தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/காத்திருக்கும் தேவதை!

காத்திருக்கும் தேவதை!

காத்திருக்கும் தேவதை!


PUBLISHED ON : ஜன 11, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 11, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிறக்கும் தருணத்தில் கடவுளை பார்த்த குழந்தை, 'என்னை, பூமிக்குப் அனுப்ப போறதா சொல்றீங்க. இவ்வளவு குட்டியா இருக்கேனே... எப்படி அங்கு வாழ்வேன்...' என்று கேட்டது.

'கவலைப்படாதே... தேவதைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளேன்; அது, பூலோகத்தில் உனக்காக காத்துக் கொண்டிருக்கும்; வேண்டிய உதவிகளை செய்யும்...' என்றார் கடவுள்.

இதைக் கேட்ட குழந்தை, 'சொர்க்கத்தில், ஆடி, பாடி, சிரித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; பூலோகத்திலும், இப்படியே இருக்க விரும்புகிறேன்; அது நிறைவேறுமா...' என்றது.

'தேவதை உனக்காக பாடும்; ஆடி குதுாகலப்படுத்தும். அன்பைப் பொழியும்; மகிழ்ச்சியாக இருக்கலாம். உன் விருப்பப்படியே நடக்கும்...'

'நான் எப்படி, மற்றவர்கள் பேசும் மொழியை தெரிந்து உரையாடுவேன்...'

'அது மிகவும் எளிது...'

'எப்படி...'

'தேவதை, இனிய சொற்களை கற்றுக் கொடுக்கும்; சரளமாக தயக்கமின்றி உரையாடவும் பயிற்சி கொடுக்கும்...'

'மிக்க மகிழ்ச்சி... நீங்கள் சொல்வது போலவே, என் பூலோக வாழ்வு அமையட்டும்; ஆனால்...' என்று, பேச்சை நிறுத்தியது குழந்தை.

'என்ன ஆனால்... அப்படி என்ன சந்தேகம் உனக்கு...'

'உங்களிடம் பேச விரும்பினால் என்ன செய்ய வேண்டும்...'

'பிரார்த்தனை, தியானம் செய்வதன் மூலம், என்னுடன் பேசலாம்; எப்படி பிரார்த்தனை செய்வது என்பதை தேவதை கற்றுக் கொடுக்கும்...'

'இன்னும் ஒரு சந்தேகம் கடவுளே...'

'என்ன என்று சொல்...'

'பூலோகத்தில் கெட்டவர்கள் அதிகம் இருப்பதாக அறிந்தேன்; அவர்களிடமிருந்து என்னை காப்பாற்றுவது யார்...'

'நீ சிறிதும் பயப்பட தேவையில்லை; எந்த ஆபத்து வந்தாலும், தேவதை உன்னைக் காக்கும்...' என்று தைரியம் ஊட்டினார் கடவுள்.

அப்போது, சொர்க்கத்தில் அமைதி சூழ்ந்தது; பூமியில் பயங்கர வலியால் அலறல் சத்தம் கேட்டது. உடனே, குழந்தை அவசரமாக, 'கடவுளே... நான் இப்போது பூலோகம் சென்றாக வேண்டும்; என் தேவதையின் பெயரைக் கூறுங்கள்...' என்றது.

'தேவதையின் பெயர் முக்கியம் அல்ல; அது உன் வரவுக்காக காத்திருக்கும். நீ சென்றதும் அள்ளி அணைத்துக் கொள்ளும். நீ அம்மா என்று அழைத்தால் போதும்...' என்று அறிவுரைத்தார் கடவுள்.

அம்மா தான், தேவதை என்பதை புரிந்து கொண்டது குழந்தை.

மின்மினிகளே... உங்களுக்கு எப்போதும் உதவும் தேவதை, அம்மா தான். அந்த தேவதையின் செயல்களை அங்கீகரித்து போற்றி நன்றியுடன் இருங்க; படுத்தி எடுக்காதீங்க... சரியா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us