தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/கணினி யுகத்தின் தாய்!

கணினி யுகத்தின் தாய்!

கணினி யுகத்தின் தாய்!


PUBLISHED ON : நவ 07, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 07, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கணினி மென்பொருள் தயாரிப்பால் உலகின் முதன்மை செல்வந்தரானவர், அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ். ஆனால், கணினி என்ற கருவியை மேம்படுத்த அடித்தளமிட்ட பெருமைக்குரியவர், கிரேஸ் முர்ரே ஹாப்பர் என்ற பெண்.

அமெரிக்கா, நியூயார்க்கில், 1906ல் பிறந்தார். தந்தை, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் தரகராக பணிபுரிந்தார். கப்பலில் பணியாற்றினார் தாத்தா. அப்போது நிகழ்த்திய சாகசங்களை, எளிய கதைகளாக சொல்வார்.

கதை கேட்கும் வழக்கம் தான், எதையாவது சாதிக்கும் வெறியை, கிரேசுக்கு ஏற்படுத்தியது.

அமெரிக்கா, யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார் கிரேஸ். கல்லுாரியில் விரிவுரையாளராக பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போரின் போது, அமெரிக்க கப்பல் படை மகளிர் பிரிவில், அவசர கால தன்னார்வலராக இணைந்தார்.

அவரது இயற்பியல் புலமையை அறிந்த அதிகாரிகள், அமெரிக்கா, ஹார்வர்டு பல்கலைக்கழக கணக்கு பதிவு பிரிவுக்கு அனுப்பினர்.

அங்கு தான், 'மார்க் - 1' என்ற கணக்கிடும் இயந்திரமான, முதல் கணினியை கண்டார். அது, 51 அடி நீளத்தில், நான்கு அறைகளில் விரிந்து இருந்தது.

ஏராளமான பல் சக்கரங்களுடன், கண்டபடி கம்பி ஒயர் இணைப்புகளால் நிறைந்திருந்தது. சிக்கல் மிக்கதாக காட்சியளித்தது. அவ்வப்போது புகையை கக்கி, புஸ்வாணம் ஆகியது. பழுது நீக்கி இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

அதை சரி செய்து, இயக்கும் பணி, கிரேசிடம் ஒப்படைக்கப்பட்டது. இயந்திரத்தின் பல் சக்கரங்களில் சிக்கியிருந்த, பட்டாம் பூச்சிகளை அகற்றினார். பழுது நீக்கும் போது, 'டிபக்கிங்' என்ற சொல்லை பயன்படுத்தினார். இதற்கு, பூச்சி நீக்கம் என்று பொருள். அந்த சொல் இன்றுவரை, கணினி உலகில் கோலோச்சுகிறது.

கணக்கிடும் இயந்திரத்தை, 10 நாட்களில் சீராக்கி, 'மார்க் - 2' என்ற பெயரில், நேர்த்தியாக மாற்றியமைத்தார். சிக்கல் தீர்ந்தது.

உலகப்போர் முடிந்த பின்னும், அந்த பணியில் தொடர்ந்தார் கிரேஸ். கணினி மீதான ஈர்ப்பினால், மேம்படுத்தும் பணியிலும், ஆய்வு செய்வதிலும் தீவிர கவனம் செலுத்தினார்.

விரும்பிய முடிவை பெற வசதியாக, கணினிக்கான நிரல் மொழியை உருவாக்கினார்.

அமெரிக்க கப்பல் படை, ரெமிங்டன் ரேன்ட் என்ற நிறுவனத்திற்கு அவரை அனுப்பியது. முதல் கணினி பொறியாளராக அங்கு சேர்ந்தார். இரவு பகல் பாராமல் உழைத்து, 'கணினி யுகம்' மலர அடிகோலினார்.

முதலாவது கணினி மொழியை, ஆங்கிலத்தில் அறியும் செயல்முறையை, 1959ல் உருவாக்கினார். அது, 'காமன் பிசினஸ் ஓரியன்ட் லாங்குவேஜ்' எனப்படுகிறது. சுருக்கமாக, 'கோபல்' என்பர். அந்த கண்டுபிடிப்பு, இன்று பல வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

கணினி செயலியை மேம்படுத்தியதால் அந்த நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்புக்கு வந்தார். கப்பல் படையில், கமாண்டர் பதவியும் வழங்கப்பட்டது.

அவரது சீரிய ஊழைப்பால் அமெரிக்க கப்பல் படை தளங்கள் அனைத்திலும், கணினிகள் நிறுவப்பட்டன. உலகிலேயே, முதன் முதலில் கணினி மயமாக்கப்பட்டது, அமெரிக்க கப்பல் படை தான்.

நாட்டு நலத்துக்காக, என ஆய்வுகள் துவங்கினார் கிரேஸ். பின், உலக முன்னேற்றம் என்ற லட்சியத்துடன் செயல்பட்டார்.

வாழ்நாளின் பிற்பகுதியில், 40 ஆண்டுகள் தினமும் சராசரியாக, மூன்று மணி நேரம் மட்டுமே துாங்கினார். மற்ற நேரம் ஆய்வுப் பணிகளை கவனித்தார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலகில் கணினி யுகத்துக்கு அடிக்கல் நாட்டிய கிரேஸ், 85ம் வயதில், ஜனவரி 1, 1992ல் காலமானார்.

கிரேஸ் பொன்மொழி!

* துறைமுகத்தில் நிற்கும் கப்பல் பாதுகாப்பானது; ஆனால், அதற்காக கட்டப்படவில்லை கப்பல். அது, கடலில் பாய்ந்து புதிதாக ஏதாவது சாதிக்க வேண்டும்

* அனுமதி பெறுவதை விட மன்னிப்பு கேட்பது எளிது

* கணினியால் கணக்குகளை மட்டுமே செய்ய முடியும்; நிரல்களை உருவாக்க முடியாது

* கடந்த காலத்தை விட, எதிர்காலத்துக்கு அதிக அக்கறை கொள்ளுங்கள்

* முதலில் வேலையை செய்யுங்கள்; ஓய்வுக்கு நேரம் தானாகவே கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us