PUBLISHED ON : செப் 28, 2012

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!அணுகுண்டு விழுந்தது!
இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் வெற்றி இலக்கை நோக்கி வேகமாய் முன்னேறிக்கொண்டு இருந்ததை அமெரிக்காவால், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது ஜப்பானின் வேகத்தை முடக்க வேண்டும் என்று நினைத்து, அமெரிக்கா அவசரமாக அணுகுண்டை கையில் எடுத்தது. அந்தக் காலகட்டத்தில் (1945) அமெரிக்காவிடம் மட்டுமே அணுகுண்டு இருந்தது.
அமெரிக்கா அணுகுண்டை முதலில் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் தான் போட நினைத்தது. ஆனால், அமெரிக்க தளபதிகள் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்பட்ட நகரம், 'ஹிரோஷிமா'
'ஹிரோஷிமா' தேர்ந்தெடுக்கப் பட்டதற்குக் காரணம் அது ஒரு துறைமுக நகரம். ஜப்பானின் போர்க் கப்பல்கள் அங்கிருந்துதான் புறப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டன. ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவாக இருந்தாலும், ஹிரோஷிமாவில்தான் மக்கள் தொகை அதிகம். உயிர் சேதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக, ஹிரோஷிமா தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், போர் நடவடிக்கைகளைத் தொடங்கவும், அதைப் பற்றி ஆலோசனை செய்யவும், 'ஹிரோஷிமா' ஒரு முக்கிய ராணுவ கேந்திரமாய் இருந்தது.
1945 ஆகஸ்டு 6ம் தேதி காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெர்ரி-பீ என்ற அமெரிக்க ராணுவத் தளபதி, விமானத்தில் அணு குண்டை எடுத்துப் போய் 30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து வீச, அது 40 விநாடிகளில் கீழே விழுந்து, சத்தம் இல்லாமல் வெடித்தது. வெளிப்பட்ட வெப்பம் 4 ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு. இந்த வெப்பத்தில் இரண்டு லட்சம் பேர் வெந்து செத்தனர். இரண்டு கிலோ மீட்டர் சதுர பரப்பளவுக்கு சாம்பல் பறந்தது.வெடிப்பும், கறுப்பும்!
உப்புத் தூளை நெய்யில் கலந்து உதட்டில் தேய்த்தால், உதட்டு வெடிப்பு சரியாகி விடும். மூக்கின் அருகில் கறுப்பு நிறம் இருந்தால், மோரில் பஞ்சை நனைத்து, அதன் மீது தேய்த்து, குளிர்ந்த நீரால் கழுவினால் கறுப்பு நிறம் மறைந்துவிடும்.ஹையோ ஹையோ! புகை எழுப்பும் கார்!
தீவிரவாதிகளால் உயிருக்கு ஆபத்து என்று கருதப்படுகிற தலைவர்களுக்காக குண்டுகள் துளைக்க முடியாத கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கார்களின் கண்ணாடிகள் 'கேவ்லார்' எனப்படும் ரசாயனப் பொருள் கலந்து கனமாக செய்யப்படுகின்றன. இந்தக் கண்ணாடியில் தோட்டாக்கள் பாய்ந்தால், தோட்டாக்கள் கண்ணாடியின் மேல்பட்டு, வேகம் குறைந்து வழுக்கிக் கொண்டு போய் வீரியம் தணிந்து கீழே விழுந்துவிடும். இந்தக் கண்ணாடியைத் தவிர காரில் பயணிகள் உட்காரும் இடத்தைச் சுற்றிலும் 10 மில்லி மீட்டர் கனத்துக்கு இரும்புத் தகடுகளைப் பொருத்தி இருப்பர்.
இந்த இரும்புத் தகடுகளும் துப்பாக்கித் தோட்டாக்களை உள்ளே அனுப்பாது. ஒரு குறிப்பிட்ட ஓட்டுனரைத் தவிர அந்நிய நபர்கள் யாராவது காரை ஓட்ட முயன்றால், காருக்குள் பொருத்தியிருக்கும், 'கம்ப்யூட்டர்' அபாய ஒலி எழுப்பி, ஆர்பாட்டம் செய்துவிடும். அதேபோல் யாராவது காரை பின்தொடர்ந்து வந்தால், காரை மறைக்கும் விதத்தில் மென்மையான புகை மண்டலத்தை எழுப்பி எதிரிகளைக் குழப்பிவிடும். குண்டு துளைக்காத கார்களைத் தயாரிப்பதில் இத்தாலி நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆண்டுக்கு 2,500 கார்கள் வரை தயாரிக்கிறது. குண்டு துளைக்காத காரின் எடை, சாதாரண காரின் எடையை விட 500 கிலோ அதிகம். அதேபோல் விலையும் நான்கு மடங்கு அதிகம்.ஒரு புத்தகம் எத்தனை நாட்டினர்!
ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால், அதில் சீனர்கள், கிரேக்கர்கள், இத்தாலியர்கள், ஜெர்மானியர்கள், பிரிட்டன் காரர்கள், அமெரிக்கக்காரர்கள் ஆகியோரின் உழைப்பு இருக்கிறது. ஏனெனில், சீனர்கள் தான் காகிதத்தைக் கண்டு பிடித்தனர். கிரேக்கர்கள் எழுத்தைத் தோற்றுவித்தவர்கள்; இத்தாலியர்கள்தான் எழுத்துக்களைப் புத்தக உருவில் தயாரித்தவர்கள்; ஜெர்மானியர்கள் தான் அச்சிடும் முறையைக் கண்டறிந்தவர்கள்; பிரிட்டனும், அமெரிக்காவும்தான் புத்தகம் அச்சிடும் கலையை கற்று தந்தவர்கள்.தோற்றவனுக்கு டபுள் பரிசு!
கண்ணதாசன், தன் 14 பிள்ளைகளையும் ஒரே ஸ்கூலில் தான் படிக்க வைத்தார். பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் தருவார். 1960ல் 100 ரூபாய் என்பது பெரிய விஷயம். ஒரு பிள்ளை ஒரு வருடம் பெயிலாகி விட்டான். அந்த வருடம் எல்லாருக்கும் 100 ரூபாய் கொடுத்தார். பெயிலானவனுக்கு 200 ரூபாய் கொடுத்தார். மற்றவர்கள் எல்லாரும், 'எப்படி அது சரியாகும்?' என்று கேட்டனர்.
சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும், அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சோகமான மனநிலையில் இருப்பவர்களைத் தேற்றுவது கடினம். மேலும், அவர்களைக் காயப்படுத்தாமலாவது இருக்கலாம்' என்றார்.
என்ன கணக்கிட்டு அப்படிச் செய்தாரோ, தெரியவில்லை. ஆனால், அவரது கணக்கு சரியாக இருந்தது. பெயிலாகி 200 ரூபாய் பெற்ற அந்த பிள்ளை இன்று டாக்டராக இருக்கிறார்.பாம்புக்கு பயப்படாத பன்றி!
பாம்புகள், விஷப் பற்களை உட்பக்கம் வாயில், மடக்கி வைத்திருக்கும். கடிக்கும் போது, அவைகளை வெளிப்பக்கம் நீட்டி, எதிரியின் உடம்பில் குத்தும். பற்கள் உடலில் நுழைந்தவுடனே விஷ சுரப்பிகள் சுரக்கும். அப்போது விஷம், நாளத்தின் வழியாக பற்களின் துவாரத்திலிருந்து, எதிரியின் பக்கம் பாய்ந்து விடும். இஞ்ஜெக்ஷன் கொடுக்கும் ஊசியில் உள்ள துவாரம் போலவே, ஒவ்வொரு பற்களிலும் விஷம் வெளியேறுவதற்கு துவாரம் உண்டு.
பாம்பின் விஷம், ரத்தத்தில் கலந்தால்தான், உயிருக்கு ஆபத்து. பன்றியை பாம்பு கடித்தால், விஷம் உடனே அதன் ரத்தத்தில் கலப்பதில்லை. ஏனெனில், பன்றிக்கு உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும். கொழுப்பில், அந்த விஷம் தங்கி, சக்தியில்லாமல் போய் விடும். இக்காரணத்தால் தான் பன்றிகள், பாம்புக் கடியினால் இறப்பதில்லை.
இதுதான் மேட்டரா?
என்றென்றும் அன்புடன்,
அங்குராசு
