PUBLISHED ON : ஜூன் 26, 2015

அரிசிபாளையம் என்னும் ஊரில் செல்லமணி என்ற கிழவர் இருந்தார். எப்போதும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து இருப்பார். அந்த வீதி வழியாக யார் சென்றாலும் சரி. அவர்களை நிறுத்தி ஏதேனும் கேள்விகள் கேட்பார். என்ன பதில் கிடைத்தாலும் விடமாட்டார். அவர்களைக் குழப்புவது போல மேலும் கேள்விகள் கேட்பார்.
பதில் சொல்ல முடியாமல் அவர்கள் தவித்தால் போதும், 'என்ன இது கூடவா தெரியவில்லை' என்று கேலி செய்து சிரிப்பார்.
அவருக்கு அஞ்சி அந்த வீதி வழியாக யாரும் செல்வது இல்லை.
பக்கத்துத் தெருவைச் சேர்ந்த வினிதாவும், ஆனந்தியும் அந்த வீதி வழியாக வந்தனர்.
அவர்களை பார்த்தார் கிழவர்.
'குழப்புவதற்கு ஆள் கிடைத்தனர். இன்றைய பொழுது இனிமையாகப் போகும்' என்று நினைத்தார்.
வினிதாவை பார்த்து, ''உன் தந்தை வீட்டில் இருக்கிறாரா? அவரைப் பார்க்க வரலாம் என்று இருக்கிறேன். எப்போது பார்க்கலாம்,'' என்று பேச்சைத் தொடங்கினார் கிழவர்.
'தொணதொணவென்று பேசும் இந்தக் கிழவரை குழப்ப வேண்டும். என்ன பதில் சொல்வது என்று சிந்தித்தாள் வினிதா.
''எங்கப்பா இப்போது வீட்டில் இல்லை. நிறைய பிணம் வீட்டில் சேர்ந்து விட்டது. எல்லாவற்றையும் கூடையில் எடுத்துக் கொண்டு, விற்பதற்காகப் போய் இருக்கிறார்,'' என்றாள்.
'என்ன உங்கப்பா கருவாடு விற்கப் போயிருக்கிறாரா? அதை நேரடியாகச் சொல்லக் கூடாதா? இதைப் புரிந்து கொள்ள என்னால் முடியாதா?'' என்றார் கிழவர்.
அவள் அருகே இருந்த ஆனந்தியை பார்த்து, ''உன் தந்தையாவது வீட்டில் இருக்கிறாரா அல்லது உன் தோழியைப் போல நீயும் என்னைக் குழப்பப் போகிறாயா?'' என்று கேலியாகக் கேட்டார்.
'என் தந்தையும் வீட்டில் இல்லை. சுட்ட பிணம் நிறைய வீட்டில் சேர்ந்துவிட்டது. மீண்டும் அவற்றைச் சுட வேண்டும். அதற்காக எல்லாப் பிணங்களையும் விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்று இருக்கிறார்,'' என்றாள் ஆனந்தி.
இதைக் கேட்ட அவர் குழம்பி விட்டார்.
'சுட்ட பிணம் எப்படி இருக்க முடியும்? சாம்பலாகத்தானே இருக்கும். சுட்ட பிணம் நிறைய எப்படி வீட்டில் சேர முடியும்? சுட்ட பிணத்தை மீண்டும் சுட முடியுமா? அப்படிச் சுடுவதற்காக யார் விலைக்கு வாங்குவார்கள்? அதனால் என்ன பயன்?'' என்று சிந்தித்தார் கிழவர்.
அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
தலை கவிழ்ந்த அவர், ''உன் தந்தை எங்கே சென்று இருக்கிறார்? புதிர் போடாமல் சொல்,'' என்றார்.
அதற்கு அவள் என்ன விளக்கம் சொல்லி இருப்பாள்?
புதிர்கதையின் விடை: வெட்டப்பட்ட மரம் பிணம்தானே. அதைச் சுட்டுத்தானே அடுப்புக் கரி ஆக்குகிறார்கள். மீண்டும் அந்தக் கரியை எரித்துப் பயன்படுத்துவதற்காக வாங்குகிறார்கள். சுட்ட பிணத்தை மீண்டும் எரிப்பதாகத்தானே அது ஆகும். அவள் தந்தை அடுப்புக் கரி விற்கச் சென்றிருந்தார்.
