தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அரிகோ! (3)

அரிகோ! (3)

அரிகோ! (3)


PUBLISHED ON : ஜூன் 26, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்த மிகப் பெரிய கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே வெளியே எடுக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாமல் எப்படி அரிகோவால் பிய்த்து வெளியே எடுக்க முடிந்தது என்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

அந்தக் கட்டியை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக, பத்திரமாக பேப்பரில் சுற்றி எடுத்துக் கொண்டார்.

'எனது அனுபவத்தில் இப்படியொரு மருத்துவ அதிசயத்தைப் பார்த்ததே இல்லை,'' என்று வியந்து கூறிக் கொண்டே வெளியேறினார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பெண் பூரணமாகக் குணமடைந்து விட்டாள். இது அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் பரவியது. இதனை யடுத்து, தீராத நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்கள் எல்லாரும் அரிகோவிடம் சிகிச்சை பெற்றால் பூரண குணம் கிட்டும் என்ற நம்பிக்கை கொண்டனர்.

ஒரு சில தினங்கள் கடந்திருந்தன.

காலையில் வீட்டுக் கதவை திறந்தபோது அங்கே சுமார் நூறு பேர் திரண்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார் அரிகோ.

'என்ன வேண்டும் உங்களுக்கு?'' என்று அதிர்ச்சியும், குழப்பமுமாகக் கேட்டார் அரிகோ.

'எங்கள் நோயைத் தாங்கள் குணமாக்க வேண்டும்,'' என்றனர் அவர்கள் கோரஸாக.

இதன்பின்னர் நடந்தது எதுவும் அரிகோவுக்குத் தெரியாது. அவர் முற்றிலும் தன்னிலை இழந்திருந்தார். அவர் கிட்டத்தட்ட மருத்துவர் ப்ரிட்ஸின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டிருந்தார்.

நோயாளிகளை ஒவ்வொருவராக வரச் சொன்னார். அவர்களிடம் என்ன நோய், எங்கே வலிக்கிறது என்றெல்லாம் எதுவுமே கேட்க வில்லை. சமையலறைக் கத்தியையும், கத்தரிக் கோலையும் பயன்படுத்தி ஓரிரு விநாடிகளில் அறுவை சிகிச்சையை முடித்தார். படுவேகமாக மாத்திரை, மருத்துகளை ஒரு சீட்டில் எழுதிக் கொடுத்தார்.

அறுவை சிகிச்சை செய்தபோது அநாவசியமாக ரத்தப் போக்கு எதுவும் ஏற்படவே இல்லை. கத்தியை விட்டுக் குடைந்தபோது யாருக்கும் வலிக்கவும் இல்லை. கத்தியை சுடுநீரில் நன்றாகச் சுத்தம் செய்யவும் இல்லை. ஆனால், அத்தனை பேருக்கும் நோய் குணமாகி இருந்தது.

இவ்வாறு அந்தச் சுற்றுவட்டாரத்தில் அதிசயங்களை நிகழ்த்தி வந்த அரிகோவை இதற்கு அடுத்ததாக அவர் நடத்திய நிகழ்வு, நாடு முழுவதும் பிரபலமடையச் செய்தது.

அது என்ன தெரியுமா?

சுமார் ஐந்தாண்டுகள் ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கியிருந்த பிரேசில் 1950ம் ஆண்டு தான் ஜனநாயக முறைக்குத் திரும்பி இருந்தது. எனவே, தேர்தல் களைகட்டத் தொடங்கியது. பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர் லூசியோ பிட்டன் கோர்ட் என்பவர் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி இருந்தார்.

நாட்டின் அதிபர் தேர்தலில் ஜெடுலியோ வர்காஸ் என்பவர் போட்டியிட்டார். அவருக்காகவும். தனக்காகவும் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக நாடு முழுவதும் பயணம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பிட்டன் கோர்ட்டிற்கு இருந்தது.

தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்பாக தனது ஊரான ரியோடி ஜனரியோவில் வழக்கமாகப் பரிசோதித்துக் கொள்ளும் குடும்ப மருத்துவரை அணுகினார் பிட்டன் கோர்ட். அவரை முழு உடல் பரிசோதனை நடத்தியபோது நுரையீரல் புற்று நோய் பரவிப் படர்ந்து முற்றிய நிலையில் இருப்பது தெரியவந்தது.

இதனை பிட்டன் கோர்ட்டிடம் தெரிவித்த மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால், உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் எச்சரித்தார்.

ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளும்நிலையில் பிட்டன் கோர்ட் இல்லை. 'தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சுற்றிச் சுழலும் நேரத்தில் மருத்துவமனையில் படுத்துவிட்டால் என்னாவது?'' என்று கூறி, தேர்தல் முடிந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து கொள்வதாகக் கூறிவிட்டுப் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார்.

பிரச்சாரத்தின் ஒரு கட்டமாக அவர் வந்தது காங்கோனாய் டு காம்போ. அதாவது அரிகோவின் சொந்த ஊர்.

அந்த ஊரில் சுரங்கத் தொழிலாளர்கள் அதிகம். எனவே, தொழிற் சங்கத் தலைவரை வளைத்துப் போட்டால் மட்டுமே, அங்குள்ள ஒட்டுமொத்த வாக்குகளையும் கைப்பற்ற முடியும் என்பது அரசியலின் அரிச்சுவடி.

தொழிலாளர்களிடம் நல்ல செல்வாக்கு மிக்கவராக அப்போது அடையாளம் காணப்பட்டவர் அரிகோ. எனவே, அவரை நேரில் சென்று சந்தித்து ஆதரவை நாடினார் பிட்டன் கோர்ட். அரிகோவும் அதற்கு சம்மதித்தார். அத்துடன் பக்கத்து நகரமான ஹாரிசாண்டேவில் மிகப் பெரிய பேரணி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பேரணியில் பங்கேற்பதற்காக மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களைத் திரட்டிக் கொண்டு அங்கு வந்திருந்தார் அரிகோ. ஆனால், எதிர்பாராதவிதமாக பேரணி மறுநாளைக்கு ஒத்திப் போட வேண்டியதாகிவிட்டது. எனவே, அந்த நகரிலேயே அன்று அவர்கள் தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

அந்த நகரில் அபோன்சா பெனா என்னும் தெருவில் இருந்த பல மாடிகள் கொண்ட மிகப் பெரிய ஓட்டலில் அரிகோவும், பிட்டன் கோர்ட்டும் தங்குவதற்கு ஏற்பாடாகி இருந்தது.

அந்த ஓட்டலில் லிப்ட் வசதி உண்டு. எனவே, அவர்கள் இருவருக்கும் ஐந்தாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டது. ஆனால், லிப்ட் என்றாலே அரிகோவிற்கு அலர்ஜி. எனவே, தரை தளத்திலேயே அறை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அரிகோ தரை தளத்து அறையில் ஓய்வெடுக்க, மாடி அறையில் ஓய்வெடுத்தார் பிட்டன் கோர்ட்.

அலைச்சல் காரணமாக, அசதியாக, இருந்த பிட்டன், ஆழ்ந்து உறங்கினார். நள்ளிரவு நேரத்தில். பிட்டன் கோர்ட்டின் அறைக் கதவு திடீரென திறந்தது. வராந்தாவில் இருந்து கண்களைக் கூசச் செய்கிற அளவில் ஒளி நின்று அறைக்குள் நுழைந்தது.

பின்னர் ஒளி மறைந்து விட்டது. ஆனால், படுக்கை அருகே ஏதோ ஒரு உருவம் நிற்பது பிட்டன் கோர்ட்டுக்குத் தெரிந்தது. ஆனால், மங்கலான வெளிச்சத்தில் அந்த உருவத்திற்குச் சொந்தக்காரர் யார் என்பதை பிட்டனால் அடையாளம் காணமுடிய வில்லை. ஆனாலும் உருவத்தை வைத்து அது அரிகோ என்று புரிந்து கொண்டார்.

திடீரென்று அறையின் சுவிட்ச் போடப்பட்டு, வெளிச்சம் அறையை நிரப்பியது. ஆக, இப்போது தெளிவாகவே தெரிந்தது. அங்கே நிற்பது... அரிகோவே தான்!

'இவர் ஏன் இங்கு வந்தார்? நள்ளிரவில் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது எந்த விதமான முன் அனுமதியும் கேட்காமல் அறைக்குள் நுழைந்தது ஏன்?' பல்வேறு குழப்பங்கள் பிட்டன் கோர்ட் உள்ளத்தில் எழுந்து கேள்விக் குறிகளாக நிரம்பிக் கொண்டிருந்தன.

ஆனால், அவரது சந்தேகத்தைப் பற்றிய எந்த விதக் கவலையும் அரிகோவிடம் இருப்பதாகக் காணப்படவில்லை. அவர் வந்த வேலையை முடிப்பதிலேயே தீவிரமாக இருந்தார். அவர் கையில் பளபளக்கும் சிறிய சவரக் கத்தி ஒன்று இருந்தது. மேலும் அரிகோவின் கண்களில் ஏதோ ஒரு பளபளப்பும், தீவிரமும் தெரிந்தது.

இதைப் பார்த்து சற்றுக் குழம்பிய பிட்டன், சற்று நேரத்தில் மயக்கம் வருவதுபோல உணர்ந்தார்.

எனினும் இவை அனைத்தும் கனவு என்பதாகத் தான் பிட்டன் நினைத்தார். கனவானது உண்மை போலத் தனக்குத் தெரிவதாக அவர் கருதினார்.

திடீரென்று அரிகோ பேசத் தொடங்கினார். அவரது பேச்சு சற்று கரடுமுரடாகவும், ஜெர்மனிய தொனியுடன் கூடிய அதிகாரம் மிக்கதாகவும் இருந்தது.

''பிட்டன் கோர்ட், உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டது!'' இந்தக் குரல் தெளிவாகவே அவரது காதுகளில் விழுந்தது. ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என்பது நினைவில்லை. கனவு அத்துடன் விடைபெற்றுச் சென்றிருக்கலாம்.

தூக்கம் கலைந்து பிட்டன் கோர்ட் கண்விழித்த போது அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இரவில் விளக்கை அணைத்து விட்டுப் படுத்தது அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது.

அப்படியானால் இப்போது விளக்கு எரிந்து கொண்டிருப்பது எப்படி?

-3 தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us