
அல்லம்பட்டி என்னும் கிராமத்தில் உழவன் ஒருவன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர். அந்த கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு. அதனால், உழவனும், அவனது மகன்களும் வீட்டிற்குத் தேவையான தண்ணீரை நீண்ட தொலைவு நடந்து சென்று கொண்டு வந்தனர். இந்த வேலையே அவர்களுக்குப் பெரிய வேலையாக இருந்தது.
ஒருநாள்-
தன் மகன்களை அழைத்த உழவன், ''நாம் ஏன் தண்ணீருக்காக இவ்வளவு துன்பப்பட வேண்டும். நம் வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு கிணறு தோண்டினால் என்ன?'' என்று கேட்டான்.
மகன்களும் கிணறு தோண்ட சம்மதித்தனர்.
நால்வரும் முழு மூச்சாகக் கிணறு தோண்டினர். ஒரு நல்ல நாளில் கிணற்றில் நீர் சுரந்தது.
அதைக் குடித்துப் பார்த்த உழவன், ''நீர் சுவையாக உள்ளது. இந்த கிணறு தோண்டியதால் நம் குடும்பத்திற்குப் புதிதாக ஒருவன் கிடைத்து உள்ளான்,'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.
''இவனால் நம் வேலைகள் பாதியாகக் குறைந்து விடும்,'' என்றான் ஒரு மகன்.
''இனி நாம் நால்வரும் அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வரத் தேவையில்லை. இவன் அதைப் பார்த்துக் கொள்வான்,'' என்றான் இன்னொருவன்.
''எப்படியோ இவன் நமக்குக் கிடைத்தது இறைவன் அருள்தான்,'' என்றான் மூன்றாமவன்.
இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தான் பக்கத்து வீட்டுக் காரன். அவர்கள் பேசியதன் உட்பொருளை முட்டாளான அவன் அறியவில்லை.
அவர்கள் கிணற்றைத் தோண்டும் போது, கிணற்றுக்குள் இருந்து ஒருவன் கிடைத்து இருக்கிறான் என்றே நம்பி விட்டான்.
தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம், ''என் பக்கத்து வீட்டுக்காரனும், அவன் மகன்களும் கிணறு வெட்டினர். என்ன அதிசயம் பாருங்கள். கிணற்றுக்குள் இருந்து ஒரு மனிதன் அவர்களுக்குக் கிடைத்து இருக்கிறான். அவன் அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் செய்கிறான். இதை அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது என் இரண்டு காதாலும் கேட்டேன்,'' என்று ரகசியமாகச் சொன்னான்.
வதந்தி பரவுவதற்குக் கேட்கவா வேண்டும். மறுநாளே ஊர் முழுவதும் கிணற்றில் கிடைத்த மனிதனைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.
''அவன் பத்தடி உயரம். பத்து ஆட்கள் செய்யும் வேலையை அவன் ஒருவனே செய்து முடித்து விடுகிறான். அவன் வந்த பிறகு உழவனோ, அவன் மகன்களோ வேலை செய்ய வெளியே போவதே இல்லை. அவனே எல்லா வேலைகளையும் செய்து விடுகிறான்,'' என்று ஒருவன் கதை விட்டான்.
கிணற்றில் கிடைத்த மனிதனைப் பற்றிய செய்தி அரசரின் காதுகளுக்கும் எட்டியது. அவரால் நம்பவும் முடியவில்லை; நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
உழவனை அரண்மனைக்கு அழைத்து வரச் செய்தார் அரசர். உழவனும் அரண்மனைக்கு வந்தான்.
''கிணறு தோண்டியதால் உன் குடும்பத்தில் புதிதாக ஒருவன் வந்துள்ளதாகச் சொன்னாயா? கிணற்றில் ஒருவன் உண்மையிலேயே கிடைத்தானா? உண்மையைச் சொல்,'' என்று கேட்டார் அரசர்.
''அரசே! நான் அப்படிச் சொன்னது உண்மைதான். ஆனால், கிணற்றிலிருந்து மனிதன் யாரும் எனக்குக் கிடைக்கவில்லை. கிணறு தோண்டும் போது அதற்குள் எப்படி ஒருவன் உயிரோடு புதைந்து இருக்க முடியும்?'' என்று கேட்டான் உழவன்.
''நீ சொல்வது எனக்கு விளங்க வில்லையே?'' என்றார் அரசர்.
''அரசே! கிணறு தோண்டி முடித்ததும் நான் மகிழ்ச்சி அடைந்தேன். என் மகன்களைப் பார்த்து, இனி நாம் தண்ணீருக்காக அலைய வேண்டாம்; நம் வேலைப் பளு குறைந்து விட்டது என்ற குறிப்பில், 'புதிதாக ஒருவன் கிடைத்து உள்ளான் என்றேன்.
''மகன்களும் என் கருத்தை ஒப்புக் கொண்டு கிணற்றை பாராட்டிப் பேசினர்,'' என்று நடந்ததை விளக்கமாகச் சொன்னான் உழவன்.
உண்மையை உணர்ந்த அரசர், 'எவனோ ஒரு மடையன் இவர்கள் பேசியதன் பொருளை உணராததால் வந்த குழப்பம் இது. இதனால் நாமும் கேலிக்கு உள்ளாகி விட்டோமே' என்று வருந்தினார்.
அன்றிலிருந்து வதந்தி பரப்புவர்களுக்கு தண்டனை என்று மன்னர் அறிவித்தார்.

