
திருவாரூர் மாவட்டம், கோட்டூர், ரங்கநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில், 1976ல், 5ம் வகுப்பு படித்தபோது வகுப்பாசிரியராக இருந்தார் வேத.ரத்தினம். அன்று என் பிறந்தநாள் என்பதை காலையில் அவரிடம் தெரிவித்தேன்.
வழிப்பாட்டு கூட்டத்தின் போது, ஒரு சால்வையை தலைப்பாகையாக எனக்கு அணிவித்தார். சந்தன மாலை போட்டு, பிறந்த நாள் வாழ்த்து பாட ஏற்பாடு செய்திருந்தார். பின், ஒவ்வொரு மாணவராக கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். மிகுந்த நெகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்தேன். அது முன்னேற்றத்துக்கு துாண்டுகோலாக அமைந்தது.
என் வயது, 56; அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். என் பள்ளியில் எந்த மாணவருக்கு பிறந்தநாள் என்றாலும் தலைப்பாகை, சந்தன மாலை அணிவித்து வாழ்த்து பாடுவதை வழக்கமாக்கியுள்ளேன். அந்த தலைமை ஆசிரியர் ஏற்றிய தீபத்தை அணையாமல் பாதுகாத்து வருகிறேன்.
- வேத.புருஷோத்தமன், திருவாரூர்.
தொடர்புக்கு: 93608 30473

