sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பெற்றோர் சொல் கேளுங்கள்!

பெற்றோர் சொல் கேளுங்கள்!

பெற்றோர் சொல் கேளுங்கள்!


PUBLISHED ON : அக் 22, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 22, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தீபாவளி கொண்டாடுவதன் நோக்கம் என்ன தெரியுமா?

பொறுமையை கடைபிடித்தல், நீதிக்கு தலை வணங்குதல், பெற்றோருக்கு மரியாதை தருதல் ஆகியவை தான். பூமியை, 'பூமாதேவி' என புராணங்கள் குறிப்பிடுகின்றன. பெண்களுக்கு பொறுமை அதிகம். அதிலும் பெற்ற தாய்க்கு பொறுமை மிக மிக அதிகம்.

குழந்தைகள், குறும்பு, வம்பு என எது செய்தாலும் கண்டித்து வழி நடத்துபவள். ஆனால், சில குழந்தைகள் அடங்காப்பிடாரிகளாக கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அந்தச் சூழலில், வேறு வழியின்றி பிரம்பால் அடிக்கிறாள்.

பூமாதேவிக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது.

இரண்யாட்சன் என்ற அசுரன், பூமாதேவியைக் கடத்தி, பாதாள லோகத்தில் சிறை வைத்தான். இதையறிந்த திருமால், கொம்புள்ள பன்றியாக, 'வராக' அவதாரம் எடுத்தார்.

தசாவதாரங்களில் இது மூன்றாவது அவதாரம். கொம்பால் பாதாளத்தை தோண்டி, உள்ளே நுழைந்து பூமாதேவியைக் காப்பாற்றினார்.

பூமாதேவியை பந்து போல் உருண்டையாக்கி, தெற்றுப்பல்லில் தாங்கி வெளியே வந்தார். பல் பட்டு காயமடைந்த இடம் காமரூபம் எனப்பட்டது. அதுவே அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரம்.

பெருமாள், பூமாதேவியை தொட்ட மாத்திரத்தில் ஒரு குழந்தை பிறந்தது. அவனுக்கு பவுமன் என பெயரிட்டனர். பவுமன் என்றால் பூமியின் பிள்ளை என்று பொருள். இந்தக் குழந்தை சாகாமல் வாழ வேண்டும் என திருமாலிடம் வரம் கேட்டாள் பூமாதேவி. திருமாலும், 'உன்னைத் தவிர யாராலும் இவனைக் கொல்ல முடியாது...' என வரமளித்தார்.

தாயே எப்படி தன்னைக் கொல்வாள் என்ற மமதையாலும், திருமாலின் மகன் என்ற ஆணவத்தாலும், தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் கொடுத்தான் பவுமன். தேவர்களின் தாயான அதிதி, காதில் அணிந்திருந்த குண்டலங்களை கூட பறித்து விட்டான். பெண்களின் குண்டலங்களை பறிப்பது மிகப்பெரிய அவமானமாக அக்காலத்தில் கருதப்பட்டது.

அத்துடன், 16 ஆயிரம் இளவரசியரை கடத்தி வந்து அடைத்து வைத்தான். போதாக்குறைக்கு உலகின் தாயான பார்வதிதேவியிடமே மோதி விட்டான். அவள், 'காமாக்யா' என்ற பெயரில், காமரூபத்தில் தவம் செய்து வந்தாள்.

அவள் அழகில் மயங்கிய பவுமன், திருமணத்துக்கு வற்புறுத்தினான். இதனால், அவள் கோபத்துக்கு உள்ளானான். இக்காரணங்களால், அவனை 'நரகாசுரன்' என அழைத்தனர். நரன் என்றால் மனிதன். அசுரன் என்றால் அரக்கன். அரக்க குணம் கொண்ட மனிதன் என்று இதற்கு பொருள்.

திருமாலிடம், 'உங்கள் மகனை கண்டித்து வையுங்கள்...' என முறையிட்டனர் தேவர்கள். நரகன் பிறந்தது, வராக அவதார காலத்தில்... இது மூன்றாவது அவதாரம். பின், எட்டாம் கிருஷ்ணாவதாரம் வரை அவனை எதுவும் செய்ய முடியவில்லை. திருத்த முயன்றும் பலனின்றி போகவே, பெற்ற பிள்ளையென்றும் பாராமல் கொல்ல முடிவெடுத்தார் திருமால்.

அப்போது, துவாரகையில் வசித்த செல்வந்தரான, சத்ராஜித் என்பவரின் மகளாக பிறந்தாள் பூமாதேவி. அவளுக்கு, சத்யபாமா என பெயரிட்டனர். சத்தியம் என்றால் உண்மை. பாமா என்றால் ஒளி என பொருள். அவளை திருமணம் செய்தார் கிருஷ்ணர். மனைவியுடன், நரகாசுரனை வதம் செய்ய கிளம்பினார்.

நடனத்தில் சிறந்தவள் பாமா. அவளை நரகாசுரன் முன், சாட்டையால் அடித்து அவஸ்தைப்படுத்துவது போல் நடித்து, நடனமாட செய்தார் கிருஷ்ணர். இதனால் தான், சாட்டை என்ற பட்டாசு ரகத்தில் நெருப்பு வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

தன் தாயை, கொடுமை செய்வதை நரகாசுரனால் பொறுக்க முடியவில்லை. கிருஷ்ணர் மீது அம்பு மழை பொழிந்தான். கணவரைக் காப்பாற்ற அத்தனை அம்புகளையும் அடித்து நொறுக்கினாள் சத்யபாமா. ஆனால், தவறுதலாக ஒரு அம்பு அவள் மீதே பாய்ந்து விட்டது. அதை உருவியவள், அதே அம்பால் நரகாசுரனைக் குத்தினாள். அவன் சாய்ந்தான். ஆனந்தமடைந்தனர் மக்கள்.

'செய்த தவறுக்கு உரிய பலனை பெற்று விட்டேன். ஆயினும், நான் இறக்கப் போகும் சதுர்த்தசி திதியை, 'நரக சதுர்த்தசி' என்ற பெயரில் மக்கள் கொண்டாட வேண்டும். மறுநாள் அமாவாசையன்று விளக்கேற்றி மகிழ வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளித்து, இனிப்பு பலகாரங்கள் சாப்பிட வேண்டும்...' என கேட்டுக் கொண்டான் நரகாசுரன்.

கேட்டதை அருளினார், கிருஷ்ணர்.

பெற்றோர் சொல் கேட்க மறுக்கும் பிள்ளைகள், வாழ்வில் சிரமப்படுவர் என்பதே நரகாசுரன் கதை உணர்த்தும் பாடம். பெற்றோர் சொல்லுக்கு மரியாதை தாருங்கள் குழந்தைகளே!

தீபாவளி வாழ்த்துகள்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us