தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அழகி சுறா! (1)

அழகி சுறா! (1)

அழகி சுறா! (1)


PUBLISHED ON : மே 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெகு காலத்திற்கு முன் பெருங்கடல் ஒன்றை ஆட்சி செய்தான் ஒரு அரசன். அவன் பேராற்றல் வாய்ந்தவனாக விளங்கினான்.

அவனுக்கு சுறா என்ற மகள் இருந்தாள். பேரழகியாகவும், நற்பண்புகள் நிறைந்தவளாகவும் அவள் விளங்கினாள்.

அரசவைக்கு வந்த தன் மகளிடம், ''உனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறேன். உனக்கு யாரைப் பிடிக்கிறது சொல். திருமணம் செய்து வைக்கிறேன்,'' என்றான்.

தலை கவிழ்ந்த அவள், ''தந்தையே! வீரமும், நேர்மையும் உடைய ஒரு மனிதனையே மணக்க விரும்புகிறேன்,'' என்றாள்.

அவையில் இருந்தவர்களைப் பார்த்தான் அரசன்.

படைத் தலைவர் நண்டார் எழுந்து, ''இளவரசி நல்லதையே நினைக்கிறார். பவழத் தீவில் உள்ள இனியன் நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவன்; அழகன்; இளவரசிக்குப் பொருத்தம் ஆனவன்,'' என்றார்.

குறுக்கிட்ட அமைச்சர் ''அரசே! அவன் வீரமும், நேர்மையும் உள்ளவனா? என்று சோதித்துப் பார்ப்போம். வெற்றி பெற்றால் இளவரசிக்கு திருமணம் செய்து வைப்போம்,'' என்றார்.

அரசனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

அங்கே குடிசை ஒன்றில் இனியனும், அவன் அண்ணன் வாழியனும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

இனியனின் கனவில் முதியவர் ஒருவர் தோன்றினார்.

''நீ கிழக்குத் திசையில் செல். அங்கே ஆற்றங்கரையில் அழகான பெண் ஒருத்தி இருப்பாள். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்... நல்லதே நடக்கும்,'' என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

விழித்த அவன் தன் அண்ணனை எழுப்பி னான். தான் கண்ட கனவைச் சொன்னான்.

'தம்பிக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பா? எப்படியாவது அவனை ஏமாற்ற வேண்டும். அந்த அழகியைத் தானே மணக்க வேண்டும்' என்று நினைத்தான் வாழியன்.

சூழ்ச்சி நிறைந்த அவன், ''தம்பி! கனவு தானே கண்டாய். அதை உண்மை என்று நம்பலாமா? போய்ப் படுத்துத் தூங்கு,'' என்றான்.

இனியனும் தூங்கத் தொடங்கினான்.

படுக்கையில் இருந்து மெல்ல எழுந்தான் வாழியன். கிழக்குத் திசையில் வேகமாக நடக்கத் தொடங்கினான்.

ˆபடிழுது விடிந்தது. விழித்த இனியன் அண்ணனைத் தேடினான். இந்த விடிகாலை நேரத்தில் அவர் எங்கே சென்றிருப்பார் என்று குழம்பினான். கனவு உண்மையா என்று அறிவதற்காக ஆற்றங்கரையை நோக்கி நடந்தான்.

இரவு நேரத்தில் அந்த ஆற்றங்கரையை அடைந்தான்.

பேரழகியான பெண் ஒருத்தி அங்கே நின்றிருந்தாள். அவள் கூந்தல் ஆற்று நீரில் படிந்திருந்தது. அவள் அழகில் மயங்கினான். தன் அண்ணனும் அங்கே இருப்பதை அப்போதுதான் கவனித்தான்.

இருவரும் ஒரே குரலில், ''அழகியே! என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா?'' என்று கேட்டனர்.

குரல் கேட்டுத் தலை நிமிர்ந்த அவள் அவர்கள் இருவரையும் பார்த்தாள்.

'உங்களில் வீரமும், நேர்மையும் உடையவர் யார்? சொல்லுங்கள். அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்று இனிய குரலில் பேசினாள்.

''வீரமும், நேர்மையும் உடையவன் நான்தான்,'' என்று இருவருமே சொன்னனர்.

''அப்படியானால், உங்களுக்கு ஒரு சோதனை வைக்கிறேன். கடல் அரசனிடம் ஒளி வீசும் பெரிய முத்து ஒன்று உள்ளது. வீரமும் நேர்மையும் உடையவருக்கே அது கிடைக்கும். அந்த முத்தை யார் கொண்டு வருகிறீரோ... அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன்,'' என்றாள் அழகி.

''அழகியே! கடல் அரசன் இருக்கும் இடத்திற்கு எப்படிச் செல்வது? கடலில் இறங்கினால் நாங்கள் மூழ்கி விடுவோமே,'' என்றான் இனியன்.

அவர்கள் இருவரிடமும் ஒவ்வொரு துடுப்பைக் கொடுத்தாள் அவள்.

''இந்தத் துடுப்பு கடல் தண்ணீரை விலக்கி விடும். எந்தத் துன்பமும் இல்லாமல் நீங்கள் கடல் அரசனிடம் செல்லலாம்,'' என்றாள்.

துடுப்பைப் பெற்றுக் கொண்ட இருவரும் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டனர்.

நீண்ட தொலைவில் கடல் இருந்தது. அவர்கள் இருவரும் பல நாட்கள் பயணம் செய்தனர்.

அவர்கள் எதிரில் குதிரையில் ஒருவன் வந்தான்.

அவனை வணங்கிய வாழியன், ''ஐயா! நான் அவசர வேலையாகச் செல்கிறேன். உங்கள் குதிரையை இரவல் தாருங்கள். வேலை முடிந்ததும் குதிரையைத் திருப்பித் தந்து விடுகிறேன்,'' என்று கெஞ்சினான்.

''உங்களைப் பார்த்தால் நல்லவராகத் தெரிகிறது,'' என்று குதிரையைத் தந்தான் அவன்.

குதிரையில் அமர்ந்தான் வாழியன். தன்னுடன் வரும் தம்பியை அவன் பொருட்படுத்தவே இல்லை. குதிரையை வேகமாக விரட்டினான்.

அண்ணன் இப்படி நடந்து கொள்கிறானே... என்று இனியன் கவலைப்படவில்லை. இனிமையாகப் பாட்டுப் பாடிக் கொண்டே நடந்தான்.

வாழியன் ஓர் ஊரை அடைந்தான். அங்கே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளத் தால் அந்த ஊரே சூழப்பட்டு இருந்தது. அங்கே ஆண்களும், பெண்களும் வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்களில் ஒருவன், ''பத்து நாட்களாக மழை பெய்கிறது. முதியவர்களையும், குழந்தைகளையும் மலையின் மேல் தங்க வைத்துள்ளோம். வெள்ள நீர் வடியும் அறிகுறியே இல்லையே... என்ன செய்வது?'' என்று புலம்பினான்.

அதற்கு இன்னொருவன், ''யாராவது ஒருவர் கடல் அரசனிடமிருந்து தங்கக் குடத்தை வாங்கி வர வேண்டும். அந்தக் குடத்தில் தண்ணீரை வெளியேற்றினால் வெள்ளம் வடிந்து விடும். மூன்று நாட்களுக் குள் அந்தக் குடம் வராவிட்டால் எந்தப் பயனும் இல்லை,'' என்றான்.

அவர்கள் பேசியதைக் கேட்டான் வாழியன்.

'வழியில் உண்பதற்கு உணவு இல்லையே, என்ன செய்வது என்று குழம்பினேன். நல்ல வழி கிடைத்தது' என்று மகிழ்ந்தான்.

அவர்களைப் பார்த்து, ''நான் கடல் அரசனிடம்தான் செல்கிறேன். உங்களுக்காக தங்கக் குடத்தை வாங்கி வருகிறேன்,'' என்றான்.

''ஐயா! எப்படியாவது தங்கக் குடத்துடன் வாருங்கள், அப்போதுதான் நாங்கள் உயிர் பிழைக்க முடியும்,'' என்றனர்.

தேவையான உணவுப் பொருள்களை அவர்களிடம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

சிறிது நேரத்தில் இனியன் அங்கு வந்தான். வெள்ளத்தில் அவர்கள் துன்பப் படுவதைப் பார்த்து வருந்தினான். அவர்களுடன் சேர்ந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டான். வெள்ள நீரின் அளவு உயர்ந்ததே தவிர குறையவில்லை.

''நாம் என்ன முயன்றாலும் வெள்ள நீரை வடிக்க முடியாது போல உள்ளதே. தண்ணீரின் மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறதே. தண்ணீரை வெளியேற்ற வேறு ஏதேனும் வழி உள்ளதா?'' என்று கேட்டான் இனியன்.

அவர்களில் ஒருவன், ''ஐயா! உங்களைப் போன்றே ஒருவர் இங்கு வந்தார். கடல் அரசனிடம் தங்கக் குடம் வாங்கி வருவதாகச் சொன்னார். அந்தக் குடம் வந்தால் போதும், வெள்ளம் உடனே வடிந்து விடும்,'' என்றான்.

தன் அண்ணன்தான் அப்படிச் சொல்லிச் சென்றிருக்கிறான் என்பது இனியனுக்குப் புரிந்தது.

''நானும் கடல் அரசனிடம்தான் செல்கிறேன். தங்க குடத்தை வாங்க முயற்சி செய்கிறேன்,'' என்றான்.

'ஐயா! எங்கள் துன்பத்தைப் போக்க எங்களுடன் உழைத்தீர்கள். இந்தப் படகில் அமருங்கள். உங்களைக் கடல் அருகே சேர்க்கிறோம்,'' என்றனர் அவர்கள்.

''உங்களுக்கு இங்கே வேலை உள்ளது. நானே செல்கிறேன்,'' என்ற அவன் அங்கிருந்து வேகமாக நடந்தான்.

நீண்ட நேரத்திற்குப் பின் அவன் கடற் கரையை அடைந்தான். அங்கே கையில் துடுப்புடன் வாழியனும் காத்திருந்தான்.

அவர்கள் எதிரில் போர்க்களம் போலக் காட்சி அளித்தது கடல். ஒவ்வொரு அலையும் பனை மர உயரத்திற்கு எழுந்தது. ஓவென்ற பேரிரைச்சல் எங்கும் கேட்டது. 'யார் வந்தாலும் விழுங்கி விடுவேன்' என்று அச்சுறுத்துவது போல இருந்தது கடல்.

அஞ்சி நடுங்கிய வாழியன், ''தம்பி! நீ முதலில் குதி,'' என்றான்.

கையில் துடுப்பைப் பிடித்தபடி கடலில் குதித்தான் இனியன்.

-1 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us