
மாமண்டூரை ஆண்டு வந்தார் மன்னர் மகிலன். கலைவாணர்களை ஆதரித்தார். கவிஞர்களுக்கு பரிசு தந்து உற்சாகப்படுத்தினார். அவரது கொடைத்தன்மை அறிந்து, கலைஞர்களும், கவிஞர்களும் திறமை காட்டி பரிசு பெற்றனர்.
ஒரு நாள் -
ஐந்து பெரும் பண்டிதர்கள் அவரது அவைக்கு வந்தனர். ஒருவர், தருக்க நுாலை கரைத்து குடித்தவர். சாஸ்திரத்தில் அவரை மிஞ்ச யாரும் இல்லை. மற்றொருவர், வியாகரணம் நுாலில் புலமை பெற்றவர். வடமொழி இலக்கணம், இலக்கியங்களை பயின்றவர்.
மூன்றாமவர், ஜோதிட கலையில் வல்லவர். நான்காமவரோ, இசை, நாட்டியக் கலையில் தேர்ந்தவர். ஐந்தாமவர், மருத்துவ கலையில் வல்லவர். இவர்கள், தனித்தனியே மன்னர் முன் திறமையைக் காட்டினர்.
வியந்து, 'உண்மையிலே சிறந்த மேதைகள் தான்' என முடிவுக்கு வந்தார் மன்னர்.
எனினும் கல்வி அறிவுடன், உலக அறிவும் பெற்றுள்ளனரா என, சோதிக்க எண்ணி, 'உங்கள் திறமையை மெச்சினேன்; ஐந்து பேரும் இன்று இவ்வூரில் ஒன்றாக தங்கியிருந்து, நாளை வாருங்கள். அனைவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு வர வேண்டும்...' என நிபந்தனை விதித்தார் மன்னர்.
அதை ஏற்று புறப்பட்டனர்.
அவர்களை கண்காணிக்க, ஒற்றர்களை அனுப்பினார் மன்னர்.
அன்று மாலை -
இசைக்கலை அறிந்தவர், சமையல் வேலையை மேற்கொண்டார். அடுப்பில் உலை வைத்ததும் பாட ஆரம்பித்து விட்டார்.
உலையில் நீர் கொதித்த போது, 'தள...தள...' என சத்தம் கேட்டது. அதற்கு தக்கவாறு தொடையில் தாளம் போட ஆரம்பித்தார். தாளத்துக்கு, கொதிக்கும் நீர் ஓசை ஒத்து வரவில்லை. கோபத்துடன் அடுப்பில் இருந்த பானையை, 'தொப்' என போட்டு உடைத்தார்.
நெய் வாங்கி வர, கடை தெருவுக்குச் சென்றார் சாஸ்திரத்தில் மிஞ்சியவர்.
வியாபாரியிடம் வாங்கியபோது, 'தொன்னைக்கு, நெய் ஆதாரமா... நெய்க்கு, தொன்னை ஆதாரமா' என்ற சந்தேகம் வந்தது. வெகுநேரம் ஆராய்ந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.
சோதித்து அறிய தீர்மானித்து, தொன்னையை கவிழ்த்தார். தரையில் கொட்டி, மண்ணோடு கலந்தது நெய். நெய்க்கு, தொன்னை ஆதாரம் என புரிந்தது.
'ஆஹா... எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து விட்டேன்' என மகிழ்ந்தபடி, வெறும் கையுடன் திரும்பினார்.
தயிர் வாங்கச் சென்ற இலக்கணப் பண்டிதர், 'தயிரோ... ஓ... தயிர்...' என, நீட்டி முழக்கி கூவியபடி வரும் பெண்ணைக் கண்டார்.
தயிர் விற்கும் பெண், இலக்கணத்தை மீறி, பிழையுடன் கூவியது பிடிக்கவில்லை. பொத்துக்கொண்டு வந்தது கோபம். வந்த வேலையை மறந்து, அப்பெண்ணுடன் சண்டை போட ஆரம்பித்தார்.
'எனக்கு இலக்கணம், கிலக்கணம் எதுவும் தெரியாது சாமி; சம்மதமிருந்தால் தயிர் வாங்கு... இல்லயேல் ஆளை விடு...' என புறப்பட்டாள் பெண்.
சண்டையால் தயிர் வாங்காமலே திரும்பினார்.
இலை பறித்து வர சென்ற ஜோதிட வல்லுனர், ஒரு மரத்தில் ஏறினார். அப்போது, பல்லி, ஒலி எழுப்பியது. இதைக் கேட்டதும், பல்லி ஒலியால் வரும் பலனை ஆராய ஆரம்பித்தார்.
நீண்ட நேரம் கணக்குப் போட்டு பார்த்தார். பல்லி கூறியபடி பலன் சரியில்லை என முடிவு செய்தார். எனவே, அதற்கு மேல் மரத்தில் ஏறவும் இல்லை; இறங்கவும் இல்லை. மரத்தின் இடையில் தொத்திக் கொண்டிருந்தார்.
காய்கறி வாங்கி வர, கடைத் தெருவுக்கு சென்றார் வைத்தியர். அங்கு கண்ட காய்கறிகளின் குணநலன்களை ஆராய்ச்சி செய்தார்.
'அது, வாயுவைத் தரும்...'
'சூட்டை தரும் உணவு இது...'
'இது, குளிர்ச்சியானது. உடலுக்கு ஒத்துவராது...'
இப்படிக் கூறி எல்லாவற்றையும் ஒதுக்கினார்.
கடைசியில் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்.
பண்டிதர்களின் செயலைக் கண்காணித்த ஒற்றர்கள், விடாமல் அனைத்தையும் மன்னரிடம் கூறினர்.
அதைக்கேட்டு புன்னகைத்து, 'பண்டிதர்களிடம் உள்ளது வெறும் ஏட்டு படிப்பு தான்; உலக அனுபவம் துளியும் கிடையாது...' என்றார் மன்னர்.
குழந்தைகளே... ஏட்டுப்படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. பயிற்சியுடன் கூடிய படிப்பே பயன் தரும்.

