தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிமேதாவி அங்குராசு - மாற்றி யோசிப்பதன் மகிமை!

அதிமேதாவி அங்குராசு - மாற்றி யோசிப்பதன் மகிமை!

அதிமேதாவி அங்குராசு - மாற்றி யோசிப்பதன் மகிமை!


PUBLISHED ON : ஜூலை 15, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பிறந்தவர் என்ரிகோ பெர்மி. புகழ்பெற்ற விஞ்ஞானி. அமெரிக்காவில் வாழ்ந்தார். எது பற்றி கேட்டாலும், 'தெரியாது' என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார். எல்லாவற்றுக்கும் ஒரு விடை வைத்திருப்பார்.

ஒருவர், 'பூமியின் சுற்றளவு எவ்வளவு' என்று கேட்டால்...

தெரிந்தால் பதில் சொல்வோம். தெரியாவிட்டால் கையை விரித்து விடுவோம்.

ஆனால், என்ரிகோ பெர்மி அப்படி கைவிரிக்க மாட்டார். உண்மையில் பூமியின் சுற்றளவு அவருக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், விஞ்ஞானி அல்லவா... உடனே தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்.

பூமியின் சுற்றளவு பற்றி அவருக்கு தெரியாது; ஆனால், அது தொடர்பாக தெரிந்திருக்கும் விஷயங்களை சிந்தனைக்கு கொண்டு வருவார். மூளையைக் குடைவார். அப்போது, பல தகவல்கள் கிடைக்கும்.

உலகில், நாடுகளுக்கு இடையே, நேர வேறுபாடு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியாவுக்கும், ஐரோப்பிய நாடான இங்கிலாந்துக்கும் நேர வித்தியாசம், ஐந்தரை மணி நேரம்.

இதுபோல, அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலோரம் நியூயார்க் நகரம் உள்ளது; பசிபிக் கடலோரம், லாஸ் ஏஞ்சலஸ் நகரம் உள்ளது. இவற்றுக்கு இடையே மூன்று மணி நேர வித்தியாசம் உண்டு. இவற்றுக்கு இடையேயான துாரம், 4,800 கி.மீ., உடனே இந்த தகவல்கள் பெர்மியின் மனதில் பளிச்சிடும். இவற்றை ஒருங்கிணைத்து விந்தையாக சிந்திப்பார். ஒரு விடையை கண்டறிவார்.

அது, எப்படி என்று பார்ப்போம்...

ஒரு நாள் என்பது, 24 மணிநேரம் உடையது. பூமிப்பந்து தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள ஒரு நாள் ஆகிறது. நியூயார்க் - லாஸ் ஏஞ்சலஸ் நகரங்கள் இடையில் கால வேறுபாடு மூன்று மணிநேரம். இது, ஒரு நாளில், எட்டில் ஒரு பாகம். இந்த நகரங்களின் இடையே உள்ள துாரத்தை, எட்டால் பெருக்கினால், பூமியின் சுற்றளவு கிடைக்கும்.

இந்த கணக்குப்படி, பூமியின் சுற்றளவு, 38 ஆயிரத்து, 400 கி.மீ., இப்படி, மூளையை குடைந்து கணக்கு போட்டு, பதில் சொல்லி விடுவார் பெர்மி. ஆனால், பூமி உருண்டையின் உண்மை சுற்றளவு, 40 ஆயிரத்து, 75கி.மீ.,

பெர்மி கண்டறிந்த விடை முழுமையானது அல்ல. வேறுபாடு உடையது. ஆனால், முழுமையை நெருங்கி வர முயற்சி செய்கிறது. இப்படி வித்தியாசமாக சிந்தித்து விடை கண்டுபிடிக்கும் பாணி, உலகப்புகழ் பெற்றுள்ளது. இது, 'பெர்மி பாணி' எனப்படுகிறது.

இதுபற்றி பெர்மி சொல்வது என்ன...

'நான் மட்டுமல்ல; உலகில் ஒவ்வொருவரும் இப்படி சிந்தித்தால் எவ்வளவு பெரிய சிக்கலையும் தீர்த்து விட முடியும். எடுத்த எடுப்பில் எந்த கேள்விக்கும், 'தெரியாது' என்று சொல்லி விடாதீர். குறிப்பிட்ட கேள்விக்கு, நேரடியாக விடை தெரியாது. ஆனால், அது தொடர்பாக தெரிந்தவற்றை சிந்தியுங்கள். அதை வைத்து ஒரு விடை கண்டுபிடிக்கலாம்...'

இவ்வாறு நம்பிக்கை தருகிறது பெர்மியின் கண்டுபிடிப்பு.

வித்தியாசமான திறனுக்காக, 1938ல் நோபல் பரிசு வென்றார் பெர்மி. எப்போதும் சிந்தித்து கொண்டிருந்தவர், 1954ல் மறைந்தார். அவரது புகழ் இன்றும் நிலைத்துள்ளது. சிக்கலான கேள்விக்கும் எளிதாக சிந்தித்து தீர்வு காணும் அவரது பாணி, உலகம் முழுதும் இன்று பின்பற்றப்படுகிறது. பெர்மியைப் போல சிந்திக்க முயற்சிப்போம்!

- என்றென்றும் அன்புடன், அங்குராசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us