
வாழ்வின் ஒவ்வொரு எபிஸோடையும் சும்மா எகிறி அடிச்சு கொண்டாடுவோம்!
நல்ல தண்ணீரின் நலன்கள்!
நம் ஆரோக்கியத்தின் மிக முக்கிய அடிப்படை நல்ல தண்ணீர்.
இதோ நல்ல தண்ணீரில் நலமடைந்த விஷயம் ஒன்று இங்கே...
சீனாவில், ஹீயான்ஸ்லோ கிராமத்தில் வாழும், 'ரெட்யாவ்' இனக்குழு பெண்களின் கூந்தல் கிடுகிடுவென வளர்ந்து தொங்குகிறது.
அவர்களின் குறைந்தபட்ச கூந்தல் அளவே மூன்று அடிகள்.
அதற்கான காரணத்தை கேட்டால், அந்த கிராமத் தில் ஓடும் சிறு ஆற்றை கைகாட்டுகின்றனர்.
முடி வளர்ச்சிக்கான மகத்துவம், அந்த ஆற்றில் ஓடும் நீரில்தான் இருக்கிறது. ஏனெனில், காலங்காலமாக இந்த ஆற்றில் மட்டுமே தலை முடியை நனைத்து, குளித்து வருகிறோம். பெண்களுக்கு மட்டுமல்லாமல், 'ரெட்யாவ்' இன ஆண்களுக்கும் கூட நீளமான முடி வளர்கிறது. அதற்கும் இந்த ஆறுதான் காரணம் என்கின்றனர்.
ஆறுன்னா என்னன்னு கேட்கும் நிலையில் இருக்கிறோம் நாம்!
இயற்கையை நிலை நாட்டினால் தான் மனிதன் நன்றாய் வாழ முடியும்.
கடவுளே கோடி வேண்டும்!
ஒருவர், 'லாட்டரியில் கோடி ரூபாய் விழ வேண்டும்' என தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார். நாள், வாரம், மாசம் ஏன் வருடமும் ஓடிவிட்டது. விழவே இல்லை. வெறுத்து போய் ஒரு நாள் கடவுளிடம் சண்டைக்கு போனார்.
அவனெதிரே தோன்றிய கடவுள், 'பரிசு வேணும்னா முதல்ல சீட்டு வாங்குடா முட்டாள். சீட்டே வாங்காமல் பரிசு எப்படி விழும்?' எனக் கேட்டார்.
புத்தகத்தில் கன்றுக்குட்டி தோலும் - நாய் காதும்!
புத்தங்களை வாசிக்கும்போது விட்ட பக்கங்களில் இருந்து மறுபடியும் தொடர அல்லது குறிப்புகளை எடுக்க, அந்தப் பக்கங்களில் செருகி வைக்கும் விஷயம்தான் புக்மார்க்!
அது கெட்டிக்காகிதத்தில் செய்ததாகவோ அல்லது மென்கயிறாகவோ இருக்கலாம்.
தலையணை சைஸ் புத்தகத்தில் வைக்க, இலவச இணைப்பு போல, 'பைண்டிங்' செய்யும்போதே இந்த புக்மார்க்கை சேர்த்து விடுவர்.
கி.பி.6ம் நூற்றாண்டிலேயே எகிப்தின் பாபிரஸ் புத்தகங்களில் (Coptic Codex) கன்றுக்குட்டி தோல்களால் செய்த, புக்மார்க்கு களைப் பயன்படுத்தி இருக்கின்றனர். 16ம் நூற்றாண்டில் ராணி எலிசபெத் காலத்தில் தயாரிக்கப்பட்ட பைபிள்களுக்கு பட்டு நூலில், 'புக்மார்க்' செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.
'ராயல் மியூசம் ஆப் புரூனே'யில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த யானை தந்தத்தால் செய்த ஓர், 'இந்தியன் புக்மார்க்' இருக்கிறது. பிற்காலத்தில் அச்சுத் தொழில் நுட்பம் வளர்ந்தபோது விதவிதமான, ரசனையான, கிரியேட்டிவ்வான, தனித்தனி புக்மார்க்குகள் புத்தக மார்க்கெட்டில் கிடைத்தன; கிடைக்கின்றன.
புக்மார்க் இல்லாத புத்தகங்களின் பக்கங் களை ஓரத்தில் மடித்து விட்டு மூடி வைக்கும் பழக்கம் நமக்கு உண்டு அல்லவா? அதை ஆங்கிலத்தில் Dog ears என்பர். பார்ப்பதற்கு நாய் காதுபோல இருப்பதால் அந்த பெயர். சிலருக்கு புத்தகங்களை அப்படி மடிப்பது பிடிக்காது. பாய்ந்து கடிக்க வருவர்.
அது ஏன் என இப்போது புரிகிறதுதானே... 'புக்மார்க்' எனச் சொன்னால் இளைய தலைமுறைக்கு சட்டென ஞாபகம் வருவது க்ரோகிலோ, சபாரியிலோ இணைய பக்கங்களை சேமித்து வைப்பதைத்தான்.
இணையம் பயன்பாட்டுக்கு வந்தபோது அச்சு ஊடகத்தில் என்ன எல்லாம் சொல் பயன்பாட்டில் இருந்ததோ அதை அப்படியே காப்பி அடித்து கொண்டது.
உதாரணம் இந்த, 'புக்மார்க்
'ட்வீட்டி... ட்வீட்டி!
'நாளையில் இருந்து படிக்கிறேன்'னு சொன்னவனும், நாளையில் இருந்து குடிக்கலைனு சொன்னவனும்' ஜெயித்தது இல்லை.
ஹி... ஹி....
- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

