
கருணையூர் கிராமத்தில், தனியாக வசித்து வந்தார் பெரியவர் மாணிக்கம். துணையாக ஜாக்கி என்ற நாயை வளர்த்து வந்தார். வீட்டின் பின்புறம், தென்னையும், முருங்கை மரமும் இருந்தன.
அணில் ஒன்று தென்னை மரத்தில் ஏறி விளையாடும். சிதறி கிடக்கும் உணவுகளை தின்று பசியாறும்; இது, ஜாக்கிக்கு பிடிக்கவில்லை.
'லொள்... லொள்...'
குரல் எழுப்பி விரட்டியது.
அணிலை எதிரியாகவே பார்த்தது ஜாக்கி.
ஒரு நாள் -
அவசரமாக வெளியூர் சென்றார் மாணிக்கம்.
போகும் முன், ஜாக்கியை மரத்தில் கட்டி போட்டார். பயமில்லாது அங்குமிங்கும் ஓடி விளையாடியது அணில். ஜாக்கியால் அதை ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்தம் எழுப்பி துரத்த முயற்சித்தது.
இரண்டு நாட்களாக வீடு திரும்பவில்லை மாணிக்கம்; கட்டிப்போட்டிருந்த ஜாக்கிக்கு பசி அதிகமானது. அது, 'ஊ... ஊ...' என அழுதபடியே பொழுதை கழித்தது.
அன்று அதிகாலை -
தைரியமாக ஜாக்கியை நெருங்கியது அணில்.
எதிர்ப்பை தெரிவித்து துரத்த முயன்றது ஜாக்கி.
சற்று நேரத்தில் வாயில் கவ்வி வந்த ரொட்டித்துண்டை ஜாக்கி முன் போட்டது அணில். மீண்டும் மற்றொரு ரொட்டித்துண்டை எடுத்து வந்தது.
பசி தீர்ந்ததும் வாலை ஆட்டி அணிலுக்கு நன்றி தெரிவித்தது.
அன்று முதல், அணிலும், ஜாக்கியும் நட்புடன் விளையாடி அன்பை பொழிந்தன.
குழந்தைகளே... எதிரியையும், அன்பு என்ற ஆயுதத்தால் வென்று நட்பு பாராட்ட முடியும்.
ஜான் சாலோமன்

