
திருப்பூர், நஞ்சப்பா உயர்நிலைப் பள்ளியில், 1946ல், 5ம் வகுப்பு படித்தபோது நடந்த நிகழ்வு...
அன்று, நண்பன் ராஜாராமுடன் பள்ளி கட்டடம் அருகே, சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தேன். அப்போது, 'யாருக்கு அதிக துாரம் போகும்' என போட்டி ஏற்பட்டது. அந்த வழியாக வந்த தலைமை ஆசிரியர் ஆர்.ஜி.சுப்பிரமணியம் இதை கண்டும் காணாதது போல் சென்று விட்டார்.
வழிப்பாட்டு கூட்டம் முடிந்ததும் அழைத்தார். பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கியதுடன், வலது கையில் மூன்று அடியும், இடது கையில் மூன்று அடியும் தண்டனையாக தந்தார். அன்றே அசுத்த செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
படிப்பை முடித்து நீண்ட காலத்துக்கு பின், 2002ல் திருமண நிகழ்வு ஒன்றில் அவரை சந்திக்க நேர்ந்தது. என்னை அறிமுகம் செய்ததும் மகிழ்ந்து பாராட்டினார்.
தற்போது, என் வயது, 88; கண்டிப்புடன் நல்ல பழக்கத்தை கற்றுத்தந்த அந்த தலைமை ஆசிரியர் நுாறாண்டு வாழ்ந்து மறைந்தார். பொது இடத்தில் அசுத்தம் செய்வதில்லை என எடுத்திருந்த சபதத்தை இன்றும் நிறைவேற்றி வருகிறேன்.
- சி.எஸ்.ராமகிருஷ்ணன், புதுச்சேரி.
தொடர்புக்கு: 94420 72619

