PUBLISHED ON : ஜூலை 15, 2023

''நேரமாச்சு... எழுந்திரு...''
அம்மாவின் குரல் கேட்டு, படுக்கையில் நெளிந்தாள் தியா.
ஜன்னல் வழியாக இளங்காலை வெளிச்சம் எட்டிப் பார்த்தது.
''அம்மா... கொஞ்ச நேரம் துாங்க விடுங்க...''
கெஞ்சும் குரலில், போர்வையை இழுத்து மூடினாள் தியா.
அழகு மிக்க புத்திசாலி சிறுமியான அவள் வயது, 14; பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறாள்.
''தியா... பள்ளிக்கு நேரம் ஆச்சு...''
அம்மாவின் குரல், செவிகளில் மீண்டும் விழ, கண் விழித்தாள்.
'இறைவா... இன்று, எல்லாம் நல்லதாக நடக்க வேண்டும்...'
மனதில் பிரார்த்தனையை முடித்து எழுந்தாள் தியா.
சென்னையில் வசிக்கிறாள் என்றாலும், பெற்றோரின் பூர்வீகம் திருநெல்வேலி.
அவளது தோழி அனுவும், திருநெல்வேலியை சேர்ந்தவள் தான்.
வீட்டு வாசலில், பள்ளி வேன் ஹாரன் சத்தம் ஒலித்தது.
சீருடை அணிந்து தயாராக இருந்தாள் தியா; அம்மாவுக்கு, கையசைத்தபடி வேனில் ஏறினாள்.
''சாப்பாட்டை மிச்சம் வைக்காமல் சாப்பிடணும்...''
அம்மா அக்கறையாய் கூறியது காதில் விழுந்தது; கேளாதது போல வேனுக்குள் வந்தாள்.
நண்பர்களை பார்த்து புன்னகைத்து கையசைத்தாள்; பதிலுக்கு அவர்களும் கையசைத்தனர்.
வழக்கம் போல் வாணி அருகில் அமர்ந்தாள்.
''தியா... இன்று, கணக்கு ஆசிரியை வர மாட்டார்...''
பின் இருக்கையில் அமர்ந்திருந்த விமல் கூறினான்.
''ஏன்டா... அவள் மனநிலையை குலைக்குற...''
கேட்டபடி சிரித்தாள் வாணி.
''உனக்கு சொன்னது யார்...''
வினவினாள் தியா.
''வேன் ஓட்டுநர் தான்...''
''சரி... அதனால் எனக்கு என்ன...''
''உனக்கு தான், கணக்கு ஆசிரியை என்றால் பிடிக்குமே, அதனால தான் கூறினேன்...''
''எல்லா ஆசிரியைகளையும் எனக்கு பிடிக்கும். கணிதத்தில், 100 மதிப்பெண் வாங்குவதால், கணக்கு ஆசிரியைக்கும், எனக்கும் முடிச்சு போட வேண்டாம்...''
''விளையாட்டுக்கு கூறினால், முகத்தை சுளிச்சிக்குறியே...''
அப்போது, திடீரென கிறீச்சிட்டு நின்றது வேன். குலுங்கியதில், சீட்டிலிருந்த சிலர் சரிந்தனர்.
''மன்னிச்சிடுங்க... ஏதோ விபத்து போல... முந்தி செல்லும் வாகனங்கள் வேகமாக, 'பிரேக்' போட்டு விட்டன...'' என்றார் வேன் ஓட்டுநர்.
ஒரே சலசலப்பு. விபத்து நடந்த திசை நோக்கி பலரும் ஓடினர்.
வாகனங்கள் நின்றதால், வேன் ஓட்டுனரும் இறங்கி சென்றார்.
''நான் சென்று, பார்த்துட்டு வருகிறேன்...'' என்றான் விமல்.
''நானும் வருகிறேன்...''
உடன் புறப்பட்டாள் தியா. கூடவே, வாணியும் சேர்ந்தாள்.
இருசக்கர வாகனம் மீது, லாரி மோதி இருந்தது. சிக்கியிருந்த இளைஞரை விடுவித்து, ஒரு ஓரமாக அழைத்துச் சென்றனர். அந்த இளைஞர், தலைக்கவசம் அணிந்திருந்தார்; அதனால், தலையில் காயம்படவில்லை. கை, கால்களில் சிராய்ப்பு. காலில் காயம் பட்டு ரத்தம் ஒழுகியது.
'வாகனத்தை ஓரமாக நிறுத்துங்கப்பா...'
'தண்ணீர் எடுத்து வா...'
'காயம்பட்டவரை ஓரமாக உட்கார வைங்க...'
இப்படி குரல்கள் எழுந்தன.
விபத்தில் சிக்கிய இளைஞருக்கு, தண்ணீர் கொடுத்தனர்.
பலமான காயம் என்று, வலியில் துடித்த அவர் முகத்தை பார்த்தபோதே தெரிந்தது.
தண்ணீர் கொடுப்பதில், ஆர்வமாக இருந்தனர் அனைவரும். நிகழ்வை அலைபேசியில் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர் சிலர்.
கோபம் தலைக்கேற, ''வீடியோ எடுப்பதை நிறுத்துங்க... அடிப்பட்டவர், வலியில் துடிக்கும் போது, வீடியோ எடுத்து, முகநுால், இன்ஸ்டாகிராமில் போட்டு, 'லைக்' வாங்க ஆசைப் படுகிறீங்களா...'' என கத்தினாள் தியா.
வீடியோ எடுத்தோர் திரும்பினர். வேன் ஓட்டுநரிடம் அலைபேசியை வாங்கி, விபத்து நடந்த இடத்தை கூறி ஆம்புலன்சை அழைத்தாள் தியா.
''அடிப்பட்டவருக்கு ரத்தம் வழிகிறது. ஆம்புலன்சை அழைக்க கூடவா தோன்றவில்லை...''
தியா குரல் உயர்த்தியதும் கூட்டம் அமைதியானது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.
''அண்ணா... சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே ஆம்புலன்சு வந்துடும்...''
அடிப்பட்ட இளைஞருக்கு ஆறுதல் கூறினாள் தியா.
ரத்தத்தை கட்டுப்படுத்த சிறிய துணியால் கட்டு போட்டாள்.
தொலைவில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.
'தள்ளி போங்க...'
'கூட்டம் சேராதீங்க...'
'ஆம்புலன்சுக்கு வழி விடுங்க...'
'வழியில் இருக்கும் வண்டியெல்லாம் ஒதுக்கி விடுங்க...'
குரல்கள் கேட்டன.
வாகனங்களை விலக்கி, ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தினர்.
''போக்குவரத்து நெரிசல் குறைய ஆரம்பிச்சாச்சு. வாங்க போகலாம்...''
பள்ளி வேனை நோக்கி நகர்ந்தார் ஓட்டுநர்.
அடிப்பட்ட இளைஞரை திரும்பி பார்த்தபடி, வேனுக்கு திரும்பினாள் தியா.
''விபத்தை பார்த்த பதற்றத்துல என்ன செய்வதென தெரியாமல் இருந்தேன். ஆனால், நீ விரைந்து செயல்பட்டு ஆம்புலன்சுக்கு போன் செய்தாய்...''
தியாவை பாராட்டினான் விமல்.
''சூழ்நிலை பதற்றமாக இருந்தாலும், நடந்ததை நினைச்சுட்டே நிற்காமல், அடுத்து என்னன்னு தான் யோசித்து செயல்பட வேண்டும்...''
''உன் செயலை பார்த்து மகிழ்ந்தேன்...'' என்றாள் வாணி.
காயம்பட்டிருந்த இளைஞனை ஏற்றி சென்றது ஆம்புலன்சு.
போக்குவரத்து சீராகி, வேன் நகர்ந்தது.
'இறைவா... நல்ல சிகிச்சை கிடைக்க வேண்டும்'
மனதுக்குள் பிரார்த்தனை செய்தாள் தியா.
பள்ளியில் வகுப்பு முடிந்து, வீட்டிற்கு திரும்பிய போது, அம்மாவின் முகம், உற்சாகம் இன்றி இருப்பதை கவனித்தாள் தியா.
''என்னம்மா ஒரு மாதிரி இருக்குற...''
பதில் சொல்ல தயங்கினாள் அம்மா.
''என்னாச்சும்மா...''
''ஒண்ணும் இல்ல தியா...''
''சொல்லும்மா... ஏன் இப்படி இருக்குற...''
''அப்பா வந்து சொல்வாரு...''
அம்மாவின் பதில், மனதுக்குள் பதற்றத்தை வரவழைத்தது.
''ஏதாவது பிரச்னையா...''
''இல்ல... அப்பா வந்ததும் பேசுவோம்...''
''உன் முகமே சரியில்ல... அப்பா வரும் வரை எப்படி பொறுமையா இருக்க முடியும். நடந்தது எதுவானாலும், பரவாயில்லை; ஏற்றுக் கொள்வேன்...''
சிறிய மவுனத்திற்கும், பெரிய தயக்கத்திற்கும் பின், வாய் திறந்தாள் அம்மா.
''அப்பாவுக்கு... அப்பாவுக்கு...'' ஆரம்பித்த அம்மா, அடுத்து கூறிய வார்த்தைகள், தியாவுக்கு அதிர்ச்சியை தந்தன.
- தொடரும்...
- ஜே.டி.ஆர்.
