PUBLISHED ON : மே 13, 2011

அருந்ததியின் முன்ஜென்மத்துப் பெயர் 'சந்தியா'அவள் பிரம்மாவுக்கு மகளாகப் பிறந்தாள். அழகின் உறைவிடமாக அந்த ஆரணங்கு வளர்ந்து இளமை பருவம் அடைந்தாள். அவளது அழகும் பருவமும் கண்டு அவளது சகோதர்களான பிரஜாபதிகளே மயங்கினர். பிரம்மாவுக்கும் அவளைப் பார்க்கும் பொதெல்லாம் மனம் சஞ்சலப்பட்டது.
இதனைக்கண்டு, சந்தியா வெட்கத்தாலும், துக்கத்தாலும் மனம் வெதும்பினாள்.'உலகத்தில் எனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை வேறு யாருக்கும் நேர்ந்ததுண்டா? என்னுடைய அழகைக்கண்டு உடன்பிறந்த சகோதரர்களும் பெற்ற தந்தையும் இப்படி நினைக்கும்படி ஆயிற்றே. இந்த அழகிய வனப்புமிக்க என்னுடைய உடல்தானே இதற்கு காரணம். இந்த உடலையே எரிக்க வேண்டும்' என்று மனதுக்குள் உறுதி பூண்டாள் சந்தியா. சந்திரபாகா மலைக்குச்சென்று கடுந்தவம் புரியத் தொடங்கினாள் சந்தியா. அவளுடைய கடுந்தவத்தைக் கண்டு, உலகமே வியந்து போற்றியது.
சிலகாலம் சென்றபின் சந்தியா முன்பாக, மகாவிஷ்ணு தோன்றினார். ''நீ என்ன வரம் விரும்பி இந்த கடுந்தவம் புரிகிறாய்?'' என்று கேட்டார்.
''என்னுடைய எல்லா பிறவிகளிலும் என் கணவனைத்தவிர வேறு எந்த ஆடவனையும் விரும்பி நிமிர்ந்து காமஇச்சையுடன் என்னை பார்க்கக்கூடாது. என்னைக் காமஇச்சையுடன் நோக்கும் எந்தப்புருஷனும் அவனுடைய ஆண்மையை இழக்க வேண்டும்''என்றாள்.
சந்தியாவின் கோரிக்கையை மகாவிஷ்ணு ஏற்றுக்கொண்டார்.
''சந்தியா, ' நீ ஏற்கனவே இந்த தேகத்தை எரித்து விட வேண்டும்' என்று உறுதிபூண்டிருந்தாய். உன்னுடைய இந்த உடம்பு நெருப்பில் எரிய வேண்டும் என்ற விதி முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. 'மேதாதிதி' என்ற முனிவர் ஜோதிஷ்ட ஹோமம் என்ற பெரிய யாகத்தை செய்து கொண்டிருக்கிறார். அது பன்னிரண்டாடுகளில் முடியக்கூடிய யாகம். அது இப்போது முடியும் தருவாயில் உள்ளது. இந்த யாகம் பூர்த்தியானால் அவருக்கு நிகரான மகரிஷி இல்லை. சந்திரபாகா நதிக்கரையில்தான் அந்த யாகம் நடைபெற்று வருகிறது. யாகத்துக்கு முன் கூடியிருக்கும் எந்த முனிவர் கண்ணிலும் படாமல் அந்த யாககுண்ட நெருப்பில் விழவேண்டும். என்னுடைய அருளாசியால் நீ மேதாதிதியின் குழந்தையாக அவதரிப்பாய்.'' என்று மகாவிஷ்ணு கூறினார்.
சந்தியாவும் அந்த யாகம் நடைபெறும் இடத்துக்கு சென்று யார் கண்ணிலும் புலப்படாமல் 'யாககுண்ட' நெருப்பில் விழுந்தாள்.
மகாவிஷ்ணு, அக்கினி பகவானுக்கு உத்தரவிட்டு, அவளது நெருப்பில் பிரிந்த உடம்பை சூரிய மண்டலத்தில் வைக்கச் சொன்னார். சூரியபகவான் அந்த உடம்பை இரண்டாகப்பரித்து அவைகளை தன் ரதத்தில் வைத்தார். உடம்பின் மேல்பாகம் பிராதஸ் ஸந்தியா எனும் விடியற்காலையாகவும், கீழ்பாகம் ஸாயம் ஸந்தியா எனப்படும் மாலைப்பொழுதாகவும் ஆயின.
அதேசமயம் யாகம் முடிகிற நிலையில் யாககுண்டத்திலிருந்து நெருப்புச்சுடராய் ஒரு பெண்குழந்தை தோன்றியது. மேதாதிதி மகரிஷி அந்தப் பெண்குழந்தைக்கு 'அருந்ததி' என்று பெயர் சூட்டினார். அவளைத் தமது ஆஸ்ரமத்தில் அன்புடன் வளர்த்து வந்தார். சந்திரபாகா நதிக்கரைதான் அருந்ததியின் விளையாட்டுத் தளமாகியது.
மேதாதிதியிடம் பிரம்மா அருந்ததியை சூரிய பகவானின் மகளான சாவித்திரியிடம் ஐந்தாவது வயதில் படிப்புக்காக ஒப்படைக்க சொல்லியிருந்தார். அதன்படியே ஐந்தாவது வயதில் சாவித்திரியுடனும் மற்ற தேவலோகப் பெண்களுடனும் சேர்ந்து படித்து முடித்தாள்.
அருந்ததி இளமைப்பருவம் அடைந்தபோது வசிஷ்ட முனிவரைப் பார்த்து காதல் கொண்டாள். சாவித்திரியும், 'உனக்கு வசிஷ்ட முனிவரே கணவராக வாய்ப்பார்.' என்று ஆசீர்வதித்தாள். அனைத்து தெய்வங்களின் முன்னிலையில் அருந்ததிக்கும் வசிஷ்ட முனிவருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது.
சிறந்த இல்லத்தரசியாக விளங்குவதற்கு, அருந்ததியின் ஆசீர்வாதம் வேண்டும் என்பதற்காகத்தான் நமது நாட்டில் மணப்பெண் 'அருந்ததி' என்ற நட்சத்திரத்தை ஆகாயத்தில் பார்க்கும் வழக்கம் இருக்கிறது.
***
