PUBLISHED ON : ஜன 21, 2011

* விமானி இல்லாமல் பறக்கும் விமானம் !
விமானி இல்லாமலேயே விமானத்தை இயக்கி விஞ்ஞானிகள் சாதனைப் படைத்துள்ளனர். விமானி இல்லாத விமானம் இரண்டாவது உலகப் போரின்போது பயன் படுத்தப்பட்டது. போர் முடிந்த பிறகு ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக புதுமையான அம்சங்கள் புகுத்தப்பட்ட ஒரு தானியங்கி விமானம் தயாரிக்கப்பட்டது. இதன் பெயர் 'ஸ்கை மாஸ்டர்' இதை 1947ல் அட்லாண்டிக் கடல் மீது பறக்கவிட்டனர். 2400 மைல் தூரம் பறந்து சென்று திரும்பி வந்தது. முன்கூட்டியே சரியாக முறைபடுத்தி வைக்கப்பட்டிருந்த மின் மூளை ஒன்று, விமானம் பறப்பதற்கான எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டது. அதாவது விமானம் தரையிலிருந்து மேலே ஏறவும், குறிப்பிட்ட உயரத்தில் பறக்கவும், தரையில் இறங்கவும், பிரேக்குகள் போடுவதுமான எல்லா பணிகளைச் சரியாக செய்து முடித்தது. பயணிகள் விமானத்தையும் விமானி இல்லாமல் இயக்க, விஞ்ஞானிகள் எடுத்த முயற்சியின் விளைவாக பயணிகள் விமானம் ஒன்றை, 1966ம் ஆண்டு பயணிகள் இல்லாமல் இயக்கி, லண்டன் விமான நிலையத்தில் பலமுறை தரையிறக்கப்பட்டது. சில மாதங்களுக்கு பிறகு 98 பயணிகளுடன் நியூயார்க் கென்னடி விமான நிலையத்திலிருந்து 'போயிங் - 727' என்ற விமானம், தானியங்கி முறையில் வானில் பறந்தது. ஆபத்து ஏற்பட்டால் உதவுவதற்கு விமானி ஒருவர் இருந்தார். ஆனால், அவர் விமானத்தை இயக்கவில்லை. அப்போது விமான நிலையத்தில் பயங்கரமான பனி மூட்டம் இருந்தபோதும், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ஆனாலும், விமானி இல்லாமல் பயணிகள் விமானத்தை இயக்க விஞ்ஞானிகள் யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
* சரியா ? தவறா ?
ப்ளாப்பி டிஸ்க்கை விட அதிகமான தகவல்களை ப்ளாஸ் டிரைவில் சேகரித்து வைக்கலாம். சரி! ப்ளாஸ் ட்ரைவ் என்பது தகவல்களை சேமித்து வைக்கும் சாதனம். ப்ளாஸ் ட்ரைவில் 32 மெகாபைட் முதல் ஒரு ஜிகா பைட்ஸ் வரை தகவல்களை சேமித்து வைக்கலாம். ஆனால், ப்ளாப்பி டிஸ்க்கில் 1.44 மெகா மெகா பைட்ஸ் தகவல்களை தான் சேமித்து வைக்க முடியும். ப்ளாஸ் ட்ரைவ் 1998ல் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சி.இ.ஓ., என்ற சாப்ட்வேர் கம்பெனியை சேர்ந்த “டோவ் மோரன்' என்பவர் கண்டுபிடித்தார்.
* உலகிலேயே ஆண்டஸ் மலைத்தொடர் தான் மிகவும் நீளமானது. சரி! ஆன்டஸ் மலைத்தொடர் தென் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையோரம் 7 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இது ஏழு நாடுகள் வரை படர்ந்து விரிந்து காணப்படுகிறது. அர்ஜன்டினா போலிவியா, சிலி, கொலம்பியா, பெரு, ஈக்வடார் மற்றும் வெனிசுலா.
* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த இளைஞன், நான்கு வருடங்களுக்கு முன்பு தன் ஆசிரியையிடம் விட்ட சவாலின்படி, அவன் பட்டம் வாங்கும் வரை ஒரு ஜோடி பழைய செருப்பையே அணிந்துவந்தான். இருந்தாலும் தன் கால் விரல்களை தவிர, பாதத்தை சுற்றியுள்ள பகுதியை பிளாஸ்டிக் உறையால் மூடி மழையிலிருந்து பாதுகாத்து வந்தான்.
* சிம்பிள் சயின்ஸ் !
எவரெஸ்ட் சிகரத்தில் வைத்து குக்கர் இல்லாமால் அரிசி, பருப்பை வேக வைக்க முடியாது என்கின்றனர். இது உண்மையா? ஆம்! அதாவது குறைந்த காற்றழுத்தம் உள்ள பகுதியில் நீரின் கொதி நிலையும் குறைவாகத் தான் இருக்கும். காற்றழுத்தம் எவரஸ்ட் மலை உச்சியில் கடல் மட்டத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கு தான் இருக்கும். அதாவது நீரின் கொதிநிலை 70 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். அரிசி, பருப்பு, வேக வேண்டுமானால் அதிக வெப்பநிலை தேவை. எனவே எவரெஸ்ட் மலை உச்சியில் நீரின் கொதிநிலை குறைவாக இருப்பதால் அரிசி மற்றும் பருப்பை சாதாரண பாத்திரத்தில் வேக வைக்க முடியாது. ஆனால், நாம் குக்கரில் சமைக்கும் போது சாதாரண வெப்ப நிலையை விட குக்கரில் அதிக வெப்ப நிலையில் கொதிக்கிறது. குக்கரின் உட்பகுதியில் வெப்ப அழுத்தம் அதிகமாகிறது. இதனால் அரிசி, பருப்பு வெந்து விடுகிறது.
