
பழனி, சின்னக்காந்திபுரம் துவக்கப் பள்ளியில், 1996ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த அபூர்வ கற்றல் நிகழ்வு!
வகுப்பாசிரியர் காந்தி சிறந்த ஓவியராகவும் இருந்தார். அன்று அவர் வரைந்திருந்த நான்கு படங்களை, கரும்பலகை ஓரமாக சுவரில் மாட்டினார்.
முதல் படத்தில், ஒருவன் இரு கண்களை கைகளால் மூடி இருந்தான்.
இரண்டாம் படத்தில், இரு காதுகளை மூடியபடி இருந்தான். மூன்றாம் படத்தில் வாயை மூடியிருந்தான் மற்றொருவன். நான்காம் படத்தில் சண்டையிட்ட நிலையில் இருந்தனர் இருவர்.
அவற்றை சுட்டிக்காட்டி, 'இது தான் இன்றைய பாடம்... நன்றாக சிந்தித்து பதில் சொல்லுங்கள்...' என்றார். ஒன்றும் விளங்கவில்லை. பத்து நிமிடங்களுக்குப் பின், பழந்தமிழ் புலவர் அவ்வையாரின், மூதுரைப் பாடல் ஒன்றை கரும்பலகையில் எழுதினார். 
அது...
'தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - -தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது...' என இருந்தது.
எழுதி முடித்ததும், 'ஒவ்வொரு படமும் முறையே, பாடலின் ஒரு வரியை விளங்க வைக்கும்...' என்றார். இரண்டையும் ஒப்பிட்டதும் எளிதில் பொருள் விளங்கியது. 
எனக்கு, 36 வயதாகிறது; தனியார் பள்ளியில் தமிழாசிரியையாக பணிபுரிகிறேன். அந்த ஆசிரியர் காட்டிய வழியில், பாடம் நடத்தி வருகிறேன். 
- சி.நாகமணி, பழனி.

