PUBLISHED ON : ஜன 21, 2011

பிரான்ஸ் நாட்டு மன்னன் மாண்டான். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி, பிரெஞ்சு அரசுக்கு உரிமை கொண்டாடினான். அந்நிலையில், ஆங்கிலப்படை பிரான்சில் புகுந்தது. வெற்றி மேல் வெற்றி பெற்றது. வடபகுதியில் பெரும்பான்மைப் பகுதி ஆங்கிலேயர் வசப்பட்டது.
அந்நாட்டின் தலைநகர், அழகின் இருப்பிடம், இன்பக் களஞ்சியம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட பாரிஸ் நகரம் பகைவர் வயப்பட்டது.
அந்நாட்டின் இளவரசன் சார்லஸ் முடிசூடுவதற்கு வழி இல்லாமல் போயிற்று. காரணம், பிரெஞ்சு மன்னர்கள் வழி வழியாக முடிசூட்டப்படும் ரீமஸ் நகரம், பகைவர் வசமாகியிருந்தது. பிரெஞ்சுப் போர் வீரர்கள் ஒற்றுமையின்றி, வலிமை இழந்து நின்றனர். நாட்டில் நல்ல தளபதிகளும் இல்லை. சார்லஸ், சீனான் என்னும் சிற்றூரில், பிரபுக்களும், மகதுருமார்களும் புடைசூழ, நாட்டைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் நாட்களைக் கேளிக்கையில் கழித்துக் கொண்டிருந்தான்.
ஆங்கிலேயரின் அடக்குமுறை, பிரபுக்களின் கொடுமை, மதகுருமார்கள் செய்த துன்பங்கள் ஆகியவற்றினிடையே பிரான்ஸ் நாட்டு மக்கள் சிக்கி, அளவற்ற துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த நாட்டில் உள்ள, 'டாம் ரெமி' என்னும் சிற்றூரில், ஜோன் ஆப் ஆர்க் என்னும் பருவப்பெண், தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தாள். அவள் நற்குணம் நிறைந்தவள். நாள் தவறாமல் ஆலயம் சென்று இறைவனை அன்புடன் போற்றி வந்தாள். மெய்மறந்து பைபிளை நாள்தோறும் படிக்கும் பழக்கமுடையவளாக இருந்தாள்.
தனிமையில் இன்பம் காணும் பழக்கம் உடையவளாக இருந்தாள். அவ்வாறு தனிமையில் இருந்து இன்பம் காணும் போது, அடிக்கடி அதிசயக் குரலைக் கேட்டு வந்தாள். ஆனால், ஆளைக் காண்பதில்லை. ''ஜோன்! ஆண்டவனை வழிபட மறவாதே. எல்லாருக்கும் நன்மை செய்!'' என்ற குரலைக் கேட்டு வியப்படைந்தாள்.
அவ்வாறு இருந்து வந்த அவள், தன் நாட்டின் அரசியல் சூழ்நிலையை அறிந்தாள். தன் நாட்டு இளவரசனுக்கு முடிசூட்ட வேண்டும் என்னும் எண்ணம் கொண்டாள். உடனே தன் பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் பார்த்து, ''தந்தையே! தாயே! எனக்கு விடை கொடுங்கள். நான் சென்று இளவரசனைக் காண வேண்டும். பகைவரைத் துரத்தி நாட்டைக் காக்க வேண்டும். ஆண்டவன் அருள் எனக்கு அமைந்துள்ளது. நான் வெற்றி பெறுதல் உறுதி. நீங்கள் ஐயப்பட வேண்டாம். எனக்கு விடை கொடுங்கள்!'' என்று வேண்டினாள்.
அவளது வார்த்தையைக் கேட்ட பெற்றோரும், மற்றோரும், அவளை எள்ளி நகையாடினர். பித்துப் பிடித்தவள் என்று இழித்துப் பேசினர். ஆனால், ஜோன் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது புறப்பட்டுச் சென்றாள்.
அவ்வாறு புறப்பட்டுச் சென்ற ஜோன், போர்ப்படையில் பணிபுரிந்து கொண்டிருந்த தன் மாமனிடம் சென்றடைந்தாள். தன் மாமனை நோக்கி, 'ஜோன்! நில்லாதே! புறப்படு! பகைவரைத் துரத்து! இளவரசனுக்கு முடிசூட்டு!' என்று தனக்கு அருள்வாக்குக் கூறியதைத் தெரிவித்து, தன்னைப் போர்ப்படையில் சேர்த்துவிடுமாறு வேண்டினாள்.
அவளது தாய்மாமன் முதலில் தயங்கினான். பின்னர் அவளது தோற்றத்தையும், வீர மொழிகளையும் கேட்டு உள்ளம் பூரித்தான். அருகில் கோட்டைக்குள் இருந்த காவலர் தலைவனிடம், அவளை அழைத்துச் சென்றான். அக்காவலர் தலைவன், அவளை ஒரு பைத்தியம் என்றே எண்ணி விட்டான்.
தன்னை ஒரு பைத்தியம் என்று சொல்லி ஒதுக்கி விட்டானே என்று எண்ணி, ஜோன் மனம் வருந்தவில்லை. உடனே இளவரசன் இருந்த இடத்தை நோக்கிப் புறப்பட்டாள்.
பல நாட்கள் வழி நடந்து சென்றாள்.
ஜோன் இறுதியில், இளவரசன் இருந்த அரண்மனையை அடைந்தாள். தன் வருகையை இளவரசனுக்குத் தெரிவிக்கச் செய்தாள். அப்போது அவையில் இருந்தவர்கள், அவளது வார்த்தையை நம்பவில்லை. அதனால், ''நாடாளும் மன்னன் மாளிகையில், ஒரு நாடோடியை நுழைய விடுதல் நன்றன்று!'' என்று கூறினர்.
அப்போது அவர்களில் ஒருவர், ''இளவரசனும், ஒரு பிரபுவும் இடம் மாற்றம் பெறுதல் வேண்டும். அந்நிலையில், வருபவள் மன்னனை அடையாளம் கண்டு கொண்டால், அவளை உறுதியாக நம்பலாம். அவளது வார்த்தையையும் நம்பலாம்!'' என்று கூறினார்.
இளவரசனும் அதற்கு இணங்கினான்.
ஜோன் அரண்மனைக்குள் சென்றாள். நேராக இளவரசனை நெருங்கினாள். ''அரசே! நீ நீடூழி வாழ்க! பகைவரைத் துரத்தி, உமக்கு முடிசூட்டி வைக்குமாறு ஆண்டவன் எனக்கு ஆணையிட்டுள்ளான். அதைத் தெரிவிக்கவே வந்தேன்!'' என்று கூறினாள்.
அதைக் கேட்ட இளவரசன், ''நீ காண விரும்பும் இளவரசன் நான் அல்லன்!'' என்று கூறினான்.
அதைக் கேட்ட ஜோன் சிறிதும் தயங்காது, மயங்காது, ''நீரே இளவரசர்! இதில் சிறிதும் ஐயமில்லை!'' என்று உறுதியாகக் கூறினான்.
இளவரசன் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். அருகில் இருந்தவர்கள் அவளை வியந்து பாராட்டினர்; அவளுக்கு ஆதரவு அளித்தனர்.
இளவரசன், அவளுக்கு ஒரு வெள்ளைக் குதிரையைக் கொடுத்தான். பல மணிகள் பதிக்கப்பட்ட உடைகளையும் கொடுத்தான். அவற்றைப் பெற்றுக்கொண்ட ஜோன், ஆடவர்க்குரிய உடை தரித்துக் கொண்டாள். குதிரை மீது அமர்ந்தாள். அவள் தலைமையில் பிரெஞ்சுப் படை, விடுதலைப் போருக்கு வீறு கொண்டெழுந்தது. மக்களெல்லாரும் இருமருங்கும் கூடி நின்று வாழ்த்துக் கூறினர்.
ஜோன் ஆப் ஆர்க், ஆங்கிலேயரின் பாசறையாகிய ஆர்லியன்சை முற்றுகையிட்டாள். வெற்றிக்களிப்பில் மூழ்கியிருந்த ஆங்கிலேயர், ஜோனை எள்ளி நகையாடினர்; பழித்துப் பேசினர். அவையெல்லாம் ஜோனின் உறுதியைத் தளர்த்துவதற்கு மாறாகப் பெருகச் செய்தன.
போர் மூண்டது. போர்க்களத்தில் ஜோன் புகுந்தாள். போர்க்களத்தில் எங்கு பார்த்தாலும் பீரங்கிகள் குண்டு மழை பொழிந்தன. தலையிழந்தோர் சிலர்; கையிழந்தோர் பலர்; காலிழந்தோர் கணக்கிலர். எங்கும் பிணக்குவியல். ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஜோன் காலிலும் பலமான அடிபட்டு ரத்தம் பெருக்கெடுத்தது. அவளது குதிரை, கால் இடறிக் கீழே விழுந்தது. ஆனாலும், போர் நிற்கவில்லை. ஜோன் மீண்டும் குதிரை மீது அமர்ந்தாள். போர் வீரர்களை ஊக்கப்படுத்தினாள்.
போரின் கடுமை உச்சநிலை அடைந்தது. பகைவரது அம்பு ஒன்று வந்து ஜோனின் தோள் மீது பாய்ந்தது. அவள் அதையும் பொருட்படுத்தாமல், பகைவர் படையினுள் புகுந்து பம்பரம் போல் சுழன்று கடுமையாகத் தாக்கி, எமனுக்குப் பெருவிருந்து படைத்தாள்.
அதைக்கண்ட பகைப்படை வீரர்கள் கலங்கினர். அச்சம் அவர்களது ரத்தத்தை உறையச் செய்துவிட்டது. படைத் தலைவனால் தடுத்து நிறுத்த முடியாத அளவில், பகைவீரர்கள் சிதறியோடி விட்டனர்.
ஆர்லியன்ஸ் நகரம் ஜோனின் வசமாயிற்று. அவள் அந்த அளவோடு நின்றுவிடாது, பகைவரை ஓடஓடத் துரத்தினாள். ஆங்கிலேயர்களைப் பிரான்ஸ் நாட்டின் வட எல்லைக்கே துரத்தி விட்டாள்.
பிரெஞ்சு வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஜோனை வாழ்த்தினர். ஜோன், இளவரசனை ரீம்ஸ் நகரத்திற்கு அழைத்துச் சென்றாள். அந்த நகரம் விழாக்கோலம் கொண்டது. இளவரசன் முறைப்படி முடிசூட்டப் பெற்றான்.
இளவரசன் ஏழாம் சார்லஸ் மன்னன் ஆனான். ஆண்டவன் இட்ட கட்டளை இனிது நிறைவேறியது என்று கருதினாள் ஜோன். அந்நிலையில் அவள், தனது சொந்த ஊரான டாம்ரெடிக்குச் செல்ல விரும்பினாள். ஆனால், மன்னன் அவளை அழைத்து, மீண்டும் போர் புரியுமாறு வற்புறுத்தினான். ஜோன், தனக்கு விருப்பமில்லாத வகையில், மன்னன் விருப்பத்திற்காக மீண்டும் போரில் ஈடுபட்டாள். அவளது விருப்பத்திற்கு மாறாக நிகழ்ந்த அந்தப் போரில், பிரெஞ்சுப் படையினர் துரோகம் செய்தனர். திடீரெனக் கைவிட்டனர். அதனால், தனிமையில் நின்ற ஜோனை, பகைவர் சிறைப்படுத்தினர்.
சிறைப்படுத்தப்பட்ட ஜோன் மீது போலி விசாரணை நடைபெற்றது. அவள் குற்றவாளியாக்கப்பட்டாள். அவள் செய்த குற்றம், நாட்டிற்கு விடுதலை தேடியதே! கொடுமைகளிலெல்லாம் மிக்க கொடுமை, ஜோனைக் கம்பத்தோடு கட்டி வைத்து, உயிரோடு தீக்கு இரையாக்கினர். நாட்டுக்கு உழைத்த ஜோன், 'வீரத் தியாகச் செல்வி' என்னும் புகழைப் பெற்றாள்.
***
