
மெய்யூர் அழகிய கிராமம்; அந்த ஊர் எல்லையில் சிறிய ஆறு ஓடியது; ஆற்றங்கரையில், அரச மரம் இருந்தது; வெயில் காலத்தில் இலைகள் உதிர்வதும், மழைக்காலத்தில் துளிர்விடுவதும் இயற்கையாக நடந்தது.
அந்த மரத்தடியில் எறும்பு புற்று ஒன்று இருந்தது. இரை தேடிய எறும்புகள் ஆற்றின் ஓரம் ஊர்ந்து சென்றன.
இலையுதிர் காலமானதால், ஆற்றில் விழுந்து மிதந்தன சருகுகள்.
உதிரும் இலைகளைப் பார்த்து நக்கலாக சிரித்த எறும்புகள், 'அட... காய்ந்த இலைகளே, உங்களால் யாருக்கும் எந்த பயனும் இல்லை; எங்களை பார்... கால நிலைக்கு ஏற்ப சுறுசுறுப்பாக இயங்கி, இருப்பிடத்தை மாற்றி உணவை சேமிக்கிறோம்...' என, பெருமை பேசின.
பதில் கூறாமல், பொறுமையுடன் ஆற்று நீரில் மிதந்தன சருகுகள்.
அன்று மாலை பலத்த காற்று வீசியது.
கரையோரம் ஊர்ந்த எறும்புகளில் சில ஆற்று நீரில் விழுந்தன.
இரைக்காக காத்திருந்த மீன்கள், அவற்றை விழுங்க விரைந்தன.
மிதந்த சருகுகளில் ஏறி அதிர்ஷ்டவசமாக தப்பின எறும்புகள்.
அப்போது, 'நாங்கள் இல்லையெனில் மீன்களுக்கு இரையாகியிருப்பீர்... இப்போது புரிந்ததா... இறைவன் படைப்பில் எதுவும் மட்டம் இல்லை; அனைத்தும், ஏதோ ஒரு வகையில் உயிரினங்களுக்கு பயன்படுகின்றன...
'உலகில் எல்லா உயிரினங்களும் ஒன்றை யொன்று சார்ந்து இயங்கு கின்றன; இதில், உயர்வு, தாழ்வு எதுவும் இல்லை...'
மென்மையாக அறிவுரை கூறின சருகுகள்.
தவறை உணர்ந்து, சருகுகளுக்கு நன்றி கூறி கரைக்கு சென்றன எறும்புகள்.
குழந்தைகளே... உலகில் அனைத்து பொருட்களும் உயர்ந்தது தான்; உயர்வு, தாழ்வு என்ற பேதமே கூடாது.
கவி.வானவில் மூர்த்தி

