
ஒருநாள் அதிகாலை நேரம். பனி மூட்டம் எங்கும் பரவி புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. லேசாக தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பனித்துளிகள் மரங்களின் இலைகளின் மீது படிந்து, நீர் மொட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன.
ஆனால், ஒரு குளத்தில் இருந்த தாமரை இலை, தன் மீது விழுந்த பனித்துளிகளை சேமித்து வைப்பதில் கடினமாக உழைத்தது. பனித்துளியை சிறிதும் சேதம் ஆகி விடாமல் அவற்றைச் சேமித்து வைப்பதிலேயே தாமரை கண்ணுங் கருத்துமாக இருந்தது.
நீருக்குள் இருந்த தவளை ஒன்று தாமரையின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டது. சிறிது நேரம் சென்றிருக்கும். வானத்தில் பிழம்பு போல் எழுந்து வந்தது சூரியன். தன்னுடைய ஒளிக்கதிர்களை வீசியது. பனி மூட்டத்தை ஜீரணித்துப் பகல் ஆக்கிவிட்டது.
தாமரை கஷ்டப்பட்டுச் சேகரித்த பனித் துளிகளை, சூரியனின் உஷ்ணக் கதிர்கள் அழித்துவிட்டன. பகலவனின் ஒளிக்கதிர்களுக்கு முன்னே பனித்துளிகள் என்ன செய்து விட முடியும்?
தாமரைக்கு சூரியனின் மீது கோபம் இல்லை. ஆனால், வானம் இருப்பதால் தான் சூரியன் உதிப்பதாக, தாமரை எண்ணிக் கொண்டது.
'தான் சிரமப்பட்டுச் சேமித்து வைத்த பனித் துளிகள் அழிந்து போனதற்கு வானமே காரணம்' என்று தாமரை கருதியது. அதனால், தாமரைக்கு வானத்தின் மீது கோபம் ஏற்பட்டது. அதே சமயம், தன் உழைப்பு வீணாகிவிட்டதே... என்று தாமரை சோகத்தில் ஆழ்ந்தது.
தாமரையின் சோகத்தை அறிந்த தவளை, தாமரையைப் பார்த்து, ''தடாகத்துக்கு அழகு தரும் தாமரையே! சூரியனைக் கண்டு மலர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்படும் நீ, இன்று முகம் வாடியிருக்கக் காரணம் என்னவோ?'' என்று கேட்டது.
தனது உழைப்பையெல்லாம் வானம் வீணாக்கி விட்டதை விவரமாகத் தவளைக்கு எடுத்துக் கூறியது தாமரை. வானத்தைப் பார்த்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தாமரை எண்ணியது.
பின்னர் வானத்தைப் பார்த்து தாமரை, ''ஏ! வானமே! இளம் அதிகாலை நேரத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டு சேமித்த பனி நீர் மொட்டுகளை சூரியனைக் கொண்டு அழித்து விட்டாயே... இது உனக்கு அடுக்குமா? என் உழைப்பின் மகிமை பற்றி உனக்குத் தெரியாதா என்ன? உழைத்தும் பலன் இல்லாமல் செய்து விட்டாயே,'' என்று கேட்டது.
''தாமரையே! உனது வருத்தம் எனக்கு நன்றாகப் புரிகிறது. என் நிலைமையை நீ அறிந்துகொள்ள முடிந்தால் உனக்கு என் மீது கோபம் ஏற்பட வாய்ப்பில்லை.
''நீ உன்னிடம் சேமித்து வைத்திருந்த சில பனித்துளிகள் வீணாகி விட்டதற்காக இவ்வளவு வருத்தம் அடைகிறாய். நானோ இரவு முழுவதும் கோடி கோடி அளவுக்கு நட்சத்திரங்களைச் சேமித்து வைத்து, இரவு முழுவதும் ஜீவராசிகளுக்கு எழிலார்ந்த காட்சி தருகிறேன். ஆனால், பொழுது விடிந்ததும் என்னால் ஒரு நட்சத்திரத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை. சூரியன் அவற்றை அழித்துவிட்டு, அகங்காரம் கொண்டு ஆர்த்தெழுகிறான். பத்துத்துளி வீணாகிப் போனதற்கே இப்படி அல்லல்படுகிறாயே, நான் கோடி கோடியாய் இழந்து விட்ட பிறகும் கவலைப்படுகிறேனா? பகலோடும் சூரியனோடும் நான் மோதிக் கொள்ள முடியுமா என்ன?'' என்று வானம் தாமரையைப் பார்த்துக் கேட்டது.
''நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையே,'' என்று தாமரை கூறியது.
''தாமரையே! ஏற்றுக்கொள்வதா, மறுப்பதா என்பது இங்கே பிரச்னை அல்ல; ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. இழப்புகளைக் கண்டு சோர்ந்து விடக்கூடாது என்பவைதான் பிரச்னையாகும்.
''கர்மத்தைச் செய்; பலனைப் பற்றிக் கவலைப்படாதே; என்று மனிதர்களுக்கு உபதேசம் செய்த பகவத் கீதை நமக்கும் பொருந்தும் அல்லவா?'' என்று விவரித்துக் கூறியது வானம்.
தன்னிடமிருந்த பனித்துளிகளை பறித்துக் கொண்டாலும், தன் மலரைத் தலைநிமிர வைக்கிற காரியத்தைச் சூரியன் ஆற்றுகிறதே, என்று எண்ணி தாமரை இழப்பை மறந்து ஆறுதல் அடைந்தது.
***