
பிரபல எழுத்தாளர் ரோமன் ரோலண்ட். ஐரோப்பிய நாடான பிரான்சில், கிளாமசி என்ற ஊரில் வசதியான விவசாயக் குடும்பத்தில், 1866ல் பிறந்தார். நாவல், நாடகம், வரலாறு என, பன்முக தன்மையுடன் எழுதி புகழ் பெற்றார்.
தத்துவத்தில் பட்டம் பெற்று, ஆசிரியராக பணியை துவங்கினார். காலப்போக்கில் அதன் மீது வெறுப்பு ஏற்பட்டது. மாணவர்களை அரட்டி, உருட்டி, மிரட்டிக் கற்பிப்பதை விரும்பவில்லை. அவரது கனிவான சுபாவத்துக்கு அது ஒத்துவர வில்லை. அந்த வேலையை உதறினார்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது. சகோதரியின் உதவியுடன் ஆங்கில நுால்களை படித்தார். இலக்கியம், இசை குறித்தும் கற்றார். எழுத்து மீதான ஆர்வத்தால், 1912-ல் முழு நேர எழுத்தாளரானர்.
பின், ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய், இசை மேதை பீத்தோவன் மற்றும் சிற்பக் கலைஞரும், ஓவியருமான மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோரின் வாழ்க்கை பற்றிய நுால்களை எழுதினார்; அந்த நுால்கள் பெரும் புகழ் பெற்றன.
மனிதநேயத்தை வலியுறுத்தும் 'அபவ் தி பேட்டில்' என்ற நுாலையும் படைத்தார். இந்தியாவிலும் பயணம் செய்தார். அப்போது, 'விவேகானந்தரை பற்றி படித்தால், இந்தியாவை புரிந்து கொள்ளலாம்...' என கூறினார், பிரபல கவிஞர் ரபீந்திரநாத் தாகூர். உடனே, விவேகானந்தர் பற்றிய விபரங்களை திரட்டிப் படிக்க ஆர்வம் காட்டினார்.
திரட்டிய விவரங்களை, 'விவேகானந்தா லைப் அன்ட் காஸ்பல்' என அற்புத நுாலாக எழுதினார். இதுவும் பெரும் வரவேற்பை பெற்றது.
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தார். காந்தியை மிகவும் நேசித்து, 'உலகம் முழுதும் உள்ள, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, குரல் கொடுக்கும் மனிதர்' என, ஒரு நுாலில், பதிவு செய்தார். காந்தியிடம் பெற்ற முத்தத்தை வாழ்நாள் முழுவதும் சிலாகித்தார். உலகில் வன்முறையை ஒழிக்க, காந்திய வழியை வலியுறுத்தினார்.
குறுகிய மனப்பான்மையுடன் சண்டையிட்ட நாடுகள் கண்டு மனம் நொந்தார். மனிதர்கள் அன்பால் இணைய முடியாதா என்ற ஏக்கம் பிறந்தது. அதை கருவாக்கி, 'ஜீன் கிறிஸ்டோபி' என்ற நாவலை எழுதினார். இது 10 தொகுதிகளாக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அன்பால் மனிதர்கள் இணைய முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்தார். அதற்காக, 1915ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவர், டிசம்பர் 12,1944ல் இயற்கை எய்தினார். உலகத் தலைவர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகளுடனான நட்பு குறித்து, 'மெமரீஸ்' என்ற தலைப்பில் ஒரு நுால் எழுதியிருந்தார். அது, இவரது மறைவுக்குப் பின் வெளியானது.
புதுவை நுாலகம்!
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் அலுவலகம், சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் கடற்கரை பாரதி பூங்கா மத்தியில் உள்ள மிகப் பெரிய நுாலகம், 'ரோலண்ட் ' பெயரிலே அமைந்துள்ளது.
இந்த நுாலகம், 1827ல் துவங்கப் பட்டது. அரசு துறை புத்தகங்களுடன் பொது நுாலகமாக செயல்பட்டு வந்தது; ரோலண்ட் நுாற்றாண்டு விழாவையொட்டி, இந்த நுாலகத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. தற்போது, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது.
- மு.நாவம்மா

