
அந்நிய நாட்டில் பிறந்து, இந்திய விடுதலைக்காக போர்க்கொடி துாக்கியவர் அன்னிபெசன்ட். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில், 1847ல் பிறந்தார். சிறுவயதிலேயே சுறுசுறுப்பு, அறிவாற்றலுடன் விளங்கினார். தந்தையிடம் பெற்ற அறிவுரை மேன்மை வாழ்விற்கு அடிகோலியது. தாய் அரவணைப்பில் வளர்ந்தார்.
பள்ளியில் சிறப்பாக கற்று தேர்ச்சி பெற்றார். பிராங் பெசன்ட் என்பவரை திருமணம் செய்தார். அது மகிழ்ச்சி தரவில்லை. கடும் வெறுப்பை சகித்து எதையும் எதிர் கொள்ளும் மன ஆற்றலை பெற்றார். சமூகத்தில், சீர்திருத்தத்தை வலியுறுத்தி, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். கட்டுரைகளும் எழுதி வந்தார்.
மக்களிடம் அடிப்படை கல்வியை பரப்பும் நோக்கத்தில், 1889ல் பிரம்ம ஞான சபையில் சேர்ந்தார். அதற்காக இந்தியா வந்து முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டார். அரசியல் அதிகாரம் இல்லா விட்டால், இந்தியர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது என உணர்ந்தார். இதையடுத்து, இந்தியாவில் ஆங்கிலயேரின் அடக்குமுறை அதிகாரத்தை எதிர்த்து போராட துணிந்தார். அடிமைத்தனத்துக்கு எதிராக போராடினார். ஆங்கிலேய கல்வி கொள்கையை எதிர்த்தார். சுதந்திரத்துக்காக உரிமைக் குரல் எழுப்பினார்.
இதற்காக துவங்கியதே, 'ஹோம் ரூல் இயக்கம்' என்ற தன்னாட்சி இயக்கம். திலகருடன் இணைந்து பணியாற்றினார். கோல்கட்டாவில், 1917ல் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தலைமை வகித்தார். தொடர்ந்து, காங்கிரசில் மிதவாதம் மற்றும் தீவிரவாத பிரிவு என பிரிந்திருந்தவர்களை இணைக்க முயற்சிகள் செய்தார்.
காங்கிரஸ் இயக்கம் இவரை தலைவராக தேர்ந்தெடுத்தது. அந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றினார். அந்நிய நாட்டில் பிறந்திருந்த போதும், எண்ணம், சொல், செயல் மற்றும் உணர்வால் இந்தியராக மாறி விட்டார். பல்வேறு வகைகளில் நாட்டுக்கு தொண்டாற்றிய அன்னிபெசன்ட், செப்., 20, 1933ல், தன், 86ம் வயதில் காலமானார்.

