
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம், அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்த போது நடந்த சம்பவம்...
என் சொந்த ஊர் கோடியக்கரை. ரயிலில், தினமும் வேதாரண்யம் பள்ளிக்கு வருவேன். மாலை, 4:00 மணிக்கு வகுப்பு முடியும். என் ஊருக்கு செல்லும் ரயில், 6:00 மணிக்கு தான் வரும். இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் ரயில் நிலையம் அருகே இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் வீட்டின் முன் அமர்ந்து படிப்பேன்.
அவரை பி.கே.ஆர்., என சுருக்கமாக அழைப்பர். பண வசதியுள்ள மாணவர்கள் அவரிடம் டியூஷன் படிக்க வருவர். எனக்கு அது எட்டாக்கனி என்பதால், வெளியே அமர்ந்திருப்பேன்.
ஒரு நாள் டியூஷன் வகுப்பை முடித்து வெளியே வந்த ஆசிரியர், 'தம்பி ஏன் தனியாக அமர்ந்திருக்கிறாய்... வகுப்புக்கு வரவில்லையா...' என கேட்டார். குடும்ப வறுமையை விளக்கி, 'பணம் செலுத்த வழியில்லை...' என்று கூறினேன்.
வாஞ்சையுடன், 'உனக்கு மட்டும் தனியாகவா டியூஷன் எடுக்க போறேன். மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கலாமே... இத்தனை நாட்களை வீணடித்து விட்டாயே...' என கோபித்தார்.
பிளஸ் 2 முடிக்கும் வரை, கட்டணம் வாங்காமல் டியூஷன் கற்றுத்தந்தார்.
வகுப்பில் கடும் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் அவரது இளகிய மனம் கண்டு வியப்படைந்தேன்.
தற்போது, என் வயது, 52; தனியார் நிறுவனத்தில், உயர் பொறுப்பில் பணியாற்றுகிறேன். சொந்த ஊருக்கு செல்லும் போது, அந்த ஆசிரியரை சந்தித்து ஆசி பெற தவறுவதில்லை. கல்விக்கு உதவியவரை காலம் உள்ளவரை மறக்க மாட்டேன்.
- வே.விநாயகமூர்த்தி, சென்னை.

