
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, இந்து உயர்நிலைப் பள்ளியில், 1978ல், 9ம் வகுப்பு படித்தபோது, நண்பர்கள், டி.பாஷ்யம், ஆர்.வி.முரளி, வெங்கட்ரமணி, எஸ்.ஈஸ்வரன் ஆகியோருடன், அக்ரஹாரத்தில் விளையாடி கொண்டிருந்தேன். 
பெருமாள் கோவில் விசேஷத்திற்காக சப்பரம் துாக்கி வந்தனர். பின்னால் தீப்பந்தம் ஒன்றை தாங்கி, மூப்பு காரணமாக மெல்ல நடந்து வந்தார் ஒருவர். அவருக்கு உதவும் நோக்கில், 'தாத்தா.... நான் எடுத்து வரட்டுமா...' என கேட்டேன்.
உற்று பார்த்தபடி, 'தம்பி... நீ எல்லாம் துாக்க கூடாது...' என்றார். விசாரித்த போது, குறிப்பிட்ட ஜாதியினர் மட்டும் தான் தீப்பந்தம் துாக்க வேண்டும் என விளக்கினார். வியப்பு ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்குப் பின் வகுப்பில் தாவரவியல் ஆசிரியர், எஸ்.லட்சுமிநாராயணன் பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஒருவனிடம் சில கேள்விகள் கேட்டார். விடையளிக்க முடியாமல் திணறியவனை, 'நீ படிக்க லாயக்கில்லை... பெருமாள் கோவிலில் தீவட்டி துாக்கத்தான் லாய்க்கு...' என கண்டித்தார்.
இடைமறித்த நான், அவன் ஜாதி அடையாளத்தை கூறி, 'சார்... இவன், தீவட்டி துாக்க முடியாது...' என சொன்னேன். அது பற்றிய பேச்சை தவிர்த்து, வகுப்பு இடைவேளையில் தனியே அழைத்தவர், 'பொது இடங்களில், ஜாதி பெயர் குறிப்பிட்டு பேச கூடாது...' என அறிவுரை கூறினார். அதை பின்பற்ற துவங்கினேன்.
என் வயது, 59; மத்திய அரசு பணியில் இருக்கிறேன். ஜாதி பெயர்களை உச்சரிக்க வேண்டிய தருணங்களில் அந்த ஆசானின் அறிவுரையே மனக்கண்ணில் வருகிறது.
- ரா.காளீஸ்வரன், தூத்துக்குடி.
தொடர்புக்கு: 81243 56818

