
டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிராபி போன்ற தொலைக்காட்சி சேனல்களில், காட்டு விலங்குகளின் வாழ்க்கை தத்ரூபமாக ஒளிபரப்பப்படுகின்றன. இந்த அற்புத காட்சிகளை, மிகவும் சிரமத்துடன் படம் பிடிக்கின்றனர் ஒளிப்பதிவு வல்லுனர்கள்.
காட்டுக்கு செல்வோர், திரும்பி வருவார்களா என்பதே தெரியாது. அந்த அளவு, திகில் நிறைந்த அனுபவங்களுடன் படம் பிடிக்கும் பணியை செய்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் டேவிட் அட்டன்பரோ, ஆப்பிரிக்க காட்டில், ஒரு எருதுவின் வாழ்க்கையைப் பதிவு செய்தார். அதற்காக குறிப்பிட்ட ஒரு எருதை அடையாளம் கண்டார். அது இடம் பெயர்ந்து திரும்பி வரும் வரை பின் தொடர்ந்து காத்திருந்தார். ஓர் ஆண்டு செலவிட்டு அதன் வாழ்வை பதிவு செய்தார்.
ஐரோப்பிய நாடான இங்கிலாந்தைச் சேர்ந்த, பிரபல புகைப்பட கலைஞர் டேவிட் மெயிட்லாண்ட், ஒரு புகைப்படம் எடுத்தார்.
அதில், பாம்பு, தவளையை பிடித்துக் கொண்டிருந்தது. தவளையும் விட்டுக் கொடுக்காமல், பாம்பின் கழுத்தை இறுக்கியது. இந்த உயிர் போராட்டத்தை, 5 மணி நேரம் காத்திருந்து படமாக்கினார் டேவிட்.
அதற்கு, யார் யாரை உண்பது என்ற பொருளில், 'கூ ஈட் கூ' என ஆங்கிலத்தில் தலைப்பு கொடுத்துள்ளார். சிறந்த புகைப்படம் என்ற பெருமையை, 2008ல் பெற்றது.
வன விலங்குகளை படம் எடுக்க செல்லும் குழுக்களில் பெரும்பாலும் மூன்று பேர் இருப்பர். கையில் எடுத்துச் செல்ல, அதிக எடையுள்ள தொழில் நுட்பக் கருவிகள் இருக்கும். எளிய ஆடைகளையே அணிவர்.
மரங்களில் பரண் அமைத்து இரவில் தங்குவர். மரக்கிளைகளில் கயிறால் கட்டிக்கொண்டு காத்திருப்பர். தேவைப் பட்டால் மட்டுமே மெல்லிதாக பேசிக் கொள்வர். வாரக்கணக்கில் குளிப்பதில்லை.
கொசு, அட்டைகள் கடிக்கும்; வாங்கி கொள்வர். சிறிதளவே சாப்பிடுவர். அதையும் விட, சிறிதளவே தண்ணீர் குடிப்பர். சிறுநீரை கழித்தால் அபாய அழைப்பு மணி ஆகி விடும். வனவிலங்குகளுக்கு மிக அருகில், அவற்றை தொந்தரவு செய்யாமல் வாழ்வர்.
காட்டில் மிருகங்களின் வாழ்வை பதிவு செய்வதை ஒரு தவம் போலவே செய்கின்றனர். மிகுந்த பொறுமையும், சகிக்கும் தன்மையும் அதற்கு அவசியம். அந்த கலைஞர்களைப் போற்றுவோம்.

