
சென்னை, பல்லாவரம், மறைமலை அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1999ல், 9ம் வகுப்பு படித்தேன். தமிழ் ஆசிரியர் மகரிஷி வகுப்பு ஆசிரியராகவும் இருந்தார். பாடத்தை கதைகளுடன் விளக்கமாக போதிப்பார்.
எழுத்து பயிற்சிக்காக, இரட்டை வரி நோட்டு புத்தகத்தில், வீட்டுப்பாடம் எழுதி வர சொல்வார். ஒரு நாள், சில குறள்களை விளக்கி வீட்டுபாடமாக கையெழுத்து பயிற்சி செய்யும்படி கூறினார்.
புத்தகத்தில், பாடத்தை பத்தியாக எழுதுவது போல், குறளையும் எழுதி எடுத்து வந்தேன். அதை பெருமையுடன் காட்டினேன். இருபாலரும் படிக்கும் பள்ளி என்பதால், வகுப்பறையில் எதையும் அவர் சொல்லவில்லை. 
பின் தனியாக அழைத்து, எழுதிய முறை, பிழை என சுட்டிக்காட்டி, 'புத்தகத்தில் உள்ளது போல், அடி பிறழாமல் எழுத வேண்டும்' என்று குறிப்பு எழுதி தந்தார். அன்று முதல், அதுபோல் பயிற்சி செய்தேன். திருக்குறள் மீது, தனி ஆர்வம், அக்கறையை அது உண்டாக்கியது. 
தற்போது, என் வயது, 36; அரசு துவக்கப்பள்ளி ஆசிரியையாக பணியாற்றுகிறேன். அந்த ஆசிரியர் காட்டிய வழியை பின்பற்றி மாணவ, மாணவியருக்கு போதித்து வருகிறேன்.
- சா.ரஷீனா, திருவண்ணாமலை.
தொடர்புக்கு: 97894 46224

