sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

இளஸ்... மனஸ்! (84)

/

இளஸ்... மனஸ்! (84)

இளஸ்... மனஸ்! (84)

இளஸ்... மனஸ்! (84)


PUBLISHED ON : மார் 06, 2021

Google News

PUBLISHED ON : மார் 06, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புமிக்க பிளாரன்ஸ்...

என் வயது 40; பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு ஒரே பெண் குழந்தை; அவளுக்கு, 2 வயதான போது, கணவரிடமிருந்து பிரிந்தேன். மகளுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறேன். இப்போது மகளுக்கு, 17 வயது; பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கிறாள்.

எப்போதுமே தரையைப் பார்த்து நடக்க மாட்டாள்; அடிக்கடி தடுக்கி விழுவாள். எதாவது, விழாவுக்கு அழைத்துச் சென்றால், வானத்தை பார்த்தபடி வருவாள். யாருடைய வணக்கத்தையும் பெற மாட்டாள்; வணக்கமும் கூற மாட்டாள்.

எப்போதும், 'உம்' என்று இருப்பாள்; சிரிப்பு என்பது அவள் அகராதியில் இல்லை.

எந்த கேள்வி கேட்டாலும், எரிச்சலாய் பதில் சொல்வாள்; சாப்பாட்டில், ஆடை அணிவதில் விருப்பம் இல்லை.

இவளை எப்படி திருத்துவது... நல்ல அறிவுரை கூறவும்.

அன்புள்ள அம்மா...

விவாகரத்து ஆனதால், கணவர் வீட்டு உறவினரோ, உங்கள் தரப்பு உறவினரோ, உடன் பணிபுரியும் தோழமைகளோ, உங்கள் வீட்டுக்கு வர மாட்டார்கள் என எண்ணுகிறேன். வருவதையும் ஊக்குவிக்க மாட்டீர்கள் என கருதுகிறேன்.

பள்ளி விட்டால் வீடு; வீட்டை விட்டால் பள்ளி என, ஒத்தைக் குரங்காய் வாழ்ந்து வருவது உங்கள் கடிதத்தில் தெரிகிறது. மகளுக்கு தந்தையின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கவில்லை; தனிமை அவளை வெகுவாய் பாதித்துள்ளது. அவள் மனம் வெறுமையில் தத்தளிக்கிறது.

இனி செய்ய வேண்டியவைகளைப் பார்ப்போம்...

பிறந்த வீட்டு சொந்தங்களுடன், மகளை பழக விடவும். சொந்த பந்தங்கள், உறவுகள் உங்கள் வீட்டுக்கு வரட்டும். உறவின் நெகிழ்ச்சிக்கும், கலகலப்பான பேச்சுக்கும், நகைச்சுவைக்கும், தகவல் பரிமாற்றங்களுக்கும், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்வதற்கும், சிறப்பான உறவு பாலம் அமைக்கவும்.

மகளிடம் கனிவாக, 'அன்புமகளே... வானத்தை பார்த்து நடக்காதே... கீழே, பக்கவாட்டுகளில், துாரத்தே என, 360 டிகிரியிலும், உன் பார்வை சுழலட்டும். தரையில் பாம்பு ஊர்ந்துக் கொண்டிருக்கலாம்; சாக்கடை இருக்கலாம். பாம்புக் கடி பட்டு விடாமல், சாக்கடையில் விழுந்து விடாமல், நம்மை நாம் தான் தற்காத்து கொள்ள வேண்டும்...'- என அறிவுரை கூறலாம்.

'நெருங்கியவர்களைப் பார்த்த உடன், ஹாய்... ஹலோ, வணக்கம் என்று கூறு... அவர்கள் முதலில் வணக்கம் கூறினால், தலையசைத்து புன்முறுவல் செய்து, பதில் வணக்கம் செய். யாரிடம் பேசினாலும், அவர்களின் இரு கண்களை பார்த்து பேசு...

'முகபாவங்களும், உடல் மொழியும், 'பாசிட்டிவ்'வாக அமையட்டும்; வாழ்க்கையில் வெற்றி பெற இடது கையில், அணுகுமுறையையும், வலது கையில் கூர்நோக்கும் ஏந்து; எதிராளியை உள்ளும் புறமும், கூர்நோக்கி எடை போட கற்றுக்கொள்...' -என, தெளிவாக ஆலோசனை வழங்கவும்.

இயந்திர கதியாய் சமைக்காமல், மகளின் விருப்பத்தை கேட்டறிந்து, சுவையாய் சமைத்து பரிமாறவும். அவளுக்குரிய ஆடைகளை தோழிகள் புடை சூழ தேர்ந்தெடுக்கட்டும்.

தினமும், ஒருமணி நேரம் பள்ளியில் நடந்ததை மகளிடம் கேட்டு, அந்த விவரத்தையும் உரையாடவும்.

கணவருடன் உறவு சட்டப்படி துண்டிக்கப்பட்டிருக்கலாம். மகளுக்கு அவர் தந்தை என்கிற உறவுமுறையை யாரால் மறுக்க முடியும். மகள் விரும்பினால், தந்தையை மாதத்துக்கு ஒருமுறை சந்திக்க ஏற்பாடு செய்யவும்!

மகளுடன் ஒரே அறையில் துாங்கவும். அக்கம் பக்கத்து குடியிருப்பில் வசிப்பவர்களுடன் நட்பு பாராட்டவும்.

மகளின் நடவடிக்கைகளை குற்றம் சாட்டாது அனுசரணையாக இருக்கவும். இவற்றுக்கு முதிர்ந்த பெண்களின் அனுபவ அறிவு மிகவும் பயன்படும். அதை பெற முயற்சிக்கவும்.

- அன்புடன், பிளாரன்ஸ்






      Dinamalar
      Follow us