தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தின்னப் போறேன் !

தின்னப் போறேன் !

தின்னப் போறேன் !


PUBLISHED ON : ஜன 21, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 21, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்துவாச்சேரி என்ற ஊரில் பெரிய குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது. அதன் காரணமாக அந்தக் குளத்தில் மீன்கள் எல்லாம் கவலையில்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. மீன்கள் எல்லாம் தண்ணீரின் மேல் மட்டத்தில் நீந்தியபடி துள்ளிக் குதித்தன.

இந்தக் காட்சியினைக் கரையில் ஒதுங்கியபடி படுத்திருந்த பாம்பு கண்டது. துள்ளி வருகிற மீன்களை அப்படியே விழுங்கி விடலாம் என்று மனதுள் நினைத்தது பாம்பு. உடனே வேகமாக மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த பகுதியை நோக்கி நீந்தி வந்தது.

பாம்பைக் கண்ட மீன்களோ தாங்கள் துள்ளி விளையாடுவதை நிறுத்திவிட்டு, பயத்தில் என்ன செய்வதென்றுத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தன.

உடனே பாம்பு, ''மீன்களே! உங்களை நான் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அதனால், நான் நினைத்ததை நிறைவேற்றி விடுவேன். இப்போது உங்கள் எல்லாரையும் நான் விழுங்கப் போகிறேன்!'' என்றது. அதனைக் கேட்டதும் மீன்கள் எல்லாம் கவலையடைந்தன.

''பாம்பே! எங்களை ஒன்றும் செய்துவிடாதே. இத்தனை நாட்களும் நாங்கள் இந்தக் குளத்தில் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தோம். இப்போது நீ வந்து எங்கள் நிம்மதியை கெடுக்காதே. இந்தக் குளத்தை விட்டுச் சென்று விடு!'' என்றன.

''மீன்களே! நீங்கள் சொன்னவுடன் நான் இந்தக் குளத்தை விட்டு வெளியே சென்று விடுவேன் என்று எதிர்பார்த்தீர்களா? நான் ஒரு போதும் இந்தக் குளத்தை விட்டுச் செல்ல மாட்டேன்!'' என்றது பாம்பு.

பாம்பின் பிடிவாதத்தை மீன்கள் எல்லாம் உணர்ந்து கொண்டன. உடனே அவைகள், ''பாம்பே! நீ இன்று ஒருநாள் மட்டும் எங்களைத் தின்னாமல் விட்டுவிடு. இன்று நாங்கள் எங்களுக்கு இருக்கிற கடைசி ஆசைகளை நிறைவேற்றி விடுகிறோம். நாளை நீ தாராளமாக எங்களைப் பிடித்துத் தின்னலாம்!'' என்றன மீன்கள்.

அதனைக் கேட்ட பாம்பும் மீன்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. உடனே மீன்கள் நிம்மதியடைந்தன. பாம்பு அந்த இடத்தை விட்டுச் சென்ற பின்னர் மீன்கள் எல்லாம் ஒன்று கூடியபடி ஆலோசனைக் கூட்டத்தை நடத்தின. அப்போது அந்தக் கூட்டத்தில் அறிவுமிக்க கெண்டை மீன் ஒன்று மற்ற மீன்களைப் பார்த்தது.

''நண்பர்களே! இந்தப் பாம்பானது பார்ப்பதற்கு மிகவும் பொல்லாததாக இருக்கிறது. இந்தப் பாம்பை இந்தக் குளத்தை விட்டே ஒழித்தால்தான் நாம் இங்கே நிம்மதியாக வாழ முடியும். மற்றபடி நாம் ஒருநாளுமே நிம்மதியாக வாழ முடியாது.

''இந்தப் பாம்பு நமக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இந்தப் பாம்பை ஒழித்துக் கட்ட என் மனதில் ஒரு யோசனை தோன்றுகிறது. அதனை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்!

''நண்பர்களே! நாளை நாம் பாம்பை சந்தித்து அதனை குளக்கரையில் ஓர் ஓரமாகத் தண்ணீரை ஒட்டிய நிலையில் நின்று கொள்ளும்படியாக கூறுவோம். நாம் ஒவ்வொருவராகச் சென்று அதன் அருகில் நிற்க அது நம்மைப் பிடித்து விழுங்க வேண்டும் என்று நிபந்தனையைப் போட்டுக் கொள்வோம்.

''நம் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு பாம்புக் கரையோரமாக நிற்கும் நேரத்தில் அதற்கு அங்கே பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கும். அப்படி ஒரு ஆபத்து தனக்கு ஏற்படும் என்று பாம்பு நினைத்துப் பார்த்திருக்காது. அன்றோடு பாம்பு ஒழிந்து விடும்!'' என்றது கெண்டை மீன்.

''நண்பனே! பாம்புக்குக் கரையோரமாக என்ன ஆபத்து ஏற்படப் போகிறது? அதனை நீ விளக்கமாக எடுத்துரைத்தால்தான் எங்களின் குழப்பம் எல்லாம் தீரும்!'' என்றன மற்ற மீன்கள்.

''நண்பர்களே! முதலில் பிரச்னையை நீங்கள் என்னிடம் ஒப்படைத்துவிட்டு கவலையில்லாமல் இருங்கள். அந்தப் பாம்பை ஒழிப்பது என்னுடைய பொறுப்பு. பாம்புக்கு வருகிற ஆபத்தை ரகசியமாக வைத்துள்ளேன். அதனை நீங்களே நேரில் பார்ப்பீர்கள். அது வரையிலும் அது ரகசியமாகவே இருக்கட்டும். நாளை நீங்கள் யாரும் பாம்பின் அருகே செல்ல வேண்டாம்.

''நான் மட்டும் தனியாக பாம்பின் அருகே செல்கிறேன். நமது நிபந்தனையைத் தெரியப்படுத்துகிறேன். அதனை கரையறுகே போய் நிற்குமாறு கூறுகிறேன். அப்போது பாம்பு படும் பாட்டை நீங்கள் எல்லாரும் சற்று தள்ளி நின்றபடி வேடிக்கைப் பார்ப்பீர்கள்!'' என்றது கெண்டை மீன்.

''நண்பனே! நீ சொல்வதைக் கேட்கும்போது. நீ உண்மையிலேயே அந்தப் பாம்பை அழித்து விடுவாய் என்று எங்கள் எல்லாருக்கும் நம்பிக்கைப் பிறக்கிறது. ஏனென்றால் நீ எங்கள் எல்லாரையும் விட அறிவு மிக்கவன். பகைவர்களை எளிதாக வென்றுவிடலாம். அந்த வகையில் நீ பாம்பை ஒழித்துவிடுவாய் என்று நாங்கள் எல்லாரும் நம்புகிறோம்!'' என்றன மற்ற மீன்கள்.

மறுநாள் மீன்களை எல்லாம் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு நடுக்குளத்தில் நின்று கொண்டிருந்தது பாம்பு. அப்போது மற்ற மீன்கள் எல்லாம் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தன. கெண்டை மீன் மட்டும் வேகமாகப் பாம்பின் அருகே வந்தது.

''பாம்பே! நாங்கள் அனைவரும் எங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டோம். ஆனால், நீ ஒட்டுமொத்தமாக எங்கள் எல்லாரையும் கூட்டத்தோடு பிடித்து விழுங்குவதை நாங்கள் விரும்பவில்லை. நீ குளக்கரையோரப் பகுதியில் தண்ணீரை ஒட்டிய இடத்தில் நின்று கொண்டால், நாங்கள் ஒவ்வொருவராக வந்து உனக்குப் பலியாகி இரையாகி விடுவோம். இப்போது முதலாவதாக நான் வரப்போகிறேன். எனவே, நீ வேலியை ஒட்டிய குளக்கரை ஓரமாகப் போய் நின்று கொள்!'' என்றது.

கெண்டை மீனின் பேச்சைக் கேட்ட பாம்பும் மீன்களைத் தின்ன வேண்டும் என்ற ஆசையோடு வேலியோரப் பகுதியில் இருக்கிற குளக்கரையை நோக்கி சென்றபடி நின்று கொண்டது. 'இன்று எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக நாள். இந்தக் குளத்தில் இருக்கிற எல்லா மீன்களையும் நான் இன்று விழுங்கப் போகிறேன்!' என்று மனதுள் நினைத்துக் கொண்டது பாம்பு.

அந்த நேரத்தில் திடீரென வேலியோரத்தில் மறைந்திருந்த கீரி பாம்பின் மீது பாய்ந்தது. பாம்பின் தலையை தன் வாயினால் கவ்விக் கொண்டது கீரிப்பிள்ளை. அக்காட்சியினைக் கண்ட மற்ற மீன்கள் எல்லாம் ஆச்சரியமடைந்தன. உடனே கெண்டை மீன் மற்ற மீன்களின் அருகே சென்றது.

மற்ற மீன்கள், ''நண்பனே! உன்னுடைய அறிவுத் திறனை நீ நிரூபித்து விட்டாய். கிரீயை ரகசியமாகப் பேசி அழைத்து பாம்பைக் கொல்லும்படியாக செய்து, எங்கள் எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டாய்!'' என்றன.

அதற்குள் கீரி அந்தப் பாம்பைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொன்றது. உடனே கெண்டை மீன் மற்ற மீன்களையும் அழைத்துக் கீரியின் அருகே சென்றது.

''கீரியே! நீ எங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றிவிட்டாய். உனக்கு மிகவும் நன்றி!'' என்றன மற்ற மீன்கள்.

''மீன்களே! நீங்கள் நன்றி சொல்வதென்றால் உங்களின் நண்பனான இந்த கெண்டை மீனுக்கு நன்றிச் சொல்லுங்கள். ஏனென்றால் என்னை இங்கு ரகசியமாக இருக்கும்படி செய்து, தக்க சமயத்தில் பாம்புக்கு பதிலடி கொடுக்க வைத்ததே இதுதான். உங்கள் உயிரை எல்லாம் காப்பாற்றிய பெருமை இந்தக் கெண்டை மீனுக்கேச் சேரும்!'' என்று கூறியபடி விடைபெற்றது கீரி.

மற்ற மீன்களோ கெண்டை மீனை மிகவும் பாராட்டின.***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us