தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/வயலின் வனிதா! (13)

வயலின் வனிதா! (13)

வயலின் வனிதா! (13)


PUBLISHED ON : மே 24, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 24, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: இசைக்கருவிகள் விற்கும் கடையில வேலைக்குச் சேர்ந்தாள் வனிதா. இனி-

வனிதா அவரை திருப்திப்படுத்துவதற்காக அப்படிச் சொல்லவில்லை. உண்மையிலேயே கடந்த இரண்டு நாட்களாக, அவர் கடையில், தான் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி இசைக்கருவிகளைப் பார்வையாக அடுக்க வேண்டும் என்பதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவள்தான் அவள். ஆகவே, வேகமாகக் காரியத்தில் இறங்கினாள். தாறுமாறாக இறைந்து கிடந்த அட்டைப் பெட்டிகள் மற்றும் 'பேக்கிங்' பேப்பர்களை சேமித்து குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் வைத்தாள். இசைக் கருவிகளை தூசி தட்டினாள்; துடைத்தாள். இசைக்கருவிகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்ளுவது போல அவற்றைப் பார்வையான கோணத்தில் அருகருகே நிமிர்த்தி வைத்தாள். இசைத் தட்டுகளைத் தரம் பிரித்துப் பட்டியலிட்டு ஒழுங்குபடுத்தினாள். வாய்ப்பாட்டு, வாத்திய இசை என்று அவற்றை இரண்டாகப் பிரித்தாள். மேல் நாட்டு இசை, கர்நாடக இசை என்றும் தனிமைப்படுத்தினாள்.

இசைக்கருவிகளைக் கையாளுவது அவளுக்கு இன்பமாக இருந்தது. களைப்பே தெரியவில்லை. அத்தனை நேரமும் அவள் நினைவு அவளுடைய வயலின் பெட்டி மீதே இருந்தது. முக்கியமான மாற்றங்களை, துப்புறவுகளைச் செய்த பின் ஆசையோடு தன் வயலினை எடுத்துக் கொண்டு கடையின் கோடியில் உள்ள சிறு அறைக்குப் போனாள். அதை பரசுராம் பூஜை அறையாக வைத்திருந்தார். தனிமையில் உணவருந்த, சற்றே ஓய்வு எடுத்து கொள்ளவும், அந்த அறையைப் பயன்படுத்துவார். வியாபார சம்பந்தமான கடிதப் போக்குவரத்து பைல்களும் அங்கிருந்தன.

அந்தத் தனி அறையில் தன் வயலினோடு போய் அமர்ந்து கொண்ட வனிதா, அதை அணைத்துக் கொண்டாள். அதை பிரிந்து எத்தனை நாளாயிற்று! அவள் கண்களில் நீர் திரண்டது. உணர்ச்சி நெஞ்சை அடைத்தது. சட்டென்று ஒரு நிதானத்துக்கு வந்தவளாக வயலினை தோளில் அழுத்திக்கொண்டு சுருதி சேர்த்து அதை மீட்டலானாள். அடுத்த சில நிமிடங்களில் அவள் தன்னை மறந்தாள்; கடையை மறந்தாள்; பரசுராமன் அவள் நினைவிலில்லை. அவள் தந்தை விசுவநாதன் தான் கண்களுக்கு தெரிந்தார். அவள் கை வயலின் தந்திகளில் மீது விளையாடிக் கொண்டிருந்தது.

இனிய வயலின் இசை பரசுராமின் கவனத்தைக் கவர்ந்தது. தன் கை வேலையை விட்டு, கவனமுடன் கேட்டார். அந்தப் பெண் ஏதோ இசைத் தட்டை போட்டுக் கேட்பதாகத் தான் முதலில் நினைத்தார். கடையில் செய்திருந்த ஒழுங்கைக் கண்டு திருப்திப் பட்டவரின் மதிப்பில் அவள் உயர்ந்தாள். அந்த வயலின் இசை அவருக்கு வித்தியாசமாக இருந்தது. அது ரிகார்டு இசையல்ல... தன் இருக்கையிலிருந்து எழுந்தவர் தனது தனிமை அறைக்கு, பூஜை அறைக்குப் போனார். அங்கு அவர் கண்ட காட்சி அவர் விழிகளை விரிய வைத்தது. சங்கீத மும்மூர்த்திகளின் படத்தின் முன்னே நின்றபடி, வனிதா வயலின் இசைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அந்த சிறுமியிடம் அவருக்கு ஒரு பற்றுதல், பாசம் ஏற்பட்டது. அவளது லயிப்பைக் கலைக்காமல், வாசல் படியிலேயே நின்று அவள் வாசிப்பை ரசித்தார். இந்தச் சின்ன வயதில் இத்தனை இனிமையாக வயலின் வாசிக்கிறாளே... என்று வியந்தார்.

வாசிப்பை முடித்துவிட்டு கண் திறந்த வனிதா, எதிரே பரசுராமன் நிற்பதைக் கண்டு, குற்ற மனப்பான்மையுடன் குறுகிப் போனாள்.

''நான்... வேலை செய்யாமல்... வயலின் வாசித்ததைத் தவறாக நினைக்காதீர்கள் சார்... வந்து..'' தடுமாறும் அவளை, கனிவோடு பார்த்தார் பரசுராமன்.

''இங்குள்ள இசைக் கருவிகளெல்லாம் வெறும் அலங்காரத்துக்கு இல்லை வனிதா. கலைஞர்கள் கையாளுவதற்காகத்தான். நீ வீட்டுக்குப் போக நேரமாகி விட்டதே... என்று பார்க்க வந்தேன். ரொம்ப நன்றாக வயலின் வாசிக்கிறாயே? யார் கற்றுக் கொடுத்தார்கள்?'' என்று கேட்டு அன்போடு அவள் தோள்களைப் பற்றினார்.

''என் அப்பா. அவர் பிரபலமான வயலின் வித்வான். என் அப்பாவைப் போல நானும் ஒரு நாள் புகழ்பெற வேணும்னு ஆசை எனக்கு!'' என்றாள் வனிதா.

அழுகை வெளிப்படக்கூடாதே என்று சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

''உன் ஆசை நிறைவெறும் வனிதா. நீ நன்றாக வாசிக்கிறாய். இசையில் ஈடுபாடு இருக்கு. இருட்டப் போகிறது... நீ வீட்டுக்குப் போகலாம்,'' என்று கூறியபடி ஐம்பது ரூபாயை எடுத்து, அவளிடம் நீட்டினார்.

''உன் சம்பளம்! ஒவ்வொரு சனிக்கிழமையும் உன் வேலை முடிந்ததும் சம்பளம் வாங்கிக் கொள், என்ன?'' என்று அவள் தோளில் தட்டிக்கொடுத்தார்.

''அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்!'' என்று விடைகொடுத்தார்.

''தேங்க்யூ சார்!'' என்று மகிழ்ச்சி மலர வைத்த விழிகளோடு விடை பெற்றாள் வனிதா. தான் வாசித்தது தன்னுடைய வயலின் என்பதை அவள் அவரிடம் கூறவில்லை. அதை மீட்க எத்தனை சனிக்கிழமை ஆகும் என்பதைக் கணக்குப் போட்டபடி நடந்தாள்.

''இசை நிகழ்ச்சிக்குள் அதை மீட்க முடியாதே<,'' என்று ஏக்கம் வந்தபோது ஒரு நம்பிக்கையும் முளைவிட்டது.

''பரசுராமன் நல்லவராக இருக்கிறார். அன்பு காட்டுகிறார். இசை விழா பற்றிக் கூறி அவரிடம் வயலினை ஒருநாள் இரவல் கேட்கலாம். மறுக்க மாட்டார்!'' என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொண்டபடி நடந்தாள். தன் வயலினை மீட்க ஒரு வழி கிடைத்ததில் மகிழ்ச்சியாகவும் இதமாகவுமிருந்தது.

அடுத்த வாரத்தில் ஒருநாள், வனிதா பள்ளிக்குப் போகும் வழியில் தன் தோழி சுமதியைச் சந்தித்தாள். மறுநாள் மாலையில் நடக்க இருக்கும் இசை விழாவிற்கு பயிற்சி பற்றிக் குறிப்பிட்ட சுமதி, ''வயலினை உன் அத்தை கொடுத்து விட்டாளா?'' என்று கேட்டாள்.

''இல்லை... அத்தை அதைக் கடையில் விற்றுவிட்டாள்!'' என்று கூறும்போது வனிதாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

''ஆனால், நான் அதை மீட்டு விடுவேன்!'' என்றாள் நம்பிக்கையோடு.

''அப்போ நாளைக்கு நீ பயிற்சியில் கலந்து கொள்ள முடியாதே!''

''முடியாதுதான். ஆனால், நான் எப்படியும் இசை விழாவில் கலந்து கொள்ளுவேன்!'' என்றாள்.

அதெப்படி என்று கேட்க நினைத்த சுமதி, வனிதாவின் கண்களில் நீர் திரளுவதைக் கண்டு மவுனமானாள்.

மறுநாள் மாலை மாணவிகள் பயிற்சிக்காக கூடியிருந்தனர். இசைப் பயிற்சியாளர், விழாவில் பாடவேண்டிய பாடல்களுக்குப் பயிற்சியளிக்கலானார். சங்கர்லால் வரவில்லை. புகழ்பெற்ற இசையமைப்பாளரான அவர் பயற்சிக்கெல்லாம் வருவாரா? தன் உதவியாளரையே அனுப்பி இருந்தார். தான் பயிற்சியில் கலந்து கொள்ள இயலாமையை எப்படிச் சொல்வது என்று பயந்து கொண்டிருந்த வனிதாவுக்கு சங்கர்லால் வராதது நிம்மதியளித்தது. திரை மறைவில் நின்றபடி பயிற்சியை கவனித்தாள்.

'இசைவிழாவில் மறக்காமல் இதன்படி தான் நடந்துகொள்ள வேண்டும்' என்று அதையெல்லாம் மனதில் குறித்துக் கொண்டாள்.

அன்று சனிக்கிழமை பரசுராமின் கடைக்குப் போனாள் வனிதா.

''வனிதா... வா... வா!'' என்று முகம் மலர வரவேற்றார் பரசுராமன்.

''கிதார், கிளாரினட் இன்னும் சில மேல் நாட்டு இசை கருவிகளெல்லாம் வந்திருக்கு. அவற்றையெல்லாம் ஷோகேசில் பார்வையாக வைக்க வேண்டும். இன்று நீ வருவாய் என்று நான் அதைச் செய்யவில்லை. அதைக் கவனி!'' என்று ஒரு பெரிய பார்சலைக் காட்டினார்.

''ஆகட்டும் சார்!'' என்று கூறியபடி மகிழ்ச்சியோடு பார்சலைப் பிரிக்கலானாள் வனிதா. அப்போது கடைக்கு வெளியே பெண்களின் கேலிச் சிரிப்பும், பேச்சும் கேட்கவே, கண்ணாடி தடுப்புச் சுவர் வழியே வெளியே பார்த்தாள் வனிதா.

லீலாவும், அவள் தோழிகளும் இருந்தனர். ஒரு வினாடி வனிதாவின் மூச்சே நின்று விட்டது. பயத்தினால் குப்பென்று வியர்த்தது. முகம் வெளுத்தது. வாய் உலர்ந்தது. குதி போட்டுக் கொண்டு கடையினுள் நுழைந்தாள் லீலா.

வனிதா வெல வெலத்துப் போனாள். லீலா அங்கு வருவாள் என்பதை அவள் எதிர் பார்க்கவே இல்லை. மேல் நாட்டு டிஸ்கோ பாப் இசைத் தட்டுக்களையும், ஸ்டீரியோ காசட்டுகளையும் வாங்க அடிக்கடி அவள் பரசுராமின் கடைக்கு வருவாள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. ஷோகேசில் இசைக் கருவிகளைப் பார்வையான கோணங்களில் வைத்து அழகுபடுத்திக் கொண்டிருக்கும் போது லீலாவின் தோழிகளில் ஒருத்தி, வனிதாவையும் ஷோகேஸ் பொம்மையாக நினைத்து விட்டாள். பிறகு அது பொம்மையல்ல... நிஜமான பெண், அதுவும் லீலாவின் மாமா பெண் என்று அறிந்ததும் கிறீச்சிட்டாள்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us