PUBLISHED ON : மே 24, 2013

வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
கலாம் காலம்!
அப்துல் கலாம் கூறியது:
''வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் தெரியுமா?
அறிவுபூர்வமான சமுதாயம் அமைய வேண்டுமென்றால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் உயர் கல்வி கற்றவராக, சர்வதேச கல்வி தரமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தற்போது உள்ள கல்வி அறிவு விகிதம் 100 சதவீதமாக உயர வேண்டும். இப்போது உள்ள வேலைவாய்ப் பின்மை 13 சதவீதம் பூஜ்ஜியமாக குறைக்கப் பட வேண்டும். தமிழகத்தின் தனிநபர் வருமானம் 25 ஆயிரத்து 900 ரூபாயிலிருந்து ஒரு லட்சமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள வறுமைக்கோட்டு சதவீதம் குறைக்கப்பட்டு வறுமைக் கோட்டுக்கு கீழே யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்கப்பட வேண்டும்.
தொழுநோய், எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய நோய்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் 3 பேஸ் மின்சார இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
100 சதவீத சுகாதாரம், 100 சதவீத பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகியவை செய்து தரப்பட வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனுக்கும் நியாயமான, விரைவான நீதி அளிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் எப்படிப்பட்ட மோசமான வெள்ளம், வறட்சி ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் மாநிலம் மேம்பட வேண்டும். மாநிலம் முழுவதும் உள்நாட்டு நீர் வழிபோக்குவரத்து அமைய வேண்டும்.
சில வரிகளில் வித்தியாசம்!
*தோசைக்கு ஊற வைக்கும் போது ஒரு கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து கொள்ளுங்கள். இதை மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
*ஒரு டம்ளர் ரவைக்கு ஒரு கைப்பிடி அளவு குழைய வைத்து வெந்த பாசிப்பருப்பை கலந்து கேசரி செய்தால் ஸ்வீட் ரவா பொங்கல் போல வித்தியாசமான கேசரி கிடைக்கும்.
*எந்த வகையான கிரேவி, மசாலா போன்றவை செய்யும் போதும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை தோல் நீக்கி நைசாக அரைத்து சேர்த்தால், கிரேவி சுவையாக இருக்கும்.
*புளிப்பு மோர் அதிகம் மீந்து விட்டால் சுவாமி பித்தளை விளக்குகளை அதில் ஊறப்போட்டு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து விடுங்கள். விளக்குகளில் உள்ள களிம்புகள் நீங்கி பளிச்சென்று இருக்கும். பிறகு சீயக்காய் பொடியால் தேய்த்து சுத்தம் செய்யவும்.
*வெந்து குழைந்துவிட்ட உருளை கிழங்கை ப்ரீசரில் வைத்து, ஒரு மணி நேரத்தில் எடுத்து கத்தியால் கட் செய்து ரோஸ்ட் செய்யவும்.
* சமோசாவுக்கு மாவு பிசையும்போது மைதாமாவை சலித்து ஒரு மெல்லிய துணியில் கட்டி, இட்லி தட்டின் மேல் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை ஆவி பிடித்து, பிறகு உப்பு, சீரகம் டால்டா போட்டு பிசைந்து செய்தால் மொறு மொறுப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
நட்ஸும் நல்லதுப்பா!
'நட்ஸ்' என்றாலே கொழுப்பு பொருள். நம் உடம்புக்கு இது நல்லதா?
'நான்-வெஜ் பிரியர்களுக்கு அவர்களின் உணவில் இருந்தே தேவையான கொழுப்பு சத்து கிடைத்துவிடுவதால், அவர்கள் நட்ஸ் சாப்பிட்டே ஆக வேண்டிய அவசியமில்லை.
ஆனால், 'வெஜ்-பிரியர்'கள் நட்ஸ் சாப்பிடுவது அவசியமானதே என்கின்றனர் டயட்டீஷியன் நபர்கள்.
பாதாம்: இதில் இருப்பது நல்ல கொழுப்பு அதனால் சிறியவர்களிலிருந்து, பெரியவர்கள் வரை தினமும் நான்கு பாதாம் வரை (தோலுடன்) தாராளமாக சாப்பிடலாம்.
இது கொழுப்புச்சத்து இருப்பவர்களுக்கும் பொருந்தும். 'டயட்டில் இருப்பவர்கள் வறுத்த, பொரித்த உணவு பொருட்களை சுத்தமாக நிறுத்திவிட்டு, தினமும் எட்டு பாதாம் சாப்பிட்டால் ஒன்றரை மாதத்தில் 2 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும்.
அதேபோல பெண்களுக்கு ஏற்படும் பிரத்யேக வலியையும் பாதாம் குறைக்கும்.
வால்நட்டிலும் நல்ல கொழுப்பு இருப்பதால் தினமும் 2 சாப்பிடலாம்.
அதேபோல, வாரத்திற்கு 20 கிராம் வேர்க்கடலை சாப்பிடலாம். கவனம்... பிஸ்தாவும், முந்திரியும் கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும். ஆலிவிதை, பூசணி, விதை, வெள்ளரி விதை போன்றவைகளில் நல்ல கொழுப்பு இருப்பதால் இதையும் சாப்பிடலாம்.
அம்மா! ப்ளீஸ் செஞ்சுதாங்கம்மா!
இது, 'பேபிகார்ன் சாப்ஸ்' செய்முறை நேரம்.
தேவையானவை: பேபிகார்ன்-250 கிராம், அரிசி மாவு, பொட்டு கடலை மாவு, சோள மாவு மூன்றும் சேர்ந்து ஒரு கப், இஞ்சி, பூண்டு விழுது-1 டீஸ்பூன், மிளகு-10, மிளகாய்த்தூள்-1 ஸ்பூன், மஞ்சள் தூள்- கால் ஸ்பூன், உப்பு-அரை டீஸ்பூன், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, சோடா உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய்-50 கிராம்.
அலங்கரிக்க: கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, மாதுளை முத்துக்கள்-கால் கப்.
செய்முறை: முதலில் பேபிகார்னை சிறுசிறு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பிறகு அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, சோளமாவு மூன்றையும் நன்கு கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். உப்பு, மஞ்சள் தூள், சிறிது எண்ணெய், மிளகாய்த்தூள், மிளகுதூள், இஞ்சி, பூண்டு விழுது, கேசரி கலர், சோடா உப்பு... எல்லாவற்றையும் மிகச் சிறிய அளவு தண்ணீர் தெளித்து பிசிறி, பேபிகார்ன் சேர்த்து ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை போட்டு, பின் ஊறிய பேபிகார்னை போட்டு, குறைந்த தீயில் மூடி போட்டு வதக்கவும்.
நன்கு வெந்து எண்ணெய் பிரிகையில் இறக்கி விடவும். நறுக்கிய கொத்தமல்லி தழை, மாதுளை முத்துக்கள் கலந்து பரிமாறவும். புளிப்பும், காரமும் இனிப்புமாக வெகுசுவையாக இருக்கும்.
பேபிகார்ன் சாப்ஸில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்தால் நன்றாக இருக்கும். சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லாருக்குமே இது ஆரோக்கியமானது.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
