விட்டது. எப்படியாவது சரி செய்யுங்கள்...' என்றனர்.

அன்று மதியவேளை -

சத்துணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் மாணவர்கள்; அதில் ஒருவன் தட்டில், பிளாஸ்டிக் பல்லியைப் போட்டனர் சேட்டை சகோதரர்கள். அது அசல் பல்லியைப் போலவே இருந்தது.

அவ்வளவு தான்... 'ஐயோ... யாரும் சாப்பிடாதீங்க... என் தட்டில் பல்லி...' என கத்தினான்.

பயத்தில் மயங்கினர் சில மாணவர்கள்; சாப்பாட்டுத் தட்டை துாக்கி போட்டு ஓடினர் பலர். சேட்டை செய்தவர்கள் மட்டும் பொறுமையாக ரசித்து உண்டனர். மனதில் சிரித்து ரசித்தனர்.

அடுத்த அரைமணி நேரத்தில், மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. விசாரணையில், பொம்மை பல்லி என தெரிந்ததும், இயல்பு நிலை திரும்பியது.

இது, இரட்டையர்கள் வேலைதான் என அறிந்தார் தலைமை ஆசிரியர்; எதுவும் கேட்கவில்லை. விட்டுப்படித்தார்.

சில நாட்களுக்கு பின் -

சேட்டையர்கள் வகுப்பறையில் இருந்தனர். அங்கு வந்த சிலர், 'உங்க வீடு, மாட்டுக் கொட்டாய் எல்லாம் தீப்பிடித்து எரியுதுடா...' என பதற்றமாக சத்தமிட்டனர்.

அடுத்த நொடி, இருவரும் வீட்டை நோக்கி ஓடினர். அங்கு எந்த சம்பவமும் இன்றி அமைதியாக காணப்பட்டது.

இரட்டையரின் பெற்றோரிடம் பேசி கொண்டு இருந்த தலைமை ஆசிரியர், 'என்னப்பா... வகுப்புக்கு செல்லாமல் இந்த பக்கம் திரிகிறீங்க...' என கேட்டார்.

பொங்கிய கண்ணீரை அடக்கியபடி, 'இல்ல ஐயா... எங்க வீடு தீப்பிடித்து எரியுதுன்னு பசங்க சொன்னாங்க...' என, தயங்கினர்.

'அப்படி ஒன்றும் இல்லையே.. பதற்றத்தை விடுங்க... ஒழுங்கா கற்பதில் கவனம் செலுத்துங்க...'

இயல்பாக சொன்னார் தலைமை ஆசிரியர்.

'மன்னித்து விடுங்கள் ஐயா; மனதில் பதியும் படி பாடம் புகட்டி விட்டீர்கள்... இப்போது தான் தெரிகிறது... எவ்வளவு பேர் மனதை நோகடித்து இருப்போம் என்று... இனி அது போல் நடக்க மாட்டோம்... தவறான தகவல் பரப்புதல், அடுத்தவர் கஷ்டத்தில் மகிழ்தல் எல்லாம் எவ்வளவு பெரிய தவறு என புரிந்து கொண்டோம்...'

கண்ணீர் மல்க கூறினர்.

திருந்தியவர்களை பாராட்டினார் தலைமையாசிரியர்.

குழந்தைகளே... பிறர் மனம் நோகும்படி குறும்பு செய்வது எவ்வவு பெரிய கேடு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்; பள்ளியிலும், வீட்டிலும் சமத்துக் குட்டியாக வாழ்ந்து முன்னேறுங்கள்.

- வாண்டுமாமி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us