
தேவகோட்டை என்னும் நாட்டை ரிஷிபதேவன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு அசோகன் என்ற மகன் இருந்தான். அவனை மிகவும் செல்லமாக வளர்த்தார் மன்னர். ஆனால், அவனோ மன்னரிடம் அடிக்கடி சண்டை போடுவான்.
ஒருநாள்-
வழக்கம்போல், அசோகன் தந்தையிடம் சண்டை போட்டான். இறுதியில் கோபம் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினான். வேறு நாட்டை அடைந்த அவன் அங்குள்ள அரண்மனையில் பணியாளனாகச் சேர்ந்தான். அவன் இளவரசன் என்பது யாருக்கும் தெரியாது. ஏன் மன்னருக்கும் கூட தெரியாது. இப்படியே நாட்கள் சென்றன.
ஒருநாள்-
உண்டு முடித்த அரசர் கை கழுவதற்காக வந்தார். தண்ணீர் எடுத்து அவர் கைகளில் ஊற்றினான் அசோகன்.
தன் பழைய உயர்ந்த நிலையையும், இப்போது உள்ள நிலையையும் நினைத்துப் பார்த்தான். தந்தையிடம் சண்டை போட்டு வந்ததால் ஏற்பட்ட நிலைமையை எண்ணி வருந்தினான். அவன் கண்களில் தண்ணீர் வழிந்தது.
இதைப் பார்த்த அரசர், ''நீ ஏன் அழுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டார்.
அனைத்தையும் சொன்னான் இளவரசன்.
அவன் உண்மையில் இளவரசன்தானா என்பதை அறிய விரும்பினார் அரசர்.
''மாலையில் நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பேன். அப்போது என் அறைக்கு வா,'' என்றார்.
அவனும் குறிப்பிட்ட நேரத்தில் அரசரின் அறைக்குச் சென்றான்.
அவனைப் பார்த்த அரசர், ''நீ இளவரசன் என்கிறாய். விதவிதமான உணவு வகைகளை உண்டு இருப்பாய். பல வகையான கோழி இறைச்சியைச் சமைத்து வைத்திருப்பார்கள். நீயும் சாப்பிட்டு இருப்பாய் அல்லவா?'' என்றார்.
''ஆமாம், நான் சாப்பிட்டு இருக்கிறேன்,'' என்றான்.
''கோழியில் எந்தப் பகுதி சுவையாக இருக்கும்?'' என்று கேட்டார் அரசர்.
''தோல்தான்!'' என்றான் அசோகன்.
மகிழ்ந்த அரசர், ''நீ இளவரசன்தான். உனக்குப் பொறுப்புள்ள பெரிய பதவி தருகிறேன்,'' என்று கூறிய அரசர், இளவரசனுக்கு பெரிய பதவியை தந்தார்.
ஒரு நாளில் அவன் பெரிய பதவி பெற்றதை அறிந்து பொறாமைக் கொண்டான் இன்னொருவன்.
அவனைத் தனியே சந்தித்து, ''என்ன நடந்தது? எப்படி இவ்வளவு பெரிய பதவி கிடைத்தது? அரசரின் நன்மதிப்பை எப்படிப் பெற முடிந்தது?'' என்று கேட்டான்.
அவனும் நடந்ததை எல்லாம் சொன்னான்.
மறுநாள் அரசர் கை கழுவ வரும் போது தண்ணீர் ஊற்றும் முறை இன்னொருவனுக்கு வந்தது.
அரசருக்குத் தண்ணீர் ஊற்றும் போது கண் கலங்க நின்றான்.
''என்ன குறை? ஏன் கண்ணீர் விடுகிறாய்?'' என்று அன்புடன் கேட்டார் அரசர்.
''நான் ஒரு இளவரசன். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இங்கே பணியாளாக இருக்கிறேன். என் நிலையை நினைத்துப் பார்த்தேன். அழுகை வந்து விட்டது,'' என்று கதை விட்டான்.
''நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது என் அறைக்கு வா,'' என்றார் அரசர்.
மகிழ்ச்சியுடன் அரசரின் அறைக்குச் சென்றான் அவன்.
அவனிடம் நீண்ட நேரம் பேசிய அவர், ''நீ வகைவகையான உணவுகளைச் சுவைத்து இருப்பாய். ஆட்டு மாமிசத்தில் மிகவும் சுவையான பகுதி எது?'' என்று கேட்டார்.
உடனே அவன், ''தோல்!'' என்றான்.
கோபம் கொண்ட அரசர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
''என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உனக்கு இங்கே வேலை இல்லை,'' என்று அவனை விரட்டினார் அரசர்.
'பேராசைப்பட்டு உள்ள வேலையும் போயிற்றே' என்று எண்ணி வருந்தினான்.

